வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் ஏன் சூடேறுவதில்லை?
பட்டாம்பூச்சிகள் வேகமாகப் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் சூடேற வேண்டும் என்று இயற்பியல் கூறுகிறது. ஆனால், பகலில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் இறகுகள் சூரிய வெப்பத்தினால் கூட சூடேறுவதில்லை என்று ஓர் ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது.
பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் குளிர்ந்திருப்பதற்கு அவற்றின் தனித்துவமான கட்டமைப்பே காரணம். இறக்கைகளில் உள்ள உயிருள்ள பகுதிகளான பூச்சிக்குருதியைக் கடத்தும் நாளங்கள் மற்றும் மணமுள்ள ஃபெரோமோன்களைக் கொண்ட பைகள் வெப்பத்தை விரைந்து வெளியேற்றுகின்றன.
இவற்றைச் சுற்றியுள்ள உயிரற்ற செதில்களை விடவும், உயிருள்ள பகுதிகளே வெப்பத்தை வெளியேற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உடல் வெப்பநிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் பட்டாம்பூச்சியின் பறக்கும் திறன் பாதிக்கப்படும்.
பட்டாம்பூச்சியின் இறகுகள் மிகவும் மெலிந்திருப்பதால், மார்புத் தசையை விட அதிக வெப்பம் இருந்தால் அவை தேவைக்கும் அதிகமாகச் சூடேறிவிடும். இறக்கைகளில் உள்ள குழல் வடிவ மீநுண்-கட்டமைப்பு, உயிருள்ள திசுக்களிலிருந்து அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது.
சில பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளில் இதயம் துடிப்பது போன்ற அமைப்பு இருப்பதையும் ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த இதயம் போன்ற அமைப்பு பூச்சிக்குருதியை ஆண் பட்டாம்பூச்சியின் வாசனைப் பைகளின் ஊடாகச் செலுத்துகிறது.
தடையின்றிப் பறப்பதற்கு இறக்கைகளின் எடை மிகவும் குறைவாக இருக்க வேண்டும். அப்படி எடை குறைந்த இறக்கைகளின் நடுவில் இதயம் போன்ற அமைப்பு அமைந்திருப்பது மிகவும் வியப்பானது. இது வாசனைப் பைகள் சிறப்பாகச் செயல்படவும் உதவுகிறது.
இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான அமைப்புகளை வைத்துள்ளான் என்பதை இந்த பட்டாம்பூச்சியின் இறகுகள் காட்டுகின்றன. இத்தகைய படைப்புகளின் மூலம் இறைவனின் ஞானத்தையும் ஆற்றலையும் நாம் உணரலாம்.
ஆதாரம்: தினமணி