வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் ஏன் சூடேறுவதில்லை?
வண்ணத்துப்பூச்சிகள் (butterflies) மிக வேகமாகப் பறக்கும்போது அவற்றின் இறக்கைகள் சூடேற வேண்டும் என்று இயற்பியல் விதிகள் கூறுகின்றன. ஆனால், பகலில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகள் சூரிய வெப்பத்தினால் கூட சூடேறுவதில்லை என்று ஒரு ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகள் குளிர்ந்திருப்பதற்கு அவற்றின் தனித்துவமான கட்டமைப்பே காரணம்.
வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள உயிருள்ள பகுதிகளான பூச்சிக்குருதியைக் (hemolymph) கடத்தும் நாளங்கள் மற்றும் ஆண் வண்ணத்துப்பூச்சிகள் வெளிப்படுத்தும் மணமுள்ள ஃபெரோமோன்களைக் (pheromones) கொண்ட பைகள் வெப்பத்தை விரைந்து கடத்திவிடுகின்றன. இவற்றைச் சுற்றியிருக்கும் உயிரற்ற செதில்களை (scales) விடவும், உயிருள்ள பகுதிகளே வெப்பத்தை வெளியேற்றுவதில் முதன்மைப் பங்காற்றுகின்றன.
உடல் வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட வண்ணத்துப்பூச்சியின் பறத்தல் திறனைப் பெரிய அளவில் பாதித்துவிடும். மார்புப்பகுதியில் உள்ள தசை ஓரளவிற்கு வெப்பமாக இருந்தால் மட்டுமே, இறகுகளை விரைவாக அசைத்துப் பறக்க முடியும். இறகுகள் மிகவும் மெலிந்திருப்பதால், மார்புத்தசையை விட வெப்பம் அதிகமாக இருந்தால் தேவைக்கும் அதிகமாகச் சூடேறிவிடும்.
வண்ணத்துப்பூச்சியின் இறகுகள் செதில்களால் நிறைந்திருப்பதால், அவை உயிரற்றவை என்று பலர் எண்ணக்கூடும். ஆனால், பறத்தலில் உயிர்ப்புடன் இருக்கவும், இறக்கைகளில் உருவாகும் வெப்பத்தை விரைந்து வெளியேற்றவும் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் உயிருள்ள திசுக்களையும் (tissues) கொண்டிருக்கின்றன.
வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகள் மிகவும் தடிமன் குறைந்தும், பகுதி ஒளி ஊடுருவலும் கொண்டிருப்பதால், அகச்சிவப்பு ஒளிப்படக் கருவிகளால் (infrared cameras) இறகுகளிலிருந்து வெளியேறும் வெப்பத்தை, சூழல் வெப்பத்திலிருந்து தனியே பிரித்துப் பார்க்க முடியவில்லை. அதனால் ஆய்வுக்குழுவினர் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அகச்சிவப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 50 வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளின் வெப்பத்தை அளந்து ஆய்வு செய்துள்ளனர்.
இறக்கைகளில் உள்ள குழல் வடிவ மீநுண்-கட்டமைப்பு (tubular nanostructure), உயிருள்ள திசுக்களிலிருந்து தேவைக்கு அதிகமாக இருக்கும் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இறக்கையின் குருதிக்குழல்கள் தடிமனான மென்பொருளால் போர்த்தப்பட்டுள்ளன. வாசனைப் பைகள் மீநுண் கட்டமைப்பையும், கூடுதல் மென்பொருளையும் கொண்டுள்ளன. தடிமனாகவும், குழல் வடிவிலும் இருக்கும் பொருள்கள், மெல்லியதாகவும், திடமாகவும் இருக்கும் பொருள்களை விடவும் கூடுதல் வெப்பத்தை விரைவாக வெளியேற்றும் பண்புக் கொண்டவை.
கட்டமைப்புகள் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளை ஒரு குறிப்பிட்ட எல்லை வரையிலுமே வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றன. செறிவு மிகுந்த ஒளியின் கூடுதல் வெப்பத்தைத் தாங்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் அவ்விடத்தைவிட்டு அகன்று சென்று விடுகின்றன. இறக்கைகளில் உள்ள செதில்கள் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி வெப்பத்தை உண்டாக்கியபோது, அதனை வண்ணத்துப்பூச்சிகள் உணரவில்லை. மாறாக, அவற்றின் குருதிக்குழல்கள் சூடாக்கப்பட்டபொழுது வண்ணத்துப்பூச்சிகள் அவற்றின் இறக்கைகளை அசைக்கின்றன அல்லது அவ்விடத்தைவிட்டு அகன்று விடுகின்றன.
வண்ணத்துப்பூச்சிகள் வெயிலில் பறக்கும்போது உண்டாகும் மிகை வெப்பம், இறக்கைகளில் உள்ள உயிருள்ள திசுக்களால் வெளியேற்றப்படுகின்றன. சில வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளில் இதயம் துடிப்பது போன்ற அமைப்பு இருப்பதையும் ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதயம் போன்ற அமைப்பு பூச்சிக்குருதியை ஆண் வண்ணத்துப்பூச்சியின் வாசனைப் பைகளின் ஊடாகச் செலுத்துகிறது. நிமிடத்திற்குச் சில தடவைகள் இறக்கைகளை அசைப்பதனால் வண்ணத்துப்பூச்சிகள் இதனைச் சாத்தியப்படுத்துகின்றன.
தடையின்றி பறப்பதற்கு இறக்கைகளின் எடை மிகவும் குறைந்ததாக இருக்க வேண்டும். அப்படி எடை குறைந்த இறக்கைகளின் நடுவில் இதயம் போன்ற அமைப்பு அமைந்திருப்பது மிகவும் வியப்பேற்படுத்துகிறது. வாசனைப் பை பாதுகாப்புடன் சிறப்பாகச் செயல்படுவதற்கும் இந்த இதய அமைப்புத் துணைசெய்கிறது.
இத்தகைய நுட்பமான அமைப்புகளையும், வியக்கத்தக்க செயல்பாடுகளையும் கொண்ட வண்ணத்துப்பூச்சிகளைப் படைத்த இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் இறைவனின் மகத்துவம் வெளிப்படுகிறது.
ஆதாரம்: தினமணி