வானம் எங்கே முடிகிறது, விண்வெளி எங்கே தொடங்குகிறது?

அறிவியல் உண்மைகள்

சூரிய ஒளி வளிமண்டலத்தில் நுழையும்போது, வாயு மூலக்கூறுகளில் மோதிச் சிதறுகிறது. நீல ஒளி அதிகமாகச் சிதறுவதால், வானம் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது.

வானம் எவ்வளவு உயரம் கொண்டது, எங்கே முடியும் என்ற கேள்வி, 1957 அக்டோபர் 4 அன்று சோவியத் ஒன்றியத்தின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் I பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு முக்கியத்துவம் பெற்றது.

பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஒரு பொருள் விடுபட்டு விண்வெளிக்குச் செல்லும் உயரம், சுமார் 600 முதல் 10,000 கி.மீ. வரை விரிந்துள்ள புற வளிமண்டலத்தின் (Exosphere) எல்லை வரை வானம் எனக் கருதலாம் என்று சிலர் கூறினர்.

வேறு சிலர், காற்றுக்கும் வெற்றிடத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை வைத்து வானம் – விண்வெளி எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்றனர். சுமார் 85-90 கி.மீ. உயரத்தில் உள்ள மீசோஸ்பியர் அடுக்கை எல்லையாகக் கொள்ளலாம் என்றும் சிலர் கூறினர். இந்த அடுக்கில்தான் பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகின்றன.

தியடோர் வான் கார்மன் என்பவர், ஆகாய விமானம் பறக்க முடியாத, ஆனால் விண்கலம் பறக்கக்கூடிய உயரத்தை எல்லையாகக் கருதலாம் என்றார். பூமியின் வளிமண்டலத்தில் சுமார் 99.99 சதவீதக் காற்று 100 கி.மீ.க்குக் கீழ் உள்ளது. இந்த உயரத்துக்கு மேலே காற்றின் அடர்த்தி மிகக் குறைவு.

எனவே, 100 கி.மீ. உயரத்துக்கு மேலே விமானம் பறக்க முடியாது. ஆனால், செயற்கைக்கோள்கள் கெப்ளர் விதிகளின்படி பூமியைச் சுற்றி வரலாம். இதனால், 100 கி.மீ. உயரத்தை வானத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லைக் கோடாகக் கொள்ளலாம் என்று தியடோர் வான் கார்மன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பலரும் இந்த 100 கி.மீ. உயரத்தையே கார்மன் எல்லைக் கோடாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்த உயரத்துக்கு மேலே விண்வெளி என்றும், அதற்கு கீழே வானம் என்றும் கருதப்படுகிறது.

இந்த அண்டத்தின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு அமைப்பும் இறைவன் எவ்வளவு நுட்பமாகப் படைத்து ஒழுங்குபடுத்தியுள்ளார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. வானத்தின் முடிவையும் விண்வெளியின் தொடக்கத்தையும் ஆராயும் மனிதனின் முயற்சி, இறைவனின் படைப்பின் மகத்துவத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை