வானம் எங்கே முடிகிறது, விண்வெளி எங்கே தொடங்குகிறது?
சூரிய ஒளி எல்லா நிறங்களையும் கொண்டது. அது வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, வாயு மூலக்கூறுகளில் மோதிச் சிதறுகிறது. குறுகிய அலைநீளம் கொண்ட நீல ஒளி எல்லா திசைகளிலும் அதிகமாகச் சிதறுவதால், வானம் நீல நிறமாகத் தெரிகிறது.
இந்த வானம் எவ்வளவு உயரம் கொண்டது, எங்கே முடியும் என்ற கேள்விகள், 1957 அக்டோபர் 4 அன்று சோவியத் ஒன்றியம் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் I-ஐ பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு முக்கியத்துவம் பெற்றன. ஸ்புட்னிக் பல நாடுகளின் மேலே பறந்து சென்றதால், ஒரு நாட்டின் வான் எல்லை எங்கே முடிவடையும், விண்வெளி எங்கே தொடங்கும் என்பது ஒரு சர்வதேச அரசியல் கேள்வியாக மாறியது.
பலரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். பூமியின் தரையிலிருந்து சுமார் 600 முதல் 10,000 கிலோமீட்டர் வரை பரவியுள்ள புற வளிமண்டலம் (exosphere) உள்ளது. இதில் உள்ள மூலக்கூறுகள் அவற்றின் இயக்கத்தால் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்வெளிக்குச் சென்றுவிடும். எனவே, புற வளிமண்டலத்தின் எல்லை, அதாவது 10,000 கிலோமீட்டர் உயரம் வரை வானம் என்று சிலர் கருதினர்.
வேறு சிலர், காற்றுக்கும் வெற்றிடத்திற்கும் இடையே வேறுபாடு ஏற்படும் உயரத்தை வானம் மற்றும் விண்வெளிக்கான எல்லையாகக் கருதினர். சுமார் 85-90 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள மீசோஸ்பியர் (mesosphere) அடுக்கை எல்லையாகக் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கூறினர். இந்த அடுக்கில்தான் பெரும்பாலான விண்கற்கள் எரிந்து சாம்பலாகின்றன.
விமானங்கள் மற்றும் விண்கலங்கள் பறக்கும் பகுதிகளைக் கொண்டு வானம் மற்றும் விண்வெளிக்கான எல்லையை வகுக்கலாம் என்று தியடோர் வான் கார்மன் (Theodore von Kármán) கூறினார். பெர்னோலி தத்துவத்தின் (Bernoulli’s principle) அடிப்படையில், இறக்கையின் மேலும் கீழும் உள்ள காற்றழுத்த வேறுபாட்டால், காற்றைவிட அதிக எடை கொண்ட விமானம் பறக்கிறது. ஆனால், கெப்ளர் விதிகளின் (Kepler’s laws) அடிப்படையில் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன.
பூமியின் வளிமண்டலத்தில் சுமார் 99.99 சதவீத காற்று 100 கிலோமீட்டருக்குக் கீழே உள்ளது. இந்த உயரத்திற்கு மேலே காற்று உராய்வு மிகக் குறைவு. எனவே, கெப்ளரின் விதிகளின் அடிப்படையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தி பூமியைச் சுற்றிவரச் செய்யலாம். அதேபோல, இந்த உயரத்திற்கு மேலே காற்றின் அடர்த்தி மிகக் குறைவு என்பதால், பெர்னோலி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விமானம் பறக்க முடியாது.
ஆகவே, 100 கிலோமீட்டர் உயரத்தை வானத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லைக் கோடாகக் கொள்ளலாம் என்று தியடோர் வான் கார்மன் கூறினார். ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பலரும் இந்த 100 கிலோமீட்டர் உயரத்தை கார்மன் எல்லைக் கோடாக (Kármán line) ஏற்றுக்கொள்கின்றனர். விண்வெளியைப் போருக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சர்வதேசச் சட்டங்கள் கூறுகின்றன.
இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்து, அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இயங்கச் செய்துள்ளான். அவனது ஆற்றலையும் ஞானத்தையும் எண்ணிப் பார்ப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை