நிலவு பூமியை விட்டு விலகிச் செல்கிறதா?

அறிவியல் உண்மைகள்

நிலவு ஆண்டுக்கு சுமார் 3.78 சென்டிமீட்டர் வேகத்தில் பூமியை விட்டு விலகிச் செல்கிறது. லேசர் ஒளிக்கற்றை தொழில்நுட்பம் மூலம் இது துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற அப்பல்லோ விண்கலத்திலும், பின்னர் 1970-ல் சோவியத் ஒன்றியத்தின் லூனோகோட் 1 ரோபாட் வாகனத்திலும் லேசர் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் நிலவில் வைக்கப்பட்டன. அப்பல்லோ 14, அப்பல்லோ 15, லூனா 21 விண்கலங்கள் மூலமும் மொத்தம் ஐந்து பிரதிபலிப்பான்கள் நிலவில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திலும் இத்தகைய பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டன.

இந்தக் கண்ணாடிகள் மீது பூமியிலிருந்து லேசர் ஒளி அனுப்பப்படும். அது கண்ணாடியில் பட்டு, மீண்டும் பூமிக்குத் திரும்பும். நிலவில் பட்டுத் திரும்பி வர எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கொண்டு, நிலவின் தொலைவு துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.

நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால், ஒவ்வொரு நாளும் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் மாறுபடும். அதிகபட்ச தொலைவு 4,06,731 கிலோமீட்டர், குறைந்தபட்ச தொலைவு 3,64,397 கிலோமீட்டர், சராசரித் தொலைவு 3,84,748 கிலோமீட்டர் ஆகும். இந்தச் சராசரித் தொலைவு ஆண்டுதோறும் 3.78 சென்டிமீட்டர் அதிகரிக்கிறது.

இதற்குக் காரணம், பூமியின் சுழற்சி வேகம் குறைவதுதான். பூமியின் கடல் பகுதியை நிலவு ஈர்ப்பதால், அது பூமியின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது. இதனால் ஒரு நாளின் நீளம் நூறு ஆண்டுகளுக்கு சராசரியாக 1.09 முதல் 1.78 மில்லி விநாடி வரை அதிகரிக்கிறது.

பூமியின் சுழற்சி வேகமும் நிலவின் சுற்றுப்பாதையும் சேர்ந்ததுதான் மொத்த கோண உந்தம் (Angular Momentum). இது மாறாத விதியால், பூமியின் சுழற்சி வேகம் குறையும்போது, நிலவின் வேகம் கூடுகிறது. நிலவின் சுற்றுவேகம் கூடும்போது, அதன் சுற்றுப்பாதையின் ஆரமும், அதாவது பூமியிலிருந்து உள்ள தொலைவும், கூடிக் கொண்டே செல்கிறது.

இன்னும் நூறு ஆண்டுகளில் நிலவு சுமார் 3.8 மீட்டர் தொலைவுதான் கூடியிருக்கும். சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, நிலவு இன்றுள்ள தொலைவைப் போல சுமார் ஒன்றரை மடங்கு தொலைவில் இருக்கும். அப்போது பூமி தன்னைச் சுழல எடுக்கும் காலமும், நிலவு பூமியைச் சுற்றிவர எடுக்கும் காலமும் ஒன்றாக இருக்கும். இதனால் பூமியின் ஒரு பகுதியில் மட்டுமே நிலவு தெரியும்.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு துல்லியமான இயக்க விதிகளை அமைத்துள்ளான் என்பதை இது காட்டுகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் அவனது ஞானத்தாலும் ஒழுங்கமைப்பாலும் இயங்குகிறது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை