நிலவு பூமியை விட்டு விலகிச் செல்கிறதா?

அறிவியல் உண்மைகள்

நிலவு ஆண்டுக்கு சுமார் 3.78 சென்டிமீட்டர் (cm) வேகத்தில் பூமியை விட்டு விலகிச் செல்கிறது. இந்தத் தகவல் லேசர் கற்றைத் தொழில்நுட்பம் (laser beam technology) மூலம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு எடுத்துச் சென்ற அப்பல்லோ விண்கலத்தில் லேசர் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் ஒரு பகுதி அங்கேயே தங்கிவிட்டது. 1970-ல் ஏவப்பட்ட லூனா 17 விண்கலத்தில் சென்ற சோவியத் ஒன்றியத்தின் முதல் ரோபாட் வாகனமான ‘லூனோகோட் 1’இலும் இதே போன்ற லேசர் பிரதிபலிப்பான் (laser reflector) இருந்தது. அப்பல்லோ 14, அப்பல்லோ 15 (1971), லூனா 21 (1973) ஆகிய விண்கலங்களுடன் மொத்தம் ஐந்து பிரதிபலிப்பான்கள் நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டன. சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திலும், மார்ச் 2, 2025 அன்று புளூ கோஸ்ட் மிஷன் 1 (Blue Ghost Mission 1) மூலம் நிலவில் தரையிறங்கிய ‘ஃபயர்ஃபிளை’ (Firefly) விண்கலத்திலும் இத்தகைய பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தப் பிரதிபலிப்பான் கண்ணாடிகளின் மீது பூமியிலிருந்து மிகத் துல்லியமான லேசர் ஒளித் துடிப்புகள் (laser light pulses) அனுப்பப்படுகின்றன. அந்தத் துடிப்புகள் கண்ணாடியில் பட்டு, பூமியை நோக்கிப் பிரதிபலித்துத் திரும்பும். நிலவில் பட்டுத் தெறித்து மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் நேரத்தின் அடிப்படையில், நிலவின் தொலைவு மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு அளவிட்டுப் பார்த்தபோது, ஆண்டுதோறும் பூமியிலிருந்து நிலவு சராசரியாக சுமார் 3.78 சென்டிமீட்டர் விலகிச் செல்வது கண்டறியப்பட்டது. நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் (elliptical orbit) சுற்றி வருகிறது. எனவே இயற்கையாகவே ஒவ்வொரு நாளும் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் மாறுபடும். அதிகபட்ச தொலைவு 4,06,731 கிலோமீட்டர் (km) ஆகவும், குறைந்தபட்ச தொலைவு 3,64,397 கிலோமீட்டர் ஆகவும், சராசரித் தொலைவு 3,84,748 கிலோமீட்டர் ஆகவும் அமைகிறது. ஆண்டுதோறும் இந்தச் சராசரித் தொலைவு 3.78 சென்டிமீட்டர் அதிகரித்துவருகிறது.

இதற்குக் காரணம், பூமியின் சுழற்சி வேகம் குறைவதே. பூமியின் அளவில் கால் பங்கு அளவுள்ள நிலவு, பூமியின் மீது கணிசமான ஈர்ப்பு விசையைச் (gravitational force) செலுத்துகிறது. பூமி தன்னைத் தானே சுற்றி வரும் ஒவ்வொரு நாளும், பூமியின் கடல் பகுதியை நிலவு இழுப்பதால், இந்த இழுப்பு ஒரு வகை வேகத் தடையாகச் செயல்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தை மெதுவாக்குகிறது.

இதன் விளைவாக, பூமி தன்னைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் நீள்கிறது. அதாவது ஒரு நாளின் நீளம் கூடிக்கொண்டே செல்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக ஒரு நாளின் நீளம் 1.09 முதல் 1.78 மில்லி விநாடி (millisecond) வரை அதிகரித்துள்ளது. ஒரு மில்லி விநாடி என்பது ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.

பூமியின் சுழற்சி வேகம் குறைவதற்கும் நிலவின் தொலைவு அதிகரிப்பதற்கும் உள்ள தொடர்பு நியூட்டனின் கோண உந்த அழியா விதியால் (Newton’s law of conservation of angular momentum) விளங்கிக் கொள்ளலாம். பூமியின் சுழற்சி வேகமும் நிலவின் சுற்றுப்பாதையும் சேர்ந்ததுதான் மொத்த கோண உந்தம் (total angular momentum). இந்த உந்தம் அழியாமை விதியின்படி, பூமியின் சுழற்சி வேகம் குறையும்போது, அந்த இழப்பை ஈடுசெய்ய நிலவின் வேகம் கூட வேண்டும். நிலவின் சுற்றுவேகம் கூடும்போது, அதற்கேற்ப அதன் சுற்றுப்பாதையின் ஆரமும், அதாவது பூமியிலிருந்து உள்ள தொலைவும், கூடிக் கொண்டே செல்கிறது. இதனால்தான், பூமியின் சுழற்சி மந்தமடையும் போதெல்லாம், நிலவு ஆண்டுதோறும் பூமியை விட்டு விலகிச் செல்கிறது.

இன்னும் நூறு ஆண்டுகளில் நிலவு சுமார் 3 மீட்டர் தொலைவுதான் கூடியிருக்கும். எனவே, நம்மால் இதை எளிதில் உணர முடியாது. ஆனால், சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப வந்தால் இன்றுள்ள தொலைவைப் போல சுமார் ஒன்றரை மடங்கு தொலைவில் நிலவு இருக்கும். அந்த நேரத்தில் பூமியைச் சுற்ற சுமார் 50 நாள்கள் வரை அது எடுத்துக்கொள்ளும். பூமியின் சுழல் வேகம் குறைந்து, குறைந்து அந்தக் கட்டத்தில் 50 நாள்களுக்கு ஒருமுறைதான் பூமி சுழலும். அதாவது பூமி தன்னைத் தானே சுழல எடுக்கும் காலமும் நிலவு பூமியைச் சுற்றிவர எடுக்கும் காலமும் ஒன்றாகும். அந்தச் சூழலில் பூமியின் ஒரு பகுதியில் மட்டுமே நிலவு தென்படும்; பூமியின் மறுபக்கத்தில் உள்ளவர்களுக்கு நிலவே தெரியாது.

இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு துல்லியமான விதிகளுடன் படைத்து இயங்கச் செய்கிறான் என்பதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு மாற்றத்திலும் அவனது அளவற்ற ஞானமும் ஆற்றலும் வெளிப்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தின் ஒழுங்கமைப்பைப் பற்றி நாம் அறியும் ஒவ்வொரு தகவலும் அவனது மகத்துவத்தை உணர்த்துகிறது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை