மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா?
பூமியில் வானம் நீலமாகத் தெரிவதற்கு ராலே ஒளிச்சிதறல் (Rayleigh scattering) என்ற நிகழ்வுதான் காரணம். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, காற்றில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் போன்ற மூலக்கூறுகளால் நீல நிறம் அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. இந்தச் சிதறிய ஒளிக்கதிர்கள் தூசிகளில் பட்டு பூமியை நோக்கித் திரும்புவதால், வானம் நீலமாகத் தெரிகிறது.
நிலவில் வளிமண்டலம் இல்லாததால், ஒளிச்சிதறல் எதுவும் நடைபெறாது. அதனால் நிலவில் வானம் கருப்பாகவே இருக்கும். புதன் கோளுக்கும் வளிமண்டலம் இல்லை, அங்கும் வானம் கருமையாகவே தெரியும்.
செவ்வாய் கோளில் 95% கார்பன் டை ஆக்சைடு உள்ளது. அங்கு சூரிய உதயம் அல்லது மறையும் நேரத்தில் வானம் நீலமாகத் தென்படும். பகலில் காற்றில் உள்ள தூசியின் அளவைப் பொறுத்து, வானம் மஞ்சள்-பழுப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ தெரியும்.
வெள்ளிக் கோளின் வளிமண்டலம் மிகவும் அடர்த்தியானது. அங்கு சுமார் 96.5% கார்பன் டை ஆக்சைடும், 3.5% நைட்ரஜனும் உள்ளன. வெள்ளியில் நண்பகல் சூரிய வெளிச்சம், பூமியில் சூரியன் மறைந்த பின் உள்ள வெளிச்சத்தின் அளவுக்கே இருக்கும். வெள்ளிக் கோளின் தரையிலிருந்து வானத்தைப் பார்த்தால், தங்க-மஞ்சள் அல்லது ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் காட்சி தரும்.
இறைவன் படைத்த இந்த அண்டத்தில், ஒவ்வொரு கோளின் வளிமண்டல அமைப்பைப் பொறுத்து வானத்தின் நிறம் மாறுபடுகிறது. இது இறைவனின் படைப்பின் மகத்துவத்தையும், ஒவ்வொரு கோளுக்கும் உள்ள தனித்துவமான அமைப்பையும் காட்டுகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை