மற்ற கோள்களில் வானம் நீலமாக இருக்குமா?
பூமியில் வானம் நீல நிறமாகத் தெரிவதற்குக் காரணம் ராலே ஒளிச்சிதறல் (Rayleigh scattering) ஆகும். சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, காற்றில் உள்ள மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது.
பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் நீல நிற ஒளியை அதிக அளவில் சிதறடிக்கின்றன. இந்தச் சிதறிய ஒளிக்கதிர்கள் தூசிகளில் பட்டு பூமியை நோக்கித் திரும்புவதால், வானம் நீலமாகத் தெரிகிறது.
சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் வானம் நீலமாக இருந்திருக்காது; ஆரஞ்சு நிறத்தில் இருந்திருக்கும். அப்போது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் குறைவாகவும், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நீராவி போன்ற வாயுக்கள் அதிகமாகவும் இருந்தன.
சையனோ பாக்டீரியா (cyanobacteria) என்ற உயிரி ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை வெளியிடத் தொடங்கிய பின்னரே, பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு கூடியது. அதன் பிறகுதான் பூமியின் வானம் நீல நிறமாக மாறியது.
நிலவில் வளிமண்டலம் இல்லாததால், ஒளிச்சிதறல் எதுவும் நடைபெறாது. இதனால் நிலவில் வானம் கருப்பாகவே இருக்கும். புதன் கோளுக்கும் வளிமண்டலம் இல்லாததால், அங்கும் வானம் கருமையாகவே காட்சியளிக்கும்.
செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில் 95% கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இது நீல நிறத்தை மிகக் குறைவாகவே சிதறடிக்கும். எனவே, செவ்வாயில் சூரிய உதயம் அல்லது மறையும் நேரத்தில் வானம் நீலமாகத் தெரியும்.
பகல் நேரத்தில் செவ்வாயின் வானம் காற்றில் உள்ள தூசியைப் பொறுத்து மஞ்சள்-பழுப்பு, இளஞ்சிவப்பு அல்லது தேன் நிறத்தில் இருக்கும்.
வெள்ளிக் கோளின் வளிமண்டலம் மிகவும் அடர்த்தியானது. அங்கு சுமார் 96.5% கார்பன் டை ஆக்சைடும், 3.5% நைட்ரஜனும் உள்ளன. இந்த அடர்த்தியான வளிமண்டலத்தால் சூரிய ஒளி ஓரளவுக்கே உள்ளே நுழையும்.
வெள்ளிக் கோளின் தரையிலிருந்து வானத்தைப் பார்த்தால், அது தங்க-மஞ்சள் அல்லது ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தில் தோன்றும்.
சூரியனைச் சுற்றும் கோள்களைப் போலவே, வேறு விண்மீன்களைச் சுற்றியும் புறக்கோள்கள் (exoplanets) உள்ளன. அவற்றின் வளிமண்டலத்தைப் பொறுத்து, வானம் வெவ்வேறு வண்ணங்களில் ஜொலிக்கும். எனவே, எல்லாக் கோள்களின் வானமும் நீல நிறமாக இருக்காது.
இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு நுட்பமாகவும், அழகாகவும் படைத்துள்ளான் என்பதை இது காட்டுகிறது. ஒவ்வொரு கோளுக்கும் அதன் தனித்துவமான வளிமண்டலமும், அதனால் ஏற்படும் வண்ணங்களும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகின்றன.
ஆதாரம்: இந்து தமிழ் திசை