கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன?

அறிவியல் உண்மைகள்

கண்ணாடிக்குத் தனியாக ஒரு நிறம் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். சிலர் கண்ணாடியின் நிறம் வெள்ளி அல்லது வெள்ளை என்றும் கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் கண்ணாடிக்கு மிகச் சிறிய பச்சை நிறச் சாயல் உள்ளது.

நாம் வீடுகளில் பயன்படுத்தும் கண்ணாடிகள் சிலிக்கா கிளாஸ் போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. அவற்றின் பின்புறத்தில் ஒளியைப் பிரதிபலிக்கும் உலோகப் பூச்சு இருக்கும்.

ஒரு சரியான கண்ணாடி எல்லா நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலித்தால், அது வெள்ளை நிறமாகத் தெரியும். ஆனால், நாம் பயன்படுத்தும் கண்ணாடிகள் எல்லா நிறங்களையும் ஒரே அளவில் பிரதிபலிப்பதில்லை.

குறிப்பாக, கண்ணாடி பச்சை நிற ஒளியை மற்ற சில நிறங்களை விடச் சற்றே அதிகமாகப் பிரதிபலிக்கும். இதனால்தான் கண்ணாடியின் பிரதிபலிப்பில் லேசான பச்சை நிறச் சாயலைக் காண முடியும்.

இந்த நிற வேறுபாடு மிகவும் சிறியது என்பதால், சாதாரணமாகக் கண்ணாடியைப் பார்க்கும்போது நம் கண்களுக்குத் தெரியாது. அதனால்தான் கண்ணாடி வெள்ளி நிறத்தில் இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.

இந்த பச்சை நிறச் சாயலை வீட்டிலேயே எளிதாகக் கவனிக்கலாம். இரண்டு கண்ணாடிகளை ஒன்றுக்கொன்று எதிரெதிராக வைத்துப் பாருங்கள். கண்ணாடிகளில் தொடர்ந்து உருவாகும் முடிவில்லாத பிம்பங்களைக் கவனித்தால், தொலைவில் செல்லச் செல்ல அவை சற்றே பச்சை நிறத்துடன் இருண்டு காணப்படுவதைப் பார்க்கலாம்.

ஒளி கண்ணாடிகளுக்கு இடையே பலமுறை பிரதிபலிக்கும்போது, ஒவ்வொரு பிரதிபலிப்பிலும் நிறங்களின் பிரதிபலிப்பு விகிதத்தில் சிறிய வேறுபாடுகள் சேர்ந்து கொண்டே செல்கின்றன. இதனால் தொலைதூரப் பிம்பங்களில் பச்சை நிறச் சாயல் தெளிவாகத் தெரிகிறது.

எனவே, கண்ணாடியின் நிறம் வெள்ளை அல்லது வெள்ளி என்று மட்டும் சொல்வதைவிட, மிகவும் லேசான பச்சை நிறச் சாயல் கொண்டது என்று கூறுவது துல்லியமானது. இறைவன் இந்த உலகைப் படைத்த விதத்தில் உள்ள நுட்பமான அறிவையும், ஒழுங்கையும் இது காட்டுகிறது.

ஆதாரம்: தினத்தந்தி