நட்சத்திரங்கள் ஏன் வெடிக்கின்றன?
சூரியன் போன்ற விண்மீன்களில், ஈர்ப்பு விசையால் ஏற்படும் நிலைகுலைவுதான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ எனப்படும் நிகழ்வு. பூமியில் ஒரு கூடையைச் சுமக்கும்போது, அதன் எடை தலையை கீழ்நோக்கி இழுக்கும். அதேநேரம், உடல் மேல்நோக்கி முட்டுக்கொடுக்கும். இதுபோல, விண்மீன்களிலும் இரண்டு எதிரெதிர் விசைகள் செயல்படுகின்றன.
விண்மீனின் ஈர்ப்பு விசை அதன் பொருட்களை மையத்தை நோக்கி இழுக்கும். அதேநேரம், விண்மீனின் மையத்தில் உருவாகும் ஆற்றல் வெளிப்புறமாகத் தள்ளும். இந்த இரண்டு விசைகளும் சமநிலையில் இருக்கும்வரை விண்மீன் நிலையாக இருக்கும்.
சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் உள்ளே உள்ள எரிபொருள் குறைந்துவிடும். இதனால் உருவாகும் ஆற்றல் குறைந்து, ஈர்ப்பு விசை வலுப்பெறும். அப்போது சூரியனின் உள்புறப் பொருட்கள் மேலும் சுருங்கும். இந்தச் சுருக்கத்தால், சூரியனின் மேற்புற அடுக்கு பலூன் போல விரிவடையும். இது ‘சிவப்பு ராட்சச’ நிலை எனப்படும்.
இந்த சிவப்பு ராட்சச நிலையில், சூரியன் தற்போதைய அளவை விட சுமார் 200 மடங்கு பெரிதாகி, புதன், வெள்ளி போன்ற கோள்களை விழுங்கிவிடும். பூமியின் கடல்கள் ஆவியாகிவிடும் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும்.
சிவப்பு ராட்சச நிலையின் மையத்தில் எரிபொருள் தீர்ந்ததும், ஈர்ப்பு விசை மீண்டும் வலுப்பெற்று, சூரியனின் பொருட்கள் பூமியின் அளவு போலச் சுருங்கும். அப்போது அணுக்களுக்கு இடையே உள்ள விலக்கு விசை, பொருட்களை வெளிநோக்கித் தள்ளும். இந்த இழுபறியில் சூரியன் மீண்டும் நிலைத்தன்மை அடையும்.
இந்தச் சுருங்கும் நிகழ்வின்போது பெரும் ஆற்றல் வெளியேறி, விண்மீன் மிகப்பிரகாசமாக ஒளிரும். இந்த ஆற்றல் சூரியனின் மேல் அடுக்குகளை ராட்சச வேகத்தில் வெளிநோக்கித் தள்ளிவிடும். இதுதான் பார்வைக்கு விண்மீன் வெடிப்பது போலக் காட்சி தரும். இதைத்தான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ என்கிறோம்.
இறுதியில், சூரியன் ‘வெள்ளைக்குள்ளன்’ வகை விண்மீனாக மாறும். சூடான பாத்திரம் மெல்ல சூட்டை வெளியிடுவது போல, பல கோடி ஆண்டுகள் மங்கலாக ஒளிரும். ஒவ்வொரு ஆண்டும் நம் விண்மீன் திரளில் மட்டும் 40 முதல் 50 விண்மீன்கள் நோவாவாக வெடித்துச் சிதறுகின்றன.
இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு துல்லியமாகப் படைத்து, ஒவ்வொரு விண்மீனுக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்நாளை அமைத்துள்ளான் என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. அவனது படைப்பின் மகத்துவத்தையும், ஒழுங்கையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆதாரம்: இந்து தமிழ் திசை