நட்சத்திரங்கள் ஏன் வெடிக்கின்றன?

அறிவியல் உண்மைகள்

சூரியன் போன்ற விண்மீன்களில் ஏற்படும் நிலைகுலைவுதான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ (Nova) எனப்படும் நிகழ்வு.

சூரியனின் உள்ளே இரண்டு எதிரெதிர் விசைகள் செயல்படுகின்றன. சூரியனின் ஈர்ப்புவிசைப் பொருள்கள் அனைத்தையும் அதன் மையத்தை நோக்கி இழுக்கிறது. அதே நேரத்தில், சூரியனின் மையத்தில் உருவாகும் ஆற்றல் வெளிப்புறமாகத் தள்ளுவிசையைத் தருகிறது. இந்த இரண்டு விசைகளின் தற்காலிக சமநிலையில்தான் சூரியன் குறிப்பிட்ட அளவில் நிலைநிற்கிறது.

சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் உள்ளே எரிபொருள் அடர்த்தி குறைந்துவிடும். இதனால் உருவாகும் ஆற்றல் அளவு குறைந்துவிடும். இந்த நிலையில், எதிரும் புதிருமாகச் செயல்படும் விசைகள் சமநிலை தவறி, ஈர்ப்புவிசை வலுப்பெறும்.

இதனால் சூரியனின் உள்புறப் பொருள்கள் மேலும் சுருங்கும். ஸ்பாஞ்சைப் பிழிந்தால் நீர் வெளியேறுவதுபோல, சூரியனின் உள்புறப் பொருளை அழுத்திச் சுருக்கும்போது அதனுள் பொதிந்திருந்த ஆற்றல் வெளியேறும். இதன் காரணமாக, சூரியனின் மேற்புற அடுக்கு ஊதிய பலூன் போல விரிவடையும். தற்போதுள்ள சூரியனின் அளவைப்போல சுமார் 200 மடங்கு பெரிதாகும். இந்தக் கட்டத்தைச் ‘சிவப்பு ராட்சச’ (Red Giant) நிலை என்பார்கள்.

சிவப்பு ராட்சச நிலையை அடையும் சூரியன், புதன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கோள்களையும் விழுங்கிவிடும். பூமிக்கு மிக நெருக்கமாக வந்துவிடும். அந்தச் சுட்டெரிக்கும் வெப்பத்தில் பூமியின் கடல்கள் எல்லாம் ஆவியாகி மறைந்துவிடும்.

சிவப்பு ராட்சச நிலையின் மையத்தில் எரிபொருள் மீண்டும் தீர்ந்துபோகும். அந்தச் சூழலில் ஈர்ப்புவிசையின் கை மீண்டும் ஓங்கும். இரும்புக்கரம் கொண்டு நசுக்குவதுபோல, சூரியனின் பொருள்களை எல்லாம் ஈர்ப்புவிசை மையம் நோக்கிக் குவிக்கும்போது, சூரியனின் அளவு பூமியின் அளவு போலச் சிறிதாக மாறிவிடும்.

ஒவ்வோர் அணுவைச் சுற்றியும் எலெக்ட்ரான்கள் (electrons) உள்ளன. இவை எதிர்மின்னோட்டம் கொண்டவை. எதிர்மின்னோட்டம் கொண்ட துகள் மற்றோர் எதிர்மின்னூட்டம் கொண்ட துகளைச் சந்திக்கும்போது விலக்குவிசை ஏற்படும். இதன் காரணமாகக் குறிப்பிட்ட அடர்த்திக்குக் கூடுதலாகப் பொருள்களை நெருக்கமாக அழுத்த முடியாது. இந்த நிலையில், எலக்ட்ரான்களுக்கு இடையேயும் புரோட்டன்களுக்கு இடையேயும் (protons) ஏற்படும் மின்விலக்கு விசை, பொருள்களை வெளிநோக்கித் தள்ளும். ஈர்ப்புவிசை உள்நோக்கி இழுக்கும். இந்த இழுபறியில் சூரியன் மீண்டும் நிலைத்தன்மை அடையும்.

பூமி அளவுக்குச் சூரியன் சுருங்கும் நிகழ்வின்போது பெரும் ஆற்றல் வெளியேறும். அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதுபோல, இந்த விண்மீன் மிகமிகப் பிரகாசமாக ஒளிரும். இப்படிப் புயல்போல வெளியேறும் ஆற்றல் சூரியனின் மேல் அடுக்குகளை வெளிநோக்கி ராட்சச வேகத்தில் ஊதித்தள்ளிவிடும். வெளி அடுக்குச் சடசடவென விரியும். இதுதான் பார்வைக்கு விண்மீன் வெடிப்பதுபோலக் காட்சி தரும். மேலடுக்கு விரியும் நிலையில் உள்ளே மையம் சுருங்கிச் சின்னதாக மாறிக்கொண்டிருக்கும். மேலடுக்கு விரிவாக்கம், உள் பகுதி சிறிதாகும் போக்கு இரண்டும் ஒருசேர நிகழும். இதைத்தான் ‘விண்மீன் வெடிப்பு’ அல்லது ‘நோவா’ என்கிறோம்.

இதன் இறுதியில் சூரியன் ‘வெள்ளைக்குள்ளன்’ (White Dwarf) வகை விண்மீன் நிலைக்கு மாறும். சூடான பாத்திரம் மெல்ல மெல்ல சூட்டை வெளியிட்டு வெப்பம் குறைவதுபோல, பல கோடி ஆண்டுகள் வெள்ளைக்குள்ளன் நிலையில் சூரியன் மங்கலாக ஒளிரும். உள்ளே தேங்கியுள்ள ஆற்றலை மெல்ல வெளியிடும். இதுதான் சூரியனின் இறுதி நிலை. இதேபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு விண்மீனுக்கும் நடக்கும். ஒவ்வோர் ஆண்டும் நம் விண்மீன் திரளில் (galaxy) மட்டும் 40 முதல் 50 விண்மீன்கள் நோவாவாக வெடித்துச் சிதறுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான சமநிலைகளையும், மாற்றங்களையும் அமைத்துள்ளான் என்பதை இந்த விண்மீன்களின் வாழ்வு நமக்குக் காட்டுகிறது. அவனது ஆற்றலும் ஞானமும் அளப்பரியது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை