பூமியின் வடிவம் கோளம் என்று எப்படித் தெரிந்துகொண்டார்கள்?

அறிவியல் உண்மைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தட்டையானது என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரியபடர், பூமி கோள வடிவம் என்றார்.

இரவு வானில் வடதுருவ விண்மீன் (Polaris) ஒரே இடத்தில் நிலையாகத் தெரியும். தெற்கே கன்னியாகுமரியில் இருந்து இந்த விண்மீனைப் பார்த்தால், அடிவானத்திலிருந்து சுமார் 8 டிகிரி உயரத்தில் தெரியும். கன்னியாகுமரிக்கு வடக்கே உள்ள உஜ்ஜைனியில் இருந்து பார்த்தால், சுமார் 23.18 டிகிரி உயரத்தில் தெரியும்.

ஆனால், கன்னியாகுமரிக்கு நேர் கிழக்கே உள்ள இலங்கையின் அனுராதபுரத்தில் இருந்தோ, நேர் மேற்கே லட்சத்தீவுகளின் மினிகாய் தீவில் இருந்தோ பார்த்தால், அதே 8 டிகிரி உயரத்தில்தான் வடதுருவ விண்மீன் தெரியும். நேர் தெற்கே கடலுக்குள் சென்றால் அதன் கோண உயரம் குறையும்.

கிழக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றால் வடதுருவ விண்மீனின் உயரத்தில் மாற்றம் இல்லை. ஆனால், வடக்கு நோக்கிச் சென்றால் அதன் கோண உயரம் கூடுகிறது; தெற்கு நோக்கிச் சென்றால் குறைகிறது. பூமி தட்டையாக இருந்தால் இது நடக்காது. பூமி பந்து போல இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்தத் தகவல்களை வைத்துதான் ஆரியபடர், பூமி கோள வடிவம் என்று சொன்னார்.

கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் வேறு ஒரு வழியில் பூமியின் வடிவத்தைக் கண்டறிந்தார். துறைமுகத்தை விட்டு வெகுதூரம் செல்லும் கப்பல்களைப் பார்த்தால், முதலில் அதன் அடிப்பகுதி கடலில் மறைந்து, பிறகு நடுப்பகுதியும், கடைசியில் உச்சிப் பகுதியும் மறைந்துவிடும். பூமி கோள வடிவத்தில் இருந்தால்தான் இப்படி நடக்கும். பூமி தட்டையாக இருந்தால், கப்பல் முழுவதுமாகத் தெரியும், ஆனால் சிறியதாகத் தோன்றும்.

இறைவன் இந்த உலகத்தை எவ்வளவு துல்லியமாகப் படைத்து, ஒழுங்குபடுத்தி இருக்கிறார் என்பதை இந்த உண்மைகள் காட்டுகின்றன. அவரது படைப்பின் ஞானமும், ஆற்றலும் வியக்க வைக்கின்றன.

ஆதாரம்: இந்து தமிழ் திசை