பூமியின் வடிவம் கோளம் என்று எப்படித் தெரிந்துகொண்டார்கள்?

அறிவியல் உண்மைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தட்டையானது என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், இன்று விண்கலங்கள் எடுத்த படங்களால் பூமி பந்து போல இருக்கிறது என்று சொல்ல முடிகிறது.

சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரியபடர் (பொ.ஆ. 476 -550) என்பவர், பூமி தட்டையானது என்ற பழைய கருத்தை மறுத்து, அது கோளம் என்றார். பூமியின் மேலே இருந்துகொண்டே அவர் எப்படி பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தார்?

நம் கண்முன் இருக்கும் நிலப்பரப்பு மேடு பள்ளமாக இருந்தாலும், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீர் மட்டம் தட்டையாக இருக்கும். அதனால், பூமி தட்டையானது என்றும், அதில் உள்ள மேடு பள்ளங்களால் மலைகளும் பள்ளங்களும் உருவாகின்றன என்றும் மக்கள் நினைத்தார்கள்.

கிரேக்கம் போன்ற நாடுகளில், தட்டையான பூமியின் கிழக்கில் சூரியன் உதித்து, தலைக்கு மேலே வந்து மேற்கில் மறைகிறது என்று நம்பினார்கள். வட்டமான தட்டு போல இருக்கும் பூமியின் மேல், ஒரு சட்டி கவிழ்த்தது போல வானம் இருக்கிறது என்றும் கருதினார்கள்.

இரவு வானில் வடதுருவ விண்மீன் (Polaris) என்ற ஒரு நட்சத்திரம் இருக்கிறது. இந்தியாவில் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து வடக்கே காஷ்மீர் வரை சென்றாலும், இந்த நட்சத்திரம் வடக்கு திசையில்தான் தெரியும். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கில் உதித்து, சூரியனைப் போல வானில் உயர்ந்து, மேற்கில் மறையும். ஆனால், இந்த நட்சத்திரம் மட்டும், வண்டிச் சக்கரத்தின் அச்சு போல, வானில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும்.

இந்த வடதுருவ விண்மீனை உற்றுநோக்கியபோது சில விஷயங்கள் தெரியவந்தன. தெற்கே உள்ள கன்னியாகுமரியில் இருந்து இந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், வடக்கு திசையில் அடிவானத்தில் இருந்து சுமார் 8 டிகிரி உயரத்தில் தெரியும். இதே நட்சத்திரத்தைக் கன்னியாகுமரிக்கு வடக்கே உள்ள உஜ்ஜைனியில் இருந்து பார்த்தால், வடக்கு திசையில் சுமார் 23.18 டிகிரி உயரத்தில் தெரியும்.

கன்னியாகுமரிக்கு நேர் கிழக்கே உள்ள இலங்கையின் அனுராதபுரம் சென்று பார்த்தாலும், வடதுருவ விண்மீன் அதே 8 டிகிரி உயரத்தில்தான் தெரிகிறது. கன்னியாகுமரிக்கு நேர் மேற்கே லட்சத்தீவுகளின் மினிகாய் தீவுக்குச் சென்றாலும், அதே 8 டிகிரி உயரத்தில்தான் தெரியும்.

ஆனால், கன்னியாகுமரிக்கு நேர் தெற்கே கடலுக்குள் சென்றால், வடதுருவ விண்மீனின் கோண உயரம் (angular height) குறைகிறது. இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், ஒரு இடத்திலிருந்து நேர் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றால், வடதுருவ விண்மீனின் நிலையில் மாற்றம் இல்லை. வடக்கு நோக்கிச் சென்றால் அதன் கோண உயரம் கூடுகிறது; தெற்கு நோக்கிச் சென்றால் கோண உயரம் குறைகிறது.

பூமி தட்டையாக இருந்தால் இது சாத்தியமில்லை. பந்து போல பூமி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஆய்வில் கிடைத்த தகவல்களை வைத்துதான் ஆரியபடர், பூமியின் வடிவம் கோளம் என்ற முடிவுக்கு வந்தார். ஒரு யோசனை (yojana) தொலைவு நேர் வடக்கே சென்றால், வடதுருவ விண்மீனின் கோண உயரம் 1 டிகிரி உயர்கிறது என்றும் அவர் அளவீடு செய்து கண்டுபிடித்தார். யோசனை என்பது பண்டைய இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு நீட்டல் அளவாகும்.

கிரேக்கத்தில் அரிஸ்டாட்டில் (Aristotle) வேறு ஒரு வழியில் பூமியின் வடிவத்தைக் கண்டுபிடித்தார். துறைமுகத்தை விட்டு வெகுதூரம் செல்லும் கப்பல்களைப் பார்த்தால், அவை தூரம் செல்லச் செல்ல சிறியதாவதுடன், அதன் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதி வரை மெல்ல மெல்ல மறைந்துவிடும். தொடுவானத்தை அடைந்த பிறகு முழு கப்பலும் மறைந்துவிடும்.

பூமி தட்டையாக இருந்தால், கடலில் தூரமாகச் செல்லும் கப்பலின் உருவம் சிறியதாக இருக்கும். ஆனால், கப்பலின் அடி முதல் மேல் வரை தெரியும். பூமி கோள வடிவத்தில் இருந்தால்தான், கப்பல் தூரம் செல்லச் செல்ல, முதலில் அதன் அடிப்பகுதி மறையும்; பிறகு நடுப்பகுதியும் மறையும்; கடைசியில் அதன் உச்சிப் பகுதியும் மறைந்து, முழு கப்பலும் கண்ணுக்குத் தெரியாமல் போகும். இந்த நிகழ்வைக் கொண்டே பூமியின் வடிவம் கோளம் என்று அரிஸ்டாட்டில் முடிவு செய்தார்.

இறைவன் எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் கொண்டு இந்த உலகைப் படைத்து, அதன் வடிவத்தையும் இயக்கத்தையும் இவ்வளவு துல்லியமாக அமைத்திருக்கிறான் என்பதை இந்த உண்மைகள் நமக்குக் காட்டுகின்றன. மனிதர்கள் தங்கள் அறிவால் கண்டறியும் ஒவ்வொரு விஷயமும், இறைவனின் படைப்பின் மகத்துவத்தையே பறைசாற்றுகிறது.

ஆதாரம்: இந்து தமிழ் திசை