முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு ஏன் சிவப்பாகத் தெரிகிறது?

அறிவியல் உண்மைகள்

முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றுவது ஒரு அழகான காட்சி. சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரு நேர்க்கோட்டில் வரும்போது முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே வந்து, அதன் நிழல் நிலவின் மீது விழுகிறது.

பூமி ஒரு திடமான கோளம். அதைச் சுற்றி, ஓரளவு ஒளி ஊடுருவக்கூடிய வளிமண்டலம் உள்ளது. பூமியின் திடப்பகுதி நிலவின் மீது இருண்ட நிழலை உருவாக்கும்போது, பூமியைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் வழியாக ஒளி கசிந்து நிலவின் மீது விழுகிறது.

ஒளி ஒரு ஊடகத்திலிருந்து (medium) இன்னோர் ஊடகத்திற்குச் செல்லும்போது வளையும். பூமியின் வளிமண்டலத்திலிருந்து விண்வெளிக்குள் செல்லும்போதும் ஒளிக்கதிர்கள் வளைந்து, பூமியின் நிழல் செல்லும் திசை நோக்கிச் செல்கின்றன.

சூரிய ஒளி என்பது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய பல வண்ணங்களின் கலவை. இந்தச் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது சிதறடிக்கப்படுகிறது. நீல நிற ஒளியானது சிவப்பு நிற ஒளியைவிட அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. இதனால் பகலில் வானம் நீல நிறத்தில் தெரிகிறது.

ஆனால், சிவப்பு நிற ஒளி மிகக் குறைவாகச் சிதறடிக்கப்படுவதால், அது வளிமண்டலத்தின் வழியே நேரடியாகக் கடந்து செல்லும். இதன் விளைவாக, பூமியின் வளிமண்டலம் வழியாக சிவப்பு நிற ஒளியானது பிற நிறங்களைவிட அதிக அளவில் வெளியேறி, பூமியின் நிழலின் திசையிலேயே பயணிக்கிறது.

முழுச் சந்திர கிரகணத்தின்போது, நிலவு முழுவதுமாகப் பூமியின் நிழலில் மூழ்கியிருக்கும். அப்போது, இந்தச் சிவப்பு ஒளியே நிலவின் மீது விழுகிறது. இதனால்தான் நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பல சாயல்களில் காணப்படுகிறது.

இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான விதிகளை வைத்துள்ளார் என்பதை இது காட்டுகிறது. இந்த விதிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, நமக்கு இத்தகைய அழகான வானியல் காட்சிகளை வழங்குகின்றன. இறைவனின் ஞானத்தையும் ஆற்றலையும் நாம் இதில் காணலாம்.

ஆதாரம்: இந்து தமிழ் திசை