முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு ஏன் சிவப்பாகத் தெரிகிறது?
முழுச் சந்திர கிரகணத்தின்போது நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் தெரிவது ஒரு அழகான காட்சி. இது ஏன் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது, பூமியின் அமைப்பு, அது ஏற்படுத்தும் நிழலின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரு நேர்க்கோட்டில் வரிசையாக அமையும்போதுதான் முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது, பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே வரும். இதனால் பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது.
நாம் வாழும் பூமி ஒரு திடமான கோளம். இந்தக் கோளத்தைச் சுற்றி, ஓரளவு ஒளி ஊடுருவக்கூடிய ஒரு வளிமண்டலப் படலம் உள்ளது. இது ஒரு போர்வைபோல பூமியைச் சூழ்ந்துள்ளது.
பூமியின் திடமான பகுதி நிலவின் மீது இருண்ட நிழலை உருவாக்கும்போது, அதைச் சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் வழியாக ஒளி கசிந்து செல்ல முடியும். இந்தக் கசியும் ஒளியின் ஒரு பகுதிதான் நிலவின் மீது விழுகிறது.
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து (medium) இன்னொரு ஊடகத்திற்குச் செல்லும்போது வளைகிறது. எடுத்துக்காட்டாக, தண்ணீரிலிருந்து காற்றுக்குள் செல்லும்போது ஒளி வளைவதுபோல, பூமியின் வளிமண்டலத்திலிருந்து விண்வெளிக்குள் செல்லும்போதும் ஒளிக்கதிர்கள் வளைந்து, பூமியின் நிழல் செல்லும் திசை நோக்கிச் செல்கின்றன.
சூரிய ஒளி என்பது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு (VIBGYOR) எனப் பல வண்ணங்களின் கலவை. இந்தச் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஒளிச்சிதறல் (scattering) ஏற்படுகிறது. அதாவது, சூரிய ஒளியில் உள்ள வண்ணங்கள் சிதறடிக்கப்படுகின்றன.
இந்த வண்ணங்களில், நீல நிற ஒளியானது சிவப்பு நிற ஒளியைவிட அதிகமாகச் சிதறடிக்கப்படுகிறது. இதனால்தான் பகலில் நாம் வானத்தை நீல நிறத்தில் பார்க்கிறோம். ஆனால், சிவப்பு நிற ஒளி மிகக் குறைவாகச் சிதறடிக்கப்படுவதால், அது வளிமண்டலத்தின் வழியே நேரடியாகக் கடந்து செல்லும் தன்மை கொண்டது.
இதன் விளைவாக, பூமியின் திடமான பகுதியின் ஓரங்களைச் சூழ்ந்துள்ள வளிமண்டலம் வழியாக, சிவப்பு நிற ஒளியானது மற்ற நிறங்களைவிட அதிக அளவில் வெளியேற்றப்பட்டு, பூமியின் நிழலின் திசையிலேயே பயணிக்கிறது. கிரகணம் நடைபெறும்போது மட்டுமல்ல, மற்ற எல்லாக் காலங்களிலும் இவ்வாறு சிவப்பு நிற ஒளி தூக்கலாக பூமியின் விளிம்பு வளிமண்டலம் வழியே கசிந்து, பூமியின் நிழலின் ஊடே பரவிக்கொண்டிருக்கும்.
எனவே, முழுச் சந்திர கிரகணத்தின்போது, நிலவு முழுவதுமாகப் பூமியின் நிழலில் மூழ்கியிருக்கும் தருணத்தில், இந்தச் சிவப்பு ஒளியே நிலவின் மீது விழுகிறது. இதன் காரணமாகவே நிலவு சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தின் பல சாயல்களில் காணப்படுகிறது. இது ‘பிளட் மூன்’ அல்லது ‘சிவப்பு நிலவு’ என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், பகுதி சந்திர கிரகணத்தின்போது, நிலவின் ஒரு பகுதி மட்டும் பூமியின் நிழலில் மறைக்கப்படும். அப்போது, நிலவின் மற்றொரு பகுதியில் நேரடிச் சூரிய ஒளி விழுந்துகொண்டிருக்கும். அந்தப் பகுதி மிகவும் பிரகாசமாக இருப்பதால், பூமியின் நிழலில் உள்ள நிலவு பகுதியின் சிவப்பு நிறம் நமக்குத் தெளிவாகத் தெரிவதில்லை.
இறைவன் தனது அளவற்ற ஞானத்தால், சூரியன், பூமி, நிலவு ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் படைத்து, அவற்றின் இயக்கத்தால் இத்தகைய அற்புதமான நிகழ்வுகளை நிகழச் செய்கிறான். இந்த இயற்கை நிகழ்வுகள் அனைத்தும் அவனது வல்லமையையும், படைப்பின் நுட்பத்தையும் நமக்கு உணர்த்துகின்றன.
ஆதாரம்: இந்து தமிழ் திசை