சூரியனுக்கு ஏன் காந்தப்புலம் உள்ளது?
ஒரு காந்தத்தைச் சூடாக்கினால் அதன் காந்தத்தன்மை அழிந்துவிடும். ஆனால் சூரியன் மிக அதிக வெப்பம் கொண்டது. அப்படியென்றால் சூரியனுக்கு எப்படி காந்தப்புலம் இருக்கும் என்ற கேள்வி எழலாம்.
நாம் பயன்படுத்தும் காந்தங்கள் திண்மப் பொருட்கள். அவற்றில் அணுக்காந்தங்கள் ஒரே திசையில் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். வெப்பம் அதிகரிக்கும்போது இந்த ஒழுங்கு குலைந்து, காந்தத்தன்மை மறைந்துவிடும்.
ஆனால் சூரியன் திண்மம் அல்ல. அது பிளாஸ்மா எனப்படும் நிலையில் உள்ளது. ஒரு வாயுவை மிக அதிகமாகச் சூடாக்கும்போது, அதன் அணுக்கள் உடைந்து, எலக்ட்ரான்களும் அயனிகளும் பிரிகின்றன. இவை மின்னூட்டம் பெற்ற துகள்கள். இந்த நிலையே பிளாஸ்மா.
சூரியனில் உள்ள இந்த சூடான பிளாஸ்மா ஆழத்திலிருந்து மேற்பரப்புக்குக் குமிழிட்டு எழுகிறது, பின்னர் குளிர்ந்து மீண்டும் கீழே இறங்குகிறது. இது வெப்பச்சுழற்சி எனப்படும். இங்கு நகரும் ஒவ்வொரு துகளும் மின்னூட்டத்தைச் சுமந்து செல்கிறது.
மின்னூட்டம் பெற்ற துகள்கள் நகரும்போது, அது ஒரு மின்னோட்டம் போலச் செயல்பட்டு காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இது ஒரு மின்சார டைனமோ செயல்படும் விதத்தைப் போன்றது.
சூரியன் சுழல்கிறது. அதன் நடுப்பகுதி துருவங்களைவிட வேகமாகச் சுழல்கிறது. இந்தச் சுழற்சியும் பிளாஸ்மாவின் கொதிக்கும் இயக்கமும் சேர்ந்து காந்தப்புலத்தை மாற்றுகின்றன. புதிய மின்னோட்டங்கள் உருவாகி, அவை மேலும் காந்தப்புலத்தை உருவாக்குகின்றன.
இந்தச் செயல்முறை சூரியனுக்குள் தொடர்ந்து நடக்கிறது. பிளாஸ்மா நகர்ந்து மின்னோட்டத்தை உருவாக்குகிறது. அந்த மின்னோட்டம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இந்தக் காந்தப்புலம் மீண்டும் பிளாஸ்மாவின் இயக்கத்தைப் பாதிக்கிறது. இந்தச் சுழற்சி சூரிய டைனமோ என்று அழைக்கப்படுகிறது. எனவே, சூரியனின் அதிக வெப்பமே அதன் காந்தப்புலத்தை உருவாக்க உதவுகிறது.
இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு நுட்பமாகப் படைத்து, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவமான அமைப்பைக் கொடுத்துள்ளார் என்பதை எண்ணிப் பாருங்கள். சூரியனின் இந்த வியத்தகு செயல்பாடு, படைப்பின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை