சூரியனுக்கு ஏன் காந்தப்புலம் உள்ளது?
ஒரு காந்தத்தைச் சூடாக்கினால் அதன் காந்தத்தன்மை அழிந்துவிடும் என்று நாம் அறிவோம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையைத் தாண்டினால், காந்தம் தனது காந்த விசையை முழுவதுமாக இழந்துவிடும். எனவே, மிக அதிக வெப்பத்தைக் கொண்ட சூரியனுக்குக் காந்தத்தன்மையே இருக்கக் கூடாது என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் சூரியன் என்பது நாம் கையாளும் காந்தம் போன்றது அல்ல. ஒரு சாதாரண காந்தத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய அணுக்காந்தங்கள் (atomic magnets) ஒரே திசையில் அடுக்கப்பட்டிருக்கும். வெப்பம் இந்த ஒழுங்கைக் குலைக்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது அணுக்கள் அதிகமாக அதிரத் தொடங்குவதால், அந்த ஒழுங்கு குலைந்து காந்தத்தன்மையும் மறைந்துவிடும்.
சூரியன் திண்மம் அல்ல; சாதாரண வாயுவும் அல்ல. அது பிளாஸ்மா (plasma) எனப்படும் நிலையில் உள்ளது. ஒரு வளிமத்தைச் சூடாக்கிக்கொண்டே இருந்தால், அதன் அணுக்கள் உடைந்து, எலக்ட்ரான்கள் (electrons) பிரிந்துவிடும். இதனால் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்கள் மற்றும் நேர்மின்னூட்டம் கொண்ட அயனிகள் (ions) உருவாகின்றன. இவை சேர்ந்து இருக்கும் நிலையே பிளாஸ்மா. இது பொருளின் நான்காவது நிலை எனப்படுகிறது.
இந்தப் பிளாஸ்மாவில் உள்ள துகள்கள் மின்னூட்டம் (charge) பெற்றிருப்பதால், அவை சாதாரண வளிமத்தைப் போல் அல்லாமல் வேறுவிதமாக நடந்துகொள்கின்றன. சூரியனில் சூடான பிளாஸ்மா ஆழத்திலிருந்து மேற்பரப்புக்குக் குமிழிட்டு எழுகிறது. பின்னர் குளிர்ந்து மீண்டும் கீழே இறங்குகிறது. இதற்கு வெப்பச்சுழற்சி (convection) என்று பெயர்.
இங்கு நகரும் ஒவ்வொரு துகளும் மின்னூட்டத்தைச் சுமந்து செல்கிறது. நகரும் மின்னூட்டங்கள் காந்தப்புலத்தை உருவாக்கும். இதுதான் ஒரு சைக்கிள் டைனமோவின் அடிப்படை. ஒரு கம்பிச் சுருளுக்கு அருகில் காந்தத்தைச் சுழற்றும்போது, மின்னூட்டங்களின் இயக்கம் மின்சாரத்தை உருவாக்கி விளக்கை எரிய வைக்கிறது.
சூரியனில் கம்பிகள் எதுவும் இல்லை. ஆனால் மின்னூட்டம் பெற்ற துகள்களின் இயக்கம் ஒரு மின்னோட்டம் போலச் செயல்படுகிறது. அந்த மின்னோட்டம்தான் காந்தப்புலங்களை உருவாக்குகிறது. இதனால், சூரியன் ஒரு பெரிய இயற்கை டைனமோ போலச் செயல்படுகிறது.
சூரியன் சுழல்கிறது. அதன் இடைக்கோடு (equator) அதன் துருவங்களைவிட வேகமாகச் சுழல்கிறது. இந்தச் சமமில்லாத சுழற்சி மற்றும் தொடர்ந்து நடைபெறும் கொதித்து குமுறும் இயக்கம் காந்தப்புலத்தை மாற்றுகிறது. புதிய மின்னோட்டங்கள் உருவாகின்றன. அவை மேலும் காந்தப்புலத்தை உருவாக்குகின்றன. இது தொடர்ந்து நடக்கும் ஒரு சுற்று.
சூரியனுக்குள் இதே போன்ற செயல்முறை தொடர்ந்து நடக்கிறது. பிளாஸ்மா நகர்கிறது. மின்னோட்டம் உருவாகிறது. அது காந்தப்புலத்தை உருவாக்குகிறது. காந்தப்புலம் மீண்டும் பிளாஸ்மாவின் இயக்கத்தைப் பாதிக்கிறது. இந்தச் சுற்று சூரிய டைனமோ என்று அழைக்கப்படுகிறது. அதனால், வெப்பம் சூரியனின் காந்தத்தன்மையை அழிக்கவில்லை. மாறாக, அதையே உருவாக்க உதவுகிறது. அதிக வெப்பம் இல்லை எனில் பிளாஸ்மா இருக்காது. மின்னூட்டங்கள் நகராது. காந்தப்புலமும் உருவாகாது.
இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான அமைப்புகளை வைத்துள்ளான் என்பதை இது காட்டுகிறது. சூரியனின் இந்தச் செயல்பாடு, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு அசைவிலும் அவனது வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை