விண்மீன்கள் ஏன் கண் சிமிட்டுகின்றன?
சில புறக்கோள்களை (சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்கள்) நேரடியாகத் தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும். சில விண்மீன்கள் தலையாட்டி பொம்மை போல மெதுவாக அசைவதைக் காணலாம். இந்த அசைவு, அந்த விண்மீனைச் சுற்றி வரும் கோளால் ஏற்படுகிறது. எனவே, விண்மீனின் இந்த அசைவைக் கொண்டு அதைச் சுற்றி வரும் கோள்களைக் கண்டுபிடிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில் விண்மீனின் அசைவை நம்மால் பார்க்க முடியாது. ஒரு கோள் பூமியைப் போல சிறியதாக இருந்தால், அது விண்மீனில் ஏற்படுத்தும் அசைவு மிகக் குறைவாக இருக்கும். அதை நாம் கண்டுபிடிக்க முடியாது.
ஆனால், அந்தக் கோள் விண்மீனின் ஒளியை மறைக்கும் ‘கண் சிமிட்டலை’ நாம் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் அந்தக் கோளைக் கண்டுபிடிக்கலாம். ஒரு கோள் நமது பார்வைக்கு நேராக, அதன் தாய் விண்மீனுக்குக் குறுக்கே கடந்து செல்லும்போது, அந்த விண்மீனின் ஒளி சிறிது நேரம் மங்குகிறது.
இது ஒரு தெரு விளக்கின் முன் ஒருவர் நடந்து செல்லும்போது ஒளி மறைப்பதைப் போன்றது. கோள் குறுக்கே கடந்து செல்லும்போது விண்மீனின் ஒளி மங்கி, கோள் விலகிச் சென்றதும் மீண்டும் அதன் இயல்பான பிரகாசத்திற்குத் திரும்பும்.
இந்த ‘கண் சிமிட்டும்’ நிகழ்வு ஒரு கோள் இருப்பதை நமக்குக் காட்டுகிறது. இதற்கு ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ அல்லது ‘டிரான்சிட்’ முறை என்று பெயர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் சுமார் மூன்று பங்கில் இரண்டு பங்குக்கும் அதிகமானவை இந்த முறையில்தான் கண்டறியப்பட்டுள்ளன.
எவ்வளவு ஒளி மங்குகிறது என்பதை வைத்து கோளின் அளவைக் கணக்கிடலாம். இரண்டு ‘கண் சிமிட்டல்களுக்கும்’ இடையில் உள்ள கால அளவைக் கொண்டு, அந்தக் கோள் விண்மீனை ஒரு முறை சுற்றி வர எவ்வளவு நேரம் ஆகும் (சுற்றுக்காலம்) என்பதைக் கண்டறியலாம்.
இந்த முறைக்கு ஒரு வரம்பு உண்டு. கோள் நமக்கும் விண்மீனுக்கும் நேராகக் குறுக்கே செல்ல வேண்டும். அப்போதுதான் விண்மீனின் ஒளி மங்கும். நமது பார்வையில் விண்மீனை மேலும் கீழும் சுற்றி வரும் கோள்கள் ஒளியை மறைக்காது. அதனால் விண்மீனின் பிரகாசத்தில் மாற்றம் ஏற்படாது. அத்தகைய கோள்களை இந்த முறையில் கண்டுபிடிக்க முடியாது.
விண்மீனுக்கு மிக அருகில் சுற்றி வரும் கோள்கள்தான் எளிதில் நமது பார்வைக்கு நேராக வந்து ஒளியை மறைக்கும். விண்மீனிலிருந்து வெகு தொலைவில் சுற்றி வரும் கோள்கள் ஒளியை மறைப்பது கடினம்.
எனவே, ‘குறுக்கீட்டு இடைமறிப்பு’ முறை பெரும்பாலும் குறுகிய சுற்றுக்காலம் கொண்ட கோள்களையும், பெரிய கோள்களையும் எளிதில் கண்டறிகிறது.
இதுவரை 2,500க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‘தள்ளாட்டம்’ (ரேடியல் வெலாசிட்டி) மற்றும் ‘கண் சிமிட்டல்’ (டிரான்சிட்) ஆகிய இரண்டு முறைகள் மூலம் இதுவரை சுமார் 94% புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 6% புறக்கோள்கள் வேறு சில முறைகளில் கண்டறியப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘நேரடி ஒளிப்படமெடுத்தல்’ (டைரக்ட் இமேஜிங்) ஆகும். நூற்றுக்கும் குறைவான கோள்களே இந்த முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
‘ஈர்ப்பு விசை ஒளிவிலகல்’ (கிராவிடேஷனல் மைக்ரோலென்சிங்) என்பது மற்றொரு முறை. ஒரு விண்மீன், அதற்கு வெகு தொலைவில் உள்ள மற்றொரு விண்மீனுக்கு முன்னால் கடந்து செல்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
முன்னால் உள்ள விண்மீனின் ஈர்ப்பு விசை, பின்னால் உள்ள விண்மீனின் ஒளியை ஒரு லென்ஸ் போல வளைக்கும். அந்த முன்னால் உள்ள விண்மீனுக்கு ஒரு கோள் இருந்தால், இந்த ஒளிவிலகலில் ஒரு திடீர் மாற்றம் ஏற்படும்.
அப்போது பின்னணி விண்மீனின் ஒளி திடீரெனப் பிரகாசமாகும். இந்த முறை மிகத் தொலைவில் உள்ள கோள்களையும், எந்த விண்மீனையும் சுற்றாமல் தனியாக மிதக்கும் கோள்களையும் கண்டறிய உதவுகிறது.
‘விண்மீன் இருப்பிட அளவியல்’ (ஆஸ்ட்ரோமெட்ரி) முறையிலும் கோள்களைக் கண்டுபிடிக்கலாம். ஒரு விண்மீனின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாக அளந்து, அதன் சிறிய அசைவை வானில் காண்பதுதான் இந்த முறை. இதுவரை மிகச் சில கோள்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால், அளவீட்டுக் கருவிகள் மேலும் துல்லியமாகும்போது, இந்த முறை முக்கியத்துவம் பெறலாம். ஒவ்வொரு புதிய புறக்கோள் கண்டுபிடிப்பும், நாம் தனியாக இல்லை என்பதையும், இந்த அண்டத்தில் வேறு பல சூரியக் குடும்பங்கள் உள்ளன என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இந்த அண்டத்தின் விசாலத்தையும், அதில் உள்ள ஒவ்வொரு கோளின் இயக்கத்தையும், விண்மீன்களின் ஒளியையும் இவ்வளவு துல்லியமாகப் படைத்து ஒழுங்குபடுத்திய இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் எண்ணிப் பார்ப்பது வியப்பளிக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் இறைவனின் படைப்பின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை