24) கடன் கொடுக்கல் வாங்களையும் கற்று தந்த நபிகளார்

நூல்கள்: நபிகளாரின் தனி தன்மைகள்

உஹதுப் போரில் ஜாபிர் (ரலி) அவர்களுடைய தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்தார்கள். அப்போது அவர்களுக்கு அதிக அளவில் கடன் இருந்தது. தந்தையின் கடனை அடைப்பதை முதன்மைக் கடமையாகக் கருதிய ஜாபிர் (ரலி) அவர்கள், அதற்காக முயற்சி செய்தார்கள். அவர்களிடம் ஒரு பேரீச்சந் தோட்டம் மட்டுமே இருந்தது. அதில் கனிகள் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், கடன் கொடுத்தவர்களை அணுகி, “என் தந்தை விட்டுச் சென்ற இந்தத் தோட்டத்தில் உள்ள பழங்களைப் பெற்றுக்கொண்டு கடனை முடித்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டினார்கள். ஆனால், பழங்களின் மதிப்பு கடனின் அளவுக்கு ஈடாகாது என்பதைக் கண்ட கடன் கொடுத்தவர்கள், அதை ஏற்றுக்கொண்டு கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார்கள்.

உடனே ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தந்தையின் கடனை அடைக்க விரும்புகிறேன்; எனவே கடன் கொடுத்தவர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களை அழைத்து, கடனில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினாலும் கூட, தங்களின் நிதி உரிமையை விட்டுத்தர மறுத்தவர்களும் இருந்தார்கள்.

உஹதுப் போர் நடந்த காலகட்டத்தில் பொது நிதி போதிய அளவில் இருக்கவில்லை. பிந்தைய காலத்தில் கருவூலத்தில் செல்வம் சேர்ந்தபோது, யாராவது கடனாளியாக மரணித்தால் அவர்களுடைய கடனை அரசாங்கமே அடைத்தது. ஆனால் ஆரம்ப காலத்தில், கடன்பட்ட ஒருவரின் ஜனாஸா கொண்டுவரப்பட்டால், “இவர் கடன்பட்டிருக்கிறாரா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். அவர் கடனை அடைக்க ஏதேனும் சொத்து விட்டுச் சென்றிருந்தால் அல்லது யாராவது அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் ஜனாஸா தொழுகையை நடத்துவார்கள். யாரும் பொறுப்பேற்கவில்லை என்றால் صَلُّوا عَلَى صَاحِبِكُمْ (உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்) என்று கூறிவிடுவார்கள். பிற்காலத்தில் செல்வம் பெருகியபோது, “ஒருவர் சொத்தை விட்டுச் சென்றால் அது வாரிசுகளுக்கு உரியது; கடனை விட்டுச் சென்றால் அதனை நான் அடைப்பேன்” என்று கூறி நபி (ஸல்) அவர்கள் அரசாங்கத்தின் மூலம் கடன்களை அடைத்தார்கள்.

உஹதுப் போரின்போது அந்த அளவுக்கு நிதி வசதி இல்லாததால் நபி (ஸல்) அவர்களால் பரிந்துரை மட்டுமே செய்ய முடிந்தது. கடன் கொடுத்தவர்கள் ஏற்க மறுத்ததும், நபி (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பழங்களை வகைப் பிரித்து அறுவடை செய்து வைக்குமாறு கூறினார்கள். அவ்வாறே செய்ததும், நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டு, “அனைவருக்கும் கொடுக்க வேண்டிய கடனை அளந்து கொடு” என்றார்கள். போதாது என்று கருதப்பட்ட அந்தப் பேரீச்சம்பழங்கள், அனைவருடைய கடனையும் அடைத்த பிறகு மிச்சமும் இருந்தது. இது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதத்தின் மூலம் கிடைத்த பரக்கத்தாகும். இந்தச் செய்தி புகாரியில் 2127 மற்றும் 2709 ஆகிய எண்களில் பதிவாகியுள்ளது.

ஒருவர் கடன்பட்டிருக்கும்போது நம்மால் முடிந்தால் கொடுத்து உதவலாம்; இயலவில்லை என்றால் கடன் கொடுத்தவர்களிடம் பேசி, “நெருக்கடி தராமல் இயன்றதை வாங்கிக்கொண்டு மீதத்தைத் தள்ளுபடி செய்யுங்கள்” என்று பரிந்துரைப்பதும் மார்க்கத்தில் ஒரு சிறந்த உதவியாகும்.

அதே நேரத்தில் கடன் வாங்குபவர்களிடம் பொறுப்புணர்வும், கடன் கொடுப்பவர்களிடம் அதனை முறையாக எதிர்கொள்ளும் தன்மையும் பல நேரங்களில் இருப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் கடனைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்துள்ளார்கள். தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் அவர்கள் அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ وَالمَغْرَمِ
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில், “இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று பிரார்த்திப்பார்கள்.
(புகாரி)

இதைக் கேட்ட ஒரு தோழர், مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ المَغْرَمِ يَا رَسُولَ اللَّهِ (நபி (ஸல்) அவர்களே! நீங்கள் கடனிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுகிறீர்களே?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், أَنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ (ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால்…) அவன் கடன் கொடுத்தவரை எதிர்கொள்ளும்போது பொய் பேசுவான்; வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவான் என்று விளக்கமளித்தார்கள்.

கடன் என்பது ஒரு மனிதனைப் பொய் சொல்வதற்கும் வாக்குறுதியை மீறுவதற்கும் தூண்டுகிறது. கடன் கொடுத்தவரிடமிருந்து தப்புவதற்காக வீட்டிலேயே இருந்துகொண்டு இல்லை என்றும், ஊரிலேயே இருந்துகொண்டு வெளியூரில் இருப்பதாகவும் பொய் சொல்ல நேரிடுகிறது. எனவே வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படும்போது கடன் வாங்காமல் பொறுத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்க வேண்டும். கடன் இல்லாமல் வாழ்ந்தால் சிறிது சிரமம் இருந்தாலும் நிம்மதியும் சுயமரியாதையும் மானமும் காக்கப்படும். கடன் வாங்கிவிட்டால் அந்த நிம்மதி பறிபோய்விடும்.

மேலும், கடன் தம்மை மிகைத்துவிடக் கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
இறைவா! கடன் என்னை மிகைத்து விடுவதை விட்டும் உன்னிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்.
(நஸயீ)

நபி (ஸல்) அவர்களும் தேவை ஏற்பட்டபோது கடன் வாங்கியுள்ளார்கள். ஆனால், தம்மை மிகைத்துவிடும் அளவுக்கு, அதாவது திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு ஒருபோதும் வாங்க மாட்டார்கள். குறிப்பிட்ட அவகாசத்தில் திருப்பிச் செலுத்த முடியும் என்ற நிலை இருக்கும்போது மட்டுமே வாங்குவார்கள். எனவே, கடன் என்பது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடும் அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

“கடன் பட்டார் நெஞ்சம் போல்” என்பார்கள். கடன் பட்டுவிட்டால் யாருக்கும் நிம்மதியே இருக்காது. அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாவது என்பது மிகப்பெரிய அந்தஸ்து; அதில் ஒருவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. ஆனால், அந்த நிலையிலும் கடனை நபி (ஸல்) அவர்கள் விதிவிலக்காகக் குறிப்பிடுகிறார்கள்.

يُغْفَرُ… الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ يُكَفِّرُ كُلَّ شَيْءٍ إِلَّا الدَّيْنَ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுவது கடனைத் தவிர மற்ற அனைத்திற்கும் பரிகாரமாகும்.
(முஸ்லிம்)

ஒருவர் கடனோடு மரணித்து, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு ஷஹீதானாலும் அவருக்கு அந்தப் பெரிய அந்தஸ்து கிடைக்குமே தவிர, கடன் மன்னிக்கப்படாது. ஏனெனில், கடன் என்பது அல்லாஹ் சம்பந்தப்பட்ட உரிமை அல்ல; மனித உரிமையாகும். மறுமை நாளில் கடன் கொடுத்தவர் தனக்குரிய நியாயத்தைக் கேட்கும்போது, அங்கு காசு பணம் செல்லாது. கடன் கொடுத்தவருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது; அல்லாஹ் நீதியாளன். எனவே, கடன் தொகைக்கு ஈடாகக் கடனாளியின் நன்மைகள் எடுக்கப்பட்டு அவரிடம் கொடுக்கப்படும்; அல்லது கடன் கொடுத்தவரின் பாவங்கள் கடனாளியின் தலைமீது சுமத்தப்படும்.

மற்றொரு நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

يُغْفَرُ لِلشَّهِيدِ كُلُّ ذَنْبٍ إِلَّا الدَّيْنَ
கடனைத் தவிர ஷஹீதின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.
(முஸ்லிம்)

விருப்பத்தோடு வாங்குவதற்கே இந்தக் கதி என்றால், ஏமாற்றுவதும் மோசடி செய்வதும் அதைவிடக் கொடியவை. மனிதன் மனிதனுக்குச் செய்யக்கூடிய தவறுகளில் மிகக் குறைந்தபட்சமான கடனே மன்னிக்கப்படாது எனும் போது, மோசடியும் தில்லுமுல்லும் ஒருபோதும் மன்னிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைப் பற்றி மக்களுக்கு ஆர்வமூட்டி உரை நிகழ்த்தினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ تُكَفَّرُ عَنِّي خَطَايَايَ (நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் எனது பாவங்கள் பரிகாரமாகுமா?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், نَعَمْ (ஆம்), إِنْ قُتِلْتَ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْتَ صَابِرٌ مُحْتَسِبٌ مُقْبِلٌ غَيْرُ مُدْبِرٍ (நீர் பொறுமையோடும், நன்மையை நாடியும், பின்வாங்காமல் முன்னோக்கியவராக அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால் பரிகாரமாகும்) என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் செல்லும்போது, நபி (ஸல்) அவர்கள் அவரை மீண்டும் அழைத்து, என்ன கேட்டீர் என்று திரும்பக் கேட்டுவிட்டு, “கடனைத் தவிர; இதனை என்னிடம் ஜிப்ரீல் கூறினார்” என்று தெரிவித்தார்கள். கடன் என்பது மனித உரிமை; பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் திடீரென, “சுப்ஹானல்லாஹ்! எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இறங்கியிருக்கிறது!” என்று கூறினார்கள். அது மிக பாரதூரமான விஷயமாக இருக்குமோ என்ற தயக்கத்தில் நபித்தோழர்கள் அன்றைய தினம் அது குறித்து ஏதும் கேட்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். மறுநாள் வந்ததும், “நேற்று கடுமையான எச்சரிக்கை இறங்கியதாகக் கூறினீர்களே, அது என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒரு மனிதன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டாலும் கூட, அவன் மீது கடன் இருக்குமானால், அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை அவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் மூன்று முறை ஷஹீதாவதெல்லாம் நடைமுறையில் நடக்காத ஒன்று. எனினும், கடனின் கடுமையை விளக்குவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அவ்வளவு பெரிய தியாகத்தைச் செய்தாலும் கடன் அடைக்கப்படும் வரை சொர்க்கம் செல்ல முடியாது. அவர் சார்பாக அவருடைய பிள்ளைகளாவது அந்தக் கடனை அடைக்க வேண்டும்; கடன் அடைக்கப்படும் வரை மன்னிப்பு கிடையாது.

ஆனால், இன்று கடன் வாங்குவதை மக்கள் மிகச் சாதாரணமாக எண்ணுகிறார்கள். நவீன காலத்தில் கடன் அட்டை போன்ற வசதிகள் வந்துவிட்டதால், தங்களுடைய சக்திக்கு மீறி கடனை வாங்கிக் குவித்துவிடுகிறார்கள். இறுதியில் கடனைக் கொடுக்க முடியாமல், வட்டியையும் சேர்த்துச் சுமக்கிறார்கள். வாங்கும்போதே திருப்பிச் செலுத்த முடியாது என்று தெரிந்தே பலர் கடன் வாங்குகிறார்கள். ஒரு கடனை அடைக்க இன்னொருவரிடம் அதிகக் கடன் வாங்குவது என கடனை அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

கடன் வாங்கிய நிலையிலேயே மரணம் வந்துவிட்டால் என்னாவது? மரணம் எந்த நேரத்திலும் வரலாம். நாம் மரணித்துவிட்டால் நமது பிள்ளைகள் அந்தக் கடனை அடைப்பார்களா என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கடன் தீர்க்கப்படாவிட்டால் மறுமையில் நமது தொழுகை, நோன்பு போன்ற நன்மைகள் கடன் கொடுத்தவருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். நமது நற்செயல்களைக் கொடுத்துத்தான் அந்தக் கடனைத் தீர்க்க முடியும் என்பதால், கடன் விஷயத்தில் மிகவும் பயப்பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்:

مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ مِنَ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ
பெருமை, மோசடி, கடன் ஆகிய மூன்றை விட்டும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரியுமானால் அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
(திர்மிதி)

எனவே, சொர்க்கத்தை நாடக்கூடிய முஸ்லிம்கள் கடன் வாங்குவதைத் தவிர்த்து வெகுதூரம் விலகி இருக்க வேண்டும். பெற்றோரின் மருத்துவ சிகிச்சை போன்ற தள்ளிப்போட முடியாத அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே கடன் வாங்கலாம். ஆனால், மூன்று வேளை உணவை இரண்டு வேளையாகக் குறைத்துக் கொள்வது, பிரியாணிக்குப் பதிலாகக் கஞ்சி குடிப்பது எனச் செலவுகளைக் குறைத்துச் சமாளிக்கக்கூடிய விஷயங்களுக்கெல்லாம் கடன் வாங்கக் கூடாது. வீடு கட்டுவதற்காகப் பத்து இலட்சம் ரூபாய் கடன் வாங்குவது அத்தியாவசியமான ஒன்றா? குடிசையிலோ வாடகை வீட்டிலோ வாழ்ந்துவிட்டுப் போகலாம்; அல்லாஹ் வசதி தரும்போது கட்டிக்கொள்ளலாம். திருப்பிச் செலுத்த வழியில்லாத நிலையில் இருக்கும்போது அவ்வாறு கடன் வாங்கக் கூடாது.

பத்து லட்சம் அல்லது இருபத்தைந்து லட்சம் ரூபாய் எனத் திரட்டி சேமிக்க இயலாதவர்கள், வீடு கட்டுவது போன்ற காரியங்களுக்காக மிக எளிதாகப் பெருந்தொகையைக் கடனாக வாங்குகிறார்கள். மருத்துவச் செலவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் வாங்குபவர்கள் மிகக் குறைவு; ஆனால் பெரும்பாலானோர் தவிர்த்திருக்க வேண்டிய தேவையற்ற காரியங்களுக்காகவே கடன் வாங்குகிறார்கள். ஒரு சலவை இயந்திரம் வாங்க வேண்டும் என்றால், கையில் பணமிருந்தால் வாங்கலாம்; இல்லையென்றால் வசதி இல்லாத மற்ற மனிதர்களைப் போல எளிய வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். கடன் கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கி நிம்மதியை இழக்கக் கூடாது. அப்படி வாங்கினால் உழைக்கும் வருமானம் முழுவதுமே கடனை அடைப்பதற்கே சரியாகிவிடும்; இறுதியில் வட்டியிலும் போய் விழ நேரிடும்.

கடனை அடைப்பதன் அவசியத்தை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழமாக வலியுறுத்தியுள்ளார்கள். உஹுத் மலையளவு தங்கம் தமக்குக் கிடைத்தாலும், அதில் கடனை அடைப்பதற்காக எடுத்து வைக்கும் தொகையைத் தவிர மற்ற அனைத்தையும் தர்மம் செய்துவிடுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடன் இருந்தால் நற்செயல்களை விடவும் கடனை அடைப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

لَوْ كَانَ لِي مِثْلُ أُحُدٍ ذَهَبًا إِلَّا شَيْئًا أَرْصُدُهُ لِدَيْنٍ
எனக்கு உஹுத் மலையளவு தங்கம் இருந்தாலும், கடனுக்காக நான் எடுத்து வைப்பதைத் தவிர மற்ற அனைத்தையும் தர்மம் செய்துவிடுவேன்.
(புகாரி)

ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொத்துக்களை வாரிசுகள் பிரித்துக் கொள்வதற்கு முன்பாக, அவர் விட்டுச் சென்ற கடனையும் வாரிசு அல்லாதோருக்கு அவர் செய்த மரண சாசனத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் கூறுகிறது. இறந்தவர் செய்யச் சொன்ன மரண சாசனத்தையும், அவர் தரவேண்டிய கடனையும் அடைத்த பிறகே மீதமுள்ள சொத்து வாரிசுகளுக்கு உரியதாகும்.

مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِي بِهَا أَوْ دَيْنٍ
அவர் செய்த வசீயத்தை நிறைவேற்றிய பிறகும், கடனை அடைத்த பிறகுமே (பாகப்பிரிவினை செய்யப்பட வேண்டும்).
(அல்குர்ஆன்: 4:11)➚

வாரிசுகளுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுப்பதற்கு முன்பாகவே கடனை அடைக்க வேண்டும் என்று மார்க்கம் கட்டளையிடுவதிலிருந்தே கடன் விஷயத்தில் நாம் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டால், அதைத் திருப்பிச் செலுத்தும் தெளிவான திட்டத்துடனும் நேர்மையான நோக்கத்துடனும் அணுக வேண்டும். சொத்துக்கள் ஏதேனும் இருந்தால் அதை விற்றாவது கொடுத்துவிடலாம் என்ற மனநிலையாவது இருக்க வேண்டும். கடன் வாங்கும்போதே அதை எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என்ற தீவிர உறுதியோடு செயல்படுபவருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

مَنْ أَخَذَ دَيْنًا وَهُوَ يُرِيدُ أَنْ يُؤَدِّيَهُ أَعَانَهُ اللَّهُ
கடனை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு எவர் அதைப் பெறுகிறாரோ, அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான்.

கடன் வாங்கும்போதே அதை ஏமாற்றும் நோக்கத்துடன் ஒருபோதும் வாங்கக் கூடாது. செலவுகளைக் கட்டுப்படுத்தி எப்படியாவது அதை அடைத்துவிட வேண்டும் என்ற உறுதியான நோக்கம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் மனைவிமார்களுக்கு அரசு மானியம் கிடைத்தபோதும், மைமூனா (ரலி) அவர்கள் அநாவசியச் செலவுகளைக் குறைத்து கடனை அடைக்க முயன்றார்கள்; நபி (ஸல்) அவர்கள் கூறிய அல்லாஹ்வின் உதவியை மட்டுமே நம்பிச் செயல்பட்டார்கள். எனவே, கடன் கிடைக்கிறது என்பதற்காக அலட்சியமாக வாங்கக் கூடாது. வேறு வழியற்ற நிலையிலும், இறைவா இதை அடைப்பதற்கு நீ வழியைத் திறந்துவிடு என்ற தூய எண்ணத்தோடு கடனை வாங்கினால், அல்லாஹ் நினையாத புறத்திலிருந்து உதவி செய்வான்.

அவசியமற்ற ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்குவதைத் தவிர்த்து, தவிர்க்க முடியாத சூழலில் கடன் வாங்க நேரிட்டாலும் அதைத் திருப்பிச் செலுத்தியே தீருவது என்ற தூய எண்ணத்தோடு செயல்படுவதே அல்லாஹ்வின் உதவியையும் அமைதியான வாழ்வையும் பெற்றுத்தரும்.

கடன் விஷயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் பல்வேறு எச்சரிக்கைகளைச் செய்துள்ளார்கள். பொதுவாக ஒருவர் தனது சொந்தத் தேவைக்காகக் கடன் வாங்கிவிட்டு, அதிலிருந்து விடுபட முயற்சிப்பது சாத்தியமானது. ஆனால் சிலர் தங்களின் சொந்தத் தேவைக்காகக் கடன் வாங்காமல், பிறருடைய விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டு ஏமாந்து கடனாளியாகி விடுகிறார்கள். இத்தகைய விவகாரங்களில் நாம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

குறிப்பாக, சங்கிலித் தொடர் வியாபாரங்களில் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் குறிப்பிட்ட பங்கும், அவர்கள் விற்கும் பொருள்களுக்குக் கமிஷனும் தருவதாகக் கூறி ஆட்களைச் சேர்க்கச் சொல்வார்கள். அதற்கென ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் ஒரு தொகையை வசூலிப்பார்கள். அடுத்தவர்களின் நாணயத்தை நம்பி நாம் ஆட்களைச் சேர்த்துவிடும்போது, எதிர்பாராதவிதமாக அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டால் பணம் கொடுத்தவர்கள் நம்மைத்தான் வந்து நெருக்குவார்கள். நாம் பரிந்துரைத்ததை நம்பியே பணத்தைக் கொடுத்ததாகக் கூறி நம்மிடம் கேட்பார்கள். இவ்வாறு அடுத்தவர்களை நம்பி ஆட்களைச் சேர்த்துவிடுவதால்தான் பலர் கடனாளியாக மாறுகிறார்கள். யாரையும் இந்த அளவுக்கு கண்மூடித்தனமாக நம்புமாறு மார்க்கம் நமக்குக் கற்றுத்தரவில்லை.

அதேபோன்று, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் தருவதாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் சிலர் வெளியிடுகிறார்கள். முதலீட்டாளர்களைக் கொண்டுவரும் இடைத்தரகர்களுக்கு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கமிஷன் தருவதாக ஆசை காட்டுகிறார்கள். இந்தச் சிறிய கமிஷனுக்கு ஆசைப்பட்டு, பலரிடமும் பேசி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் பணத்தை வாங்கி அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். நடைமுறையில் எந்த ஒரு நேர்மையான வியாபாரத்திலும் ஒரு லட்ச ரூபாய்க்கு பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் லாபத்தை உத்தரவாதமாகத் தர முடியாது. முதலீட்டாளர்களை ஈர்த்துப் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவதற்காகவே இத்தகைய போலி நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு ஏமாற்றிவிட்டு ஓடிப்போன நிறுவனங்களால் பல நூறு கோடிகளை இழந்து மக்கள் தவிக்கிறார்கள். இத்தகைய திட்டங்களுக்கு நாம் இடைத்தரகராக இருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்கும்போது, அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டால் பணம் கொடுத்தவர்கள் நம்மைத்தான் பொறுப்பாளியாக்கி நெருக்குவார்கள்; பஞ்சாயத்துகளுக்கும் வழக்குகளுக்கும் இழுப்பார்கள்.

ஒரு மனிதன் ஒருவரை நம்பித் தனது சொந்தப் பணத்தைப் போட்டு ஏமாந்தால் அந்த இழப்பு அவனோடு முடிந்துவிடும். ஆனால், ஒரு நிறுவனத்தை நம்பி அடுத்தவர்களையும் அதில் முதலீடு செய்ய வைத்தால், அந்த நிறுவனம் ஏமாற்றும் போது முதலீடு செய்தவர்கள் நம்மைத்தான் கடனாளியாக்குவார்கள். நாம் சுயமாக வாங்கும் கடனை விட்டு எவ்வாறு விலகியிருக்க வேண்டுமோ, அதேபோன்று அடுத்தவர் விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டு இழுத்துப் போட்டுக் கொள்ளும் கடனையும் தவிர்க்க வேண்டும். கடனாளியாக இருக்கும் நிலையை மார்க்கம் கடுமையாக எச்சரித்துள்ள சூழலில், இத்தகைய வழிகளில் நாம் கடனாளியாவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் எதிர்காலத் திட்டம் என்று ஆசை காட்டும் எந்தவொரு அமைப்பிலும் அடுத்தவர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குழுக்கள் சீட்டு நடத்துவதிலும் பலர் பாதிக்கப்பட்டு கடனாளியாகிறார்கள். உதாரணமாக, இருபது பேரைச் சேர்த்து ஆளுக்கு ஒரு லட்சம் வீதம் வசூலித்து, ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் ஒருவருக்கு இருபது லட்ச ரூபாயை வழங்குவார்கள். இதில் முதல் மாதத்திலேயே குலுக்கலில் சீட்டு விழுந்து தொகையைப் பெற்றுக்கொண்ட ஒருவர், அடுத்தடுத்த மாதங்களில் தனக்குரிய பங்கைக் கட்டாமல் ஓடிவிட்டால், அந்த இழப்புக்கு அதை முன்னின்று நடத்தும் நபரே பொறுப்பாகிவிடுகிறார். அவர் மோசடி செய்யாவிட்டாலும், பிறர் ஏமாற்றிவிட்ட காரணத்தால் அவர் பிறருக்குப் பதில் சொல்ல வேண்டிய கடனாளியாக மாறிவிடுகிறார். ஒரு உதவியாகவோ சேவையாகவோ இதைச் செய்தாலும் கூட, இதில் வரும் நஷ்டமும் கடனும் அவரைத்தான் வந்து சேரும்.

அதேபோல் ஏலச்சீட்டு என்பதும் முற்றிலும் மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வட்டியாகும். வசூலான தொகையை ஏலம் விட்டு, அந்தத் தொகைக்கு அதிகமாகத் திருப்பித் தருவதாகக் கூறுவது வட்டியின் கீழ் வரும். அத்துடன், இதில் யாராவது பணத்தைக் கட்டாமல் ஏமாற்றிவிட்டுச் சென்றாலும் அந்தச் சீட்டை நடத்துபவரே அதற்கு முழுப் பொறுப்பாளியாகி விடுகிறார். எனவே நேரடியாகக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது போன்றே, நம்மை மறைமுகமாகக் கடனாளியாக்கும் இத்தகைய நடைமுறைகளையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கும் சிலர் இடைத்தரகர்களாகச் செயல்படுகிறார்கள். தங்களுக்குக் கிடைக்கும் சிறிய கமிஷன் தொகைக்காக ஆட்களைப் பிடித்துக் கொடுப்பார்கள். ஆனால் வெளிநாடு சென்ற பிறகு வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமல் குறைந்த ஊதியத்திற்கு அற்பமான வேலைகளில் அவர்கள் தள்ளப்படுவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத்தரகராக இருந்தவர்களையே பிடித்துப் பணத்தைக் கேட்பார்கள். எனவே அடுத்தவர்களின் வர்த்தகத்திற்காக ஆட்களைப் பிடித்துத் தருவதையோ, பங்குகளைச் சேர்த்துத் தருவதையோ நாம் செய்யக்கூடாது. நமக்கு ஒரு நிறுவனத்தின் மீது நம்பிக்கை இருந்தால் நாம் செல்லலாமே தவிர, அடுத்தவர்களை அதில் மாட்டிவிட்டு நாம் கடனாளியாகக் கூடாது.

ஹஜ் பயணத்திற்கு ஆட்களை அனுப்புவதிலும் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இன்று ஹஜ் சேவை நடத்துபவர்களில் பெரும்பாலானோருக்கு அரசு அங்கீகாரமோ முறையான உரிமமோ இருப்பதில்லை. மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்ற பெரிய நிறுவனங்களை நம்பி, அவர்களிடம் பேசிச் சில இடங்களை ஒதுக்கிக் கொள்வார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களுக்கு நேரடியாக வாடிக்கையாளர்கள் கிடைக்கும்போது, இடைத்தரகர்களாக இருப்பவர்களுக்கு இடங்களைத் தராமல் நிராகரித்து விடுவார்கள். இதனால் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு மக்களிடம் லட்சக்கணக்கில் முன்பணம் வாங்கியவர்கள் கடைசி நேரத்தில் பொதுமக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் கடனாளியாக நிற்கும் சூழல் ஏற்படுகிறது.

ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதாகப் பணம் பெற்றுக்கொண்டு, மக்களை பம்பாயில் கொண்டுபோய் இறக்கிவிட்டு ஏமாற்றிய சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளன. அங்கு அவர்களை இறக்கிவிட்டு, “உங்களுக்கு டிக்கெட் இல்லை; இங்கேயே ஜம்ஜம் தண்ணீர் விற்கிறது, அதை வாங்கிக்கொண்டு ஹஜ்ஜுக்குச் சென்று வந்ததாகச் சொல்லிக்கொள்ளுங்கள்” என்றெல்லாம் கூறி ஏமாற்றுகிறார்கள். அடுத்தவர் நம்மை ஏமாற்றிவிடும் வாய்ப்புள்ள இதுபோன்ற தொழில்களை நாம் செய்யவே கூடாது. நாமே நேரடியாகச் செய்து, முழுப் பொறுப்பையும் நாமே ஏற்கும் தொழில்களையே செய்ய வேண்டும். அடுத்தவரை நம்பி இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தொழில்களில், அவர்கள் நல்லவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை; ஆனால் மோசடி செய்பவர்களாக இருந்தால் நாமே கடனாளியாகிப் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

ஆகவே, நேரடியாகக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது போலவே, இதுபோன்ற விவகாரங்களில் சிக்கி கடனாளியாவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும். தரகர் பணிகளிலும் போலி விவகாரங்களுக்குத் தரகராக இருந்துவிடக் கூடாது. ஒருவருடைய சொத்தை விற்றுக் கொடுக்கும் தரகுத் தொழில் மார்க்கத்தில் தவறல்ல. ஆனால், ஒருவர் போலிப் பத்திரம் தயாரித்து அடுத்தவரின் சொத்தைத் தன் சொத்தாகக் காட்டி விற்க முயலும்போது, விவரம் தெரியாமல் நாம் அதில் தரகராகச் செயல்பட்டால் மோசடி வழக்கில் நாமும் சிக்கிக்கொள்ள நேரிடும். எனவே, பிறரை நம்பிச் செய்யும் தொழில்களில் அடுத்தவர்களைக் கோர்த்துவிடக் கூடாது. நமக்கு நம்பிக்கை இருந்தால் நாம் ஈடுபடலாமே தவிர, மற்றவர்களை இதில் ஈடுபடுத்தினால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கும் நாம் பொறுப்பாளியாகிச் சட்டப்படி வழக்குகளைச் சந்திக்க நேரிடும். எனவே, நம்மை கடனில் தள்ளக்கூடிய அனைத்துக் காரியங்களிலிருந்தும் விலகி நிற்பதே மறுமைக்குப் பாதுகாப்பானது.

கடன் கொடுப்பது தொடர்பான அழகிய வழிகாட்டுதலையும் மார்க்கம் நமக்குத் தருகிறது. இன்றைய பொருளாதாரக் கணக்கீட்டின்படி பார்த்தால், ஒருவருக்குக் கடன் கொடுப்பது நஷ்டமாகவே தெரிகிறது. ஒருவருக்கு இன்று ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுத்து, அவர் மூன்று ஆண்டுகள் கழித்து அதைத் திருப்பிக் கொடுக்கும்போது, அதன் மதிப்பு குறைந்துவிடுகிறது. கடன் கொடுக்கும்போது ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு பவுன் தங்கம் வாங்க முடிந்தால், மூன்று ஆண்டுகள் கழித்து அவர் திருப்பிக் கொடுக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கமே வாங்க முடிகிறது. பணவீக்கத்தினால் காகிதப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதே இதற்குக் காரணம். தங்கம் போன்ற இயற்கையான மதிப்புள்ள பொருள்களுக்கு இந்நிலை ஏற்படுவதில்லை; அரசாங்கத்தின் அனுமதியைச் சார்ந்திருக்கும் காகிதப் பணத்திற்கே இந்நிலை ஏற்படுகிறது. இதனால் கடன் கொடுப்பவருக்கு ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்கவே சிலர் வட்டி கேட்கிறார்கள்.

ஆனால், கடன் கொடுப்பதால் இவ்வுலகில் நஷ்டம் ஏற்பட்டாலும் மறுமையில் மிகப்பெரிய நன்மை இருக்கிறது என்பதை இஸ்லாம் கற்றுத்தருகிறது. சிரமத்தில் உள்ள ஒருவருக்குக் கடன் கொடுத்து நாம் அவகாசம் அளிக்கும்போது, நாம் நிர்ணயித்த தவணைக் காலம் முடியும் வரை ஒவ்வொரு நாளும் அத்தொகையை தர்மம் செய்த நன்மை நமக்குக் கிடைக்கிறது. பத்தாயிரம் ரூபாயை நேரடியாகத் தர்மம் செய்தால் ஒரு முறை தர்மம் செய்த நன்மை மட்டுமே கிடைக்கும்; ஆனால் பத்தாயிரம் ரூபாயை ஒரு மாதத் தவணையில் கடனாகக் கொடுத்தால், அந்த முப்பது நாட்களும் தினமும் பத்தாயிரம் ரூபாயைத் தர்மம் செய்த நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.

مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَهُ صَدَقَةٌ
சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பவருக்கு, ஒவ்வொரு நாளும் அத்தொகையை தர்மம் செய்த நன்மை உண்டு.
(அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறும்போது, கடன் பட்டவருக்கு அவகாசம் அளிப்பவருக்கு ஒவ்வொரு நாளும் இரு மடங்கு நன்மை உண்டு எனக் குறிப்பிட்டார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள், ஒரு முறை ஒரு மடங்கு என்றும் மற்றொரு முறை இரு மடங்கு என்றும் கூறியதன் விளக்கம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கப்பட்ட தவணை முடிவதற்குள் கொடுக்கும் அவகாசத்திற்கு ஒரு மடங்கு நன்மையும், தவணை முடிந்த பிறகும் அவரால் திருப்பித் தர இயலாதபோது அவருக்குக் கூடுதல் அவகாசம் அளித்தால் ஒவ்வொரு நாளும் இரு மடங்கு நன்மையும் கிடைக்கும் என்று விளக்கமளித்தார்கள். ஓர் ஆண்டு தவணையில் ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தால், அந்த 365 நாட்களும் தினமும் ஆயிரம் ரூபாய் தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது; தவணை முடிந்த பிறகு அவரால் தர முடியாமல் மேலும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தால், அந்த நாட்களில் தினமும் இரண்டாயிரம் ரூபாய் தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது.

مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ
சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பவருக்கு, ஒவ்வொரு நாளும் அத்தொகையை இரு மடங்கு தர்மம் செய்த நன்மை உண்டு.
(அஹ்மத்)

எனவே, வசதி உள்ளவர்கள் கடன் கொடுப்பதை உலகியல் ரீதியான நஷ்டமாகப் பார்க்காமல், மறுமைக்கான வணக்கமாகவும் தர்மமாகவும் பார்க்க வேண்டும். கடனாகக் கொடுக்கும் தொகை திருப்பி வரத் தாமதமானாலும், தாமதமாகும் ஒவ்வொரு நாளும் மறுமையில் நன்மைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எனவே கடனாளியை நெருக்குதலுக்கு உள்ளாக்காமல் அவகாசம் அளிப்பது நம் மறுமை அந்தஸ்தை உயர்த்தும். கடன் கொடுத்துவிட்டு மன உளைச்சலுக்கும் தூக்கமின்மைக்கும் ஆளாகாமல், மறுமையின் நன்மையை எதிர்பார்த்து அதைக் கொடுக்க வேண்டும்.

முந்தைய சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, إِنَّ رَجُلًا كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ (உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார்) என்று குறிப்பிட்டார்கள். அவரது மரண வேளையில் மலக்குல் மவூத் வந்து, هَلْ عَمِلْتَ مِنْ خَيْرٍ (நீ ஏதேனும் நன்மை செய்திருக்கிறாயா?) என்று கேட்டார். அதற்கு அவர் தமக்கு எந்த நன்மையும் நினைவில் இல்லை என்றார். மலக்குல் மவூத் மீண்டும் யோசித்துப் பார்க்குமாறு கூறியபோது அவர், தாம் வியாபாரம் செய்து வந்ததாகவும், வசதியற்றவர்கள் கடன் கேட்டால் அவர்களுக்குக் கடன் கொடுத்ததாகவும் கூறினார்.

முன்பு வாழ்ந்த ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுக்கும்போது, வாங்கியவர் வசதியுள்ளவராக இருந்தால் அவருக்கு அவகாசம் கொடுப்பார்; வசதியற்றவராக இருந்தால், وَأَتَجَاوَزُ عَنِ الْمُعْسِرِ (சிரமப்படுபவரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுவேன்) என்று தள்ளுபடி செய்துவிடுவார். வியாபாரத்தில் கடன் கொடுக்கும்போது வசதியுள்ளவருக்குக் கூடுதல் கால அவகாசம் அளிப்பதையும், இயலாதவருக்குக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதையும் தவிர வேறு பெரிய நன்மைகள் எதனையும் அவர் செய்திருக்கவில்லை. ஆனால், அவருடைய இந்த ஒரு நற்செயலுக்காக فَأَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ (அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்தான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி: 3451) ➚.

இன்று பலர் கடன் கேட்டு அலைந்தாலும் மக்கள் கடன் கொடுக்கத் தயங்குகிறார்கள். கடன் கொடுப்பதன் மூலம் தங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்றும், கொடுத்த பணம் குறைந்துவிடுமே என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், மறுமையின் நன்மையை எதிர்பார்த்து தர்மம் செய்வதைப் போன்று கடன் கொடுப்பதையும் ஒரு தர்மமாக, ஓர் அறப்பணியாகக் கருத வேண்டும். நன்மையை நாடி பல காரியங்களுக்கு லட்சக்கணக்கில் நன்கொடைகள் கொடுப்பதுபோல, கடனையும் அல்லாஹ்வின் நன்மையை நாடி வழங்கினால் கடன் கொடுப்பதில் தயக்கம் இருக்காது.

அபூ கதாதா (ரலி) அவர்கள் ஒருவருக்குக் கடன் கொடுத்திருந்தார்கள். தவணை முடிந்தும் அவரால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால், அபூ கதாதா (ரலி) அவர்களைக் கண்டால் கடன் கேட்பாரோ என்று அஞ்சி அவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடிக் கண்டுபிடித்த அபூ கதாதா (ரலி) அவர்கள், கடன் கொடுக்காமல் ஓடி ஒளிவதற்கான காரணத்தைக் கேட்டார்கள். அதற்கு அவர், إِنِّي مُعْسِرٌ (நான் கஷ்டத்தில் இருக்கிறேன்), கடனை அடைக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை என்றார். “آللَّهِ? (அல்லாஹ்வின் மீதா?)” என்று அபூ கதாதா (ரலி) கேட்க, “آللَّهِ (அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் கஷ்டத்தில்தான் இருக்கிறேன்)” என்று அவர் பதிலளித்தார். அப்போது, கஷ்டப்படுகிறவருக்கு அவகாசம் அளித்தால் அல்லது கடனைத் தள்ளுபடி செய்தால் மறுமை நாளின் துன்பங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் கூறி, அவர் தர வேண்டிய கடனை அபூ கதாதா (ரலி) தள்ளுபடி செய்தார்கள்.

مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ فَلْيُنَفِّسْ عَنْ مُعْسِرٍ أَوْ يَضَعْ عَنْهُ
மறுமை நாளின் துன்பங்களிலிருந்து அல்லாஹ் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ, அவர் சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும் அல்லது கடனைத் தள்ளுபடி செய்யட்டும்.
(முஸ்லிம்: 1563) ➚

கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நம் தெரு, வீடு, கடைப் பக்கமே வராமல் ஒளிந்து திரிவதை நாம் பார்க்கிறோம். அவர்களை அழைத்து, நிலைமையை விசாரித்து, இயலவில்லை என்றால் அல்லாஹ்வுக்காக கடனை விட்டுக்கொடுக்க நாம் முன்வர வேண்டும்.

ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருக்கும்போது, அதை ஜகாத் கணக்கில்கூட கழித்துவிட முடியும். அல்குர்ஆனில் (9:60➚) ஜகாத் வழங்கப்பட வேண்டிய எட்டுப் பிரிவினரைக் குறிப்பிடும்போது, وَالْغَارِمِينَ (கடனாளிகள்) அவர்களுக்கும் ஜகாத் கொடுக்கலாம் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே, வசதியற்ற கடனாளிக்கு ஏற்கனவே கொடுத்த கடனை நம்முடைய ஜகாத்தில் கழித்துத் தள்ளுபடி செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.

இன்று மக்களிடம் கடன் கொடுக்கும் தன்மை குறைவாகவே காணப்படுகிறது. ஏழைகள் கடன் கேட்கும்போது வசதியுள்ளவர்கள் பல காரணங்களைக் கூறித் தட்டிக்கழிக்கிறார்கள். கடன் கொடுப்பது ஒரு தர்மம் என்பதையும், அதற்கென மறுமையில் மகத்தான நன்மை உண்டு என்பதையும் உணராததே இதற்குக் காரணம். வாங்கியவர் திருப்பித் தராவிட்டாலும் மறுமையில் அதற்கான கூலி நிச்சயம் கிடைக்கும் என்ற எண்ணம் இருந்தால் யாரும் கடன் கொடுக்கத் தயங்க மாட்டார்கள்.

கடன் கொடுப்பதையும் இயலாதவர்களின் கடனைத் தள்ளுபடி செய்வதையும் மறுமை நன்மையை நாடிச் செய்யும் தர்மமாகக் கருதி நாம் நடைமுறைப்படுத்தினால், சமுதாயத்தில் ஏழைகளின் பல பிரச்சினைகள் தீர்வு பெற்றுவிடும்.

கடன் வாங்கிய ஒருவர் எதிர்பாராதவிதமாக வெள்ளம், புயல், தீ விபத்து போன்ற பேரிடர்களினால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்கு ஆளாகும்போது, கடன் கொடுத்தவர்கள் அவருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் சிறந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் பேரீச்சந்தோட்ட விவசாயத்திற்காகக் கடன் வாங்கினார். விளைச்சல் வந்ததும் கடனை அடைத்துவிடுவதாக அவர் வாக்களித்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த விளைச்சல் முற்றிலும் நாசமாகிவிட்டதால் அவரால் கடனைச் செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பித் தருமாறு அவரிடம் நெருக்கடி கொடுத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனது நிலையை முறையிட்டார். அவரிடம் எதுவுமே இல்லாத சூழலைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தர்மம் செய்யுமாறு மக்களிடம் கூறினார்கள். மக்களும் தங்களால் இயன்ற தர்மத்தை வழங்கினார்கள்; எனினும் அது அவரது கடனை முழுமையாக அடைக்கும் அளவிற்குப் போதுமானதாக அமையவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களை அழைத்து, திரண்ட தொகையை அவரவர் கடனின் விகிதத்திற்கு ஏற்பப் பங்கிட்டு எடுத்துக்கொள்ளுமாறும், அதைத் தவிர வேறு எதையும் அவரிடம் கேட்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்தார்கள்.

تَصَدَّقُوا عَلَيْهِ فَتَصَدَّقَ النَّاسُ عَلَيْهِ فَلَمْ يَبْلُغْ ذَلِكَ وَفَاءَ دَيْنِهِ خُذُوا مَا وَجَدْتُمْ وَلَيْسَ لَكُمْ إِلَّا ذَلِكَ
இவருக்குத் தர்மம் செய்யுங்கள்; மக்களும் அவருக்குத் தர்மம் செய்தார்கள்; எனினும் அது அவரது கடனை நிறைவேற்றும் அளவுக்குத் திரளவில்லை; (அப்போது நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம்) உங்களுக்குக் கிடைத்ததை எடுத்துக்கொள்ளுங்கள், அதைத் தவிர உங்களுக்கு வேறு எதுவும் இல்லை என்று கூறினார்கள்.
(முஸ்லிம்: 1556) ➚

ஒருவர் தனது பொருளாதாரத்தை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், உடனே கடனை அடைக்குமாறு அவரை நெருக்கினால் அவரால் எதையும் செய்ய இயலாது. அத்தகைய சூழ்நிலையில் அவருக்கு அவகாசம் வழங்கி, பிற்காலத்தில் அவர் பொருளீட்டித் தரும் வரை பொறுத்திருக்க வேண்டும். அல்லது அவரிடம் எஞ்சியிருக்கும் தொகையைக் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்குள் பிரித்து எடுத்துக்கொண்டு அவரை விடுவித்துவிட வேண்டும். இன்று உலகெங்கிலும் நடைமுறையில் இருக்கும் திவால் சட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குவது நபி (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதல்தான். ஒருவர் முற்றிலும் நஷ்டமடைந்து தன்னிடம் எதுவும் இல்லை என்று நீதிமன்றத்தை நாடும்போது, அவரிடம் இருக்கும் சொத்துக்களைக் கணக்கிட்டு கடன் கொடுத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் இந்த நடைமுறையை நபி (ஸல்) அவர்களே முதன்முதலில் செயல்படுத்திக் காட்டினார்கள்.

எனவே, ஒருவர் உண்மையாகவே அனைத்தையும் இழந்துவிட்டு கடனை அடைக்க வழியின்றி இருக்கிறார் என்பது உறுதியானால், கடன் கொடுத்தவர்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். வசதியை மறைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்களை விடுத்து, அல்லாஹ்வின் மீது பயபக்தி கொண்டு உண்மையிலேயே எல்லாவற்றையும் இழந்துவிட்ட நபர்களிடம் நாம் கருணை காட்ட வேண்டும்.

இதேபோன்று, பள்ளிவாசலில் கஅப் இப்னு மாலிக் அவர்களுக்கும் அபூ ஹத்ரத் அவர்களுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. கஅப் இப்னு மாலிக் கொடுத்த கடனைத் திருப்பித் தரும்படி அபூ ஹத்ரத்திடம் வற்புறுத்தினார். அவராலோ முழுத் தொகையையும் உடனடியாகத் தர இயலவில்லை, பாதியை மட்டுமே தரக்கூடிய சூழலில் இருந்தார். அவர்களின் கடுமையான சப்தத்தைக் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த நபி (ஸல்) அவர்கள், கஅப் இப்னு மாலிக் அவர்களை அழைத்து, கடனில் பாதியைத் தள்ளுபடி செய்துவிடுமாறு சைகை காட்டினார்கள். கஅப் இப்னு மாலிக் அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு பாதித் தொகையைத் தள்ளுபடி செய்தார்.

மனிதர்கள் என்ற அடிப்படையில் எவருக்கும் இத்தகைய இக்கட்டான சூழல் ஏற்படலாம். முறையாக அடைத்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் கடன் வாங்கிய ஒரு சகோதரர் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும்போது, அவருக்காக நாம் விட்டுக் கொடுப்பது மிகுந்த நன்மையை ஈட்டித் தரும். மறுமையில் அவரிடமிருந்து அந்தப் பாக்கியைப் பெற்றுக்கொள்வதை விட, இவ்வுலகிலேயே அவருக்காகத் தள்ளுபடி செய்து கருணை காட்டினால், அல்லாஹ் அதற்குப் பகரமாக மறுமையில் பன்மடங்கு நன்மைகளையும் சொர்க்கத்தையும் வழங்குவான். முந்தைய சமுதாயத்தில் ஒருவர், வசதியற்ற கடனாளிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்த காரணத்தினாலேயே அல்லாஹ் அவருக்கு மன்னிப்பும் சொர்க்கமும் வழங்கியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதே சமயம், கடன் வாங்குபவர்களுக்கும் இதில் முக்கியமான கடமை இருக்கிறது. கடன் வாங்கும் நேரத்தில் தங்கள் வறுமையையும் கஷ்டங்களையும் கூறி, பரிதாபத்தை ஏற்படுத்திக் கடன் வாங்குகிறார்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வரும்போது, கடன் கொடுத்தவரைச் சந்திக்காமல் தலைமறைவாகி விடுகிறார்கள். அவ்வாறு பிடிபட்டுவிட்டால் கூட முறையாகப் பேசுவதில்லை.

கடன் வாங்கிய சிலர், வாங்கிய ஆரம்பத்தில் “நான் எங்கே போய்விடப் போகிறேன்? நம்பிக்கை இல்லையா?” என்று கூறிவிட்டு, பின்னர் “நான் எப்போது வாங்கினேன்? ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்கும் நிலையைப் பார்க்கிறோம். கஷ்டமான நேரத்தில் உதவி செய்தவரை, கடன் வாங்கியவரே “பணம் தர முடியாது, எந்த நீதிமன்றத்திற்குச் செல்வாய்?” என்று மிரட்டக்கூடிய அளவிற்குக் கூட நிலைமை மாறிவிடுகிறது. உதவி பெற்றதை மறந்து, கடன் வாங்கியவர்கள் திமிராகவும் மமதையாகவும் நடக்கும் காட்சியை நாம் காண்கிறோம்.

நாம் கடன் வாங்கிவிட்டால், கடன் கொடுத்தவர் அதைக் கேட்கும்போது அவரிடம் பணிந்துதான் போக வேண்டும். அவர் கோபப்பட்டுத் திட்டினாலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை உணர்ந்து அதைத் தாங்கிக்கொள்ள வேண்டும். பொதுவாக, யாரேனும் நம்மிடம் வரம்பு மீறினால் அவருக்கு அதே அளவுக்குப் பதிலடி கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு; எனினும் மன்னித்து விடுவதே சிறந்தது.

فَمَنِ ٱعْتَدَىٰ عَلَيْكُمْ فَٱعْتَدُوا۟ عَلَيْهِ بِمِثْلِ مَا ٱعْتَدَىٰ عَلَيْكُمْ
உங்களிடம் எவரேனும் வரம்பு மீறினால், அவர் உங்கள் மீது வரம்பு மீறிய அளவுக்கு நீங்களும் அவர் மீது வரம்பு மீறுங்கள்.
(அல்குர்ஆன்: 2:194)➚

ஆனால், கடன் கொடுத்தவரிடம் பதிலுக்குப் பதில் பேசும் இந்த அனுமதி கடன் வாங்கியவருக்குக் கிடையாது. கடன் கொடுத்தவர் கோபத்தில் கடுமையான வார்த்தைகளால் பேசும்போது நமக்குக் கோபம் வந்தாலும், நாம் வாங்கிய கடனை இன்னும் திருப்பித் தராததால் தவறு நம் மீதுதான் இருக்கிறது என்பதை உணர்ந்து அடங்கிப் போக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

ஒரு பொதுக் காரியத்திற்காக நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் ஓர் ஒட்டகத்தைக் கடனாகப் பெற்றார்கள். ஜகாத் ஒட்டகங்கள் வந்தவுடன் திருப்பித் தருவதாகக் கூறி வாங்கினார்கள். ஆனால், குறிப்பிட்ட தவணை முடிந்தும் ஜகாத் ஒட்டகங்கள் வந்து சேராததால் நபி (ஸல்) அவர்களால் அதை உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதைக் கேட்பதற்காக வந்த கடன் கொடுத்தவர், நபி (ஸல்) அவர்கள் என்றும் பாராமல், பொதுக் காரியத்திற்காக வாங்கப்பட்டது என்பதையும் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் فَأَغْلَظَ لَهُ (கடுமையாக நடந்து கொண்டார்) என்று ஹதீஸில் வரும் அளவிற்கு மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசித் திட்டினார்.

நபி (ஸல்) அவர்களை அவர் கடுமையாக ஏசுவதைக் கண்ட தோழர்கள் கோபமடைந்து, அவர் மீது பாயத் தயாரானார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் தம்மை எதிர்த்துப் பேசியவருக்கு எந்த மறுமொழியும் கூறாமலும், தங்களின் தகுதியைக் காட்டி வாதாடாமலும், தோழர்களைத் தடுத்து அவரை விட்டுவிடுமாறு கூறினார்கள்.

دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا
அவரை விட்டுவிடுங்கள்; ஏனெனில் கடன் கொடுத்தவருக்குப் பேசுவதற்கு உரிமை உண்டு.
(புகாரி: 2306) ➚

சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பித் தராதபோது அவருக்குக் கோபம் வரத்தான் செய்யும் என்பதை உணர்ந்து நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள். எனவே, கடன் வாங்கியவர்கள், கடன் கொடுத்தவர் என்ன பேசினாலும் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, திருப்பிப் பேசக் கூடாது. இத்தகைய இழிவான நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து முடிந்தவரை கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். கடன் வாங்காமல் இருந்தால் கொஞ்சம் சிரமப்பட நேரிடும், அவ்வளவுதான். ஆனால் கடன் வாங்கிவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் மனதை உறுத்தும் இழிவாக மாறிவிடும்.

அடுத்ததாக, வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும்போதும் நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகான வழிகாட்டலைத் தருகிறார்கள். கடன் கேட்டு வந்த அந்த மனிதருக்கு ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், ஜகாத்தில் வந்த ஒட்டகங்களைத் தேடிப் பார்த்தபோது அந்த வயதுடைய ஒட்டகம் கிடைக்கவில்லை; அதைவிட அதிக வயதுடைய, அதிக மதிப்புள்ள ஒட்டகங்களே இருந்தன. தோழர்கள் இந்த விவரத்தைக் கூறியபோது, அந்த அதிக மதிப்புள்ள ஒட்டகத்தையே அவருக்குக் கொடுத்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்துடன் ஒரு முக்கியமான வழிகாட்டலையும் கற்பித்தார்கள்:

إِنَّ أَحْسَنَكُمْ أَوْ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
நிச்சயமாக உங்களில் சிறந்தவர், கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே ஆவார்.
(புகாரி: 2306) ➚

நாம் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது மனமுவந்து கூடுதலாகக் கொடுப்பது வட்டியில் சேராது. கடன் கொடுத்தவர் நிபந்தனை விதித்துக் கேட்டு வாங்குவதுதான் வட்டியாகும். கஷ்டமான நேரத்தில் உதவியவரை மகிழ்விக்கும் வகையில், வாங்கிய தொகையை விடக் கூடுதலாகவோ அல்லது ஏதேனும் ஓர் அன்பளிப்பைச் சேர்த்தோ கொடுப்பது வட்டியில் சேராது. மாறாக, யார் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுக்கிறாரோ, அவர்தான் உங்களில் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

எனவே, கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கியதை விடச் சிறந்த முறையில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கடன் வாங்கியவருக்கு இருக்க வேண்டும். கடன் வாங்கிய பணத்திற்குப் பழைய நோட்டுகளாகத் தராமல், நல்ல நோட்டுகளாகக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். மேலும் நவீன காலத்தில் நாணயங்களின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாக வாங்கி, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து அதே தொகையைத் திருப்பித் தரும்போது, எண்களில் அது சமமாக இருந்தாலும் அதன் வாங்கும் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் கடன் கொடுத்தவருக்கு நஷ்டமே ஏற்படுகிறது.

ரூபாய் நோட்டுகளுக்கு இயற்கையான மதிப்பு எதுவும் கிடையாது. தங்கம், வெள்ளி மற்றும் உணவுப் பொருட்களுக்கென்று தனித்தனி மதிப்பு உண்டு. ஆனால் ரூபாய் நோட்டுகள் என்பவை வெறும் காகிதங்களே; அவற்றை அச்சடிப்பதற்கான செலவு மட்டுமே அவற்றின் உண்மையான மதிப்பு. அரசாங்கம் தரும் உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அவற்றுக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் பணத்தின் மதிப்பு குறையும்போது கடன் கொடுத்தவர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது.

எனவே, நவீன காலத்தில் கடன் கொடுக்கும்போது தங்கத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து கொடுப்பது சிறந்தது. இதன் மூலம் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. உதாரணமாக, ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக இருபது பவுன் நகை வாங்கும் நோக்கில் பத்து லட்சம் ரூபாயைச் சேர்த்து வைத்திருந்து, அதை ஒருவருக்குக் கடனாகக் கொடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஓரிரு ஆண்டுகள் கழித்து கடன் வாங்கியவர் அதே பத்து லட்சம் ரூபாயைத் திருப்பித் தரும்போது, பணவீக்கத்தின் காரணமாக பணத்தின் மதிப்பு சரிந்திருக்கும். அன்று இருபது பவுன் வாங்க முடிந்த அந்தப் பணத்தைக் கொண்டு, கடன் திரும்பக் கிடைக்கும் நாளில் பதினைந்து பவுன் மட்டுமே வாங்க முடியும் நிலை ஏற்படும். கடன் கொடுத்தவருக்கு ஐந்து பவுன் இழப்பு ஏற்படுகிறது. ஏமாற்றக்கூடிய இந்த போலிப் பொருளாதார அமைப்பினால் தான் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தங்கத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து கடன் கொடுக்கும்போது அது வட்டியாகாது. கடன் கொடுக்கும்போதே, அன்றைய தங்கத்தின் விலையைக் கணக்கிட்டு, இத்தனை கிராம் தங்கத்திற்குரிய தொகையைக் கடனாகத் தருகிறேன்; திருப்பித் தரும் நாளில் அத்தனை கிராம் தங்கத்திற்குரிய சந்தை மதிப்பைத் திருப்பித் தர வேண்டும் என்று பேசி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அந்நாளில் தங்கத்தின் விலை குறைந்தாலும் கூடினாலும் அதற்கேற்ப தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். விலை குறைந்து தொகையே குறைந்தாலும் அதை ஏற்க வேண்டும்; விலை அதிகரித்தால் அதற்குரிய கூடுதல் தொகையைப் பெற வேண்டும். இவ்வாறு இரு நிலைகளுக்கும் பொறுப்பேற்று கடன் கொடுக்கும்போது கொடுப்பவருக்கு இழப்பு ஏற்படாது; கடன் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அதே மதிப்பை வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. தங்கத்தை மட்டுமல்லாமல் வெள்ளி அல்லது அரிசி மூட்டை போன்ற பொருட்களின் மதிப்பையும் அடிப்படையாக வைத்துப் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இரு தரப்பினரும் ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றும்போது யாருக்கும் பாதிப்பு ஏற்படாது.

ஜாபிர் (ரலி) அவர்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் ஒட்டகம் களைத்துப்போய் நடக்க மறுத்தது. ஜாபிர் (ரலி) அவர்களுக்கு உதவும் நோக்கில் நபி (ஸல்) அவர்கள் அந்த ஒட்டகத்தைத் தமக்கு விற்றுவிடுமாறும், அதற்கான தொகையை மதீனா சென்றடைந்த பிறகு பெற்றுக் கொள்ளுமாறும் கூறினார்கள். மதீனா வந்தடைந்ததும் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வந்த ஜாபிர் (ரலி) அவர்களுக்கு, பேசிய தொகையை விடக் கூடுதலாகக் கொடுத்துக் கடனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் பணித்தார்கள்.

قَضَانِي وَزَادَنِي
நபி (ஸல்) அவர்கள் எனது கடனை நிறைவேற்றினார்கள்; எனக்கு கூடுதலாகவும் தந்தார்கள்.
(புகாரி: 2394) ➚

கடன் விவகாரங்களில் இரு தரப்பினரும் யாருக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்படாத வகையில் அல்லாஹ்வை அஞ்சி கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

பணமதிப்பிழப்பால் கடன் கொடுப்பவருக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க தங்கம் போன்ற உண்மைப் பொருட்களின் மதிப்பை அடிப்படையாக வைத்து ஒப்பந்தம் செய்து கொள்வதும், கடனைத் திருப்பிச் செலுத்தும்போது மனம் உவந்து கூடுதலாகக் கொடுப்பதும் நீதியையும் பரஸ்பர நன்மையையும் பேணக்கூடிய வழிமுறைகளாகும்.