13) எளிமையாக வாழ்ந்த நபிகளார்

நூல்கள்: நபிகளாரின் தனி தன்மைகள்

ஒரு நாட்டின் ஆட்சியாளராகவும் தலைவராகவும் இருந்தபோதிலும், அன்றைய மன்னர்கள் உலகை அனுபவித்ததைப் போலவோ, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்ததைப் போலவோ எந்த ஒன்றையும் தமக்குரியதாக அவர்கள் ஆக்கிக்கொள்ளவில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் உலகம் முழுவதும் மக்களாட்சி இன்றி மன்னராட்சியே நிலவியது. மன்னரே நாட்டின் முழு உரிமையாளர் என்றும், அவர் நினைத்தபடி நடக்கலாம் என்றும் மக்கள் நம்பினர்; மன்னரைத் தெய்வத்தைப் போலவும் கருதினர். இதனைப் பயன்படுத்திக்கொண்டு மன்னர்கள் எப்போதும் மணிமுடி அல்லது கிரீடம் அணிந்து தங்களுக்குரிய தனி அடையாளத்துடனேயே மக்களிடையே தோன்றுவார்கள். பொதுச் சபைகள், நீதி பரிபாலனம், ஆட்சி நிர்வாகம், குடிமக்களைச் சந்தித்துக் குறைகேட்டல், வாரி வழங்குதல், பிற நாட்டுத் தலைவர்களைச் சந்தித்தல் என அனைத்துப் பொது நிகழ்வுகளிலும் மக்கள் தங்களைக் கண்டு அஞ்சவும் மதிக்கவும் வேண்டும் என்பதற்காக மணிமுடியுடன் காட்சி தருவார்கள். அதனால்தான் அம்மன்னர்களின் ஆட்சி முடியாட்சி எனப்பட்டது.

ஆனால், முழு அதிகாரம் பெற்ற மாமன்னராகவும், மற்ற மன்னர்களைவிட அதிக வலிமைமிக்க தலைவராகவும் இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கிரீடம் அணிந்ததில்லை. வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போதோ, பொதுமக்களைச் சந்திக்கும்போதோ தங்களை அரசர் என்று காட்டும் தனித்துவமான கோலத்துடன் அவர்கள் ஒருபோதும் வந்ததில்லை; தங்களை மக்களிடமிருந்து தனித்துக் காட்டிக்கொள்ளவே இல்லை. நபி (ஸல்) அவர்கள் தலையில் அணிந்தது என்று பார்த்தால், சில நேரங்களில் தொப்பியும் இரும்புத் தொப்பியும் அணிந்திருக்கிறார்கள். தங்களை மன்னராகத் தனித்துக் காட்டுவதற்குத் தலையில் கிரீடத்தை வைத்து ஓர் அடையாளத்தை அவர்கள் ஏற்படுத்தியதே இல்லை.

மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் பிரவேசித்தபோது இரும்புக் கவசத் தொப்பியை அணிந்திருந்தார்கள். மக்கா வெற்றி என்பது உம்ரா அல்லது ஹஜ் செய்வதற்காகச் சென்ற பயணம் அல்ல. மாறாக, எதிரிகள் போரிட வந்தால் போர் செய்வது, போரிடவில்லை என்றால் அமைதியாகக் கைப்பற்றுவது என்ற இராணுவத் தயாரிப்புடன் சென்ற பயணமாகும். வாளால் வெட்டப்படும்போது காயம் ஏற்படாமல் இருக்க இரும்புத் தொப்பியும், எதிரிகளின் ஈட்டியினாலும் வாளினாலும் உடலுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்க இரும்புக் கவச ஆடையும் அணிவது போர்க்களப் பாதுகாப்புக்கான ஏற்பாடேயன்றி, கௌரவத்தைக் காட்டுவதற்காக அல்ல.

دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ
மக்கா வெற்றி பெற்ற ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் தம் தலையில் இரும்புத் தொப்பி அணிந்தவர்களாக மக்காவினுள் நுழைந்தார்கள்.
(புகாரி: 5808) ➚

இதில் الْمِغْفَرُ (இரும்புத் தொப்பி) என்பது வழக்கமாக அணியும் சாதாரண தொப்பி அல்ல; போர்க்களத்தில் தலையையும் காதுகளையும் மறைத்துப் பாதுகாக்கும் தலைக்கவசம் போன்றதாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு போர்ப்படைத் தளபதியாக இருந்த காரணத்தினாலேயே இரும்புத் தொப்பியை அணிந்தார்களே தவிர, பிற நாட்டு மன்னர்கள் தங்களைத் தலைவராகக் காட்ட கிரீடம் அணிவது போன்ற வழக்கத்தை அவர்கள் பின்பற்றவில்லை. மக்காவில் அமைதியான சூழல் ஏற்பட்டு போர் நடக்காது என்று தெரிந்தவுடன் அவர்கள் இரும்புத் தொப்பியைக் கழற்றிவிட்டார்கள். தங்கள் வீடுகளுக்குள் இருப்பவர்களுக்கும், குறிப்பிட்ட நபர்களின் வீடுகளில் தஞ்சம் புகுபவர்களுக்கும் பாதுகாப்பு உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததால் எதிரிகள் யாரும் ஆயுதம் ஏந்தி வரவில்லை.

போர் நிகழாது என்பது உறுதியான பிறகு, நபி (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகையை அணிந்துகொண்டார்கள். மக்கா வெற்றியின் துவக்கத்தில் இரும்புத் தொப்பியும், பின்னர் உரை நிகழ்த்தியபோது கறுப்புத் தலைப்பாகையும் அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்ததாக ஹதீஸ்களில் இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் மட்டுமே வருகின்றன; எப்போதும் அவர்கள் தலைப்பாகை அணிந்திருக்கவில்லை. எதிரிகளின் நாட்டில் நுழையும்போது நாட்டின் தலைவர் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், அன்றைய அரபுகளிடையே முக்கியப் பிரமுகர்கள் தலைப்பாகை அணியும் வழக்கம் இருந்ததாலும் நபி (ஸல்) அவர்கள் அதை அணிந்தார்கள். இது அரபியரின் கலாச்சார வழக்கமே தவிர, மார்க்கத்தின் சுன்னத் அல்ல.

நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்த மற்றொரு நிகழ்வும் ஹதீஸில் பதிவாகியுள்ளது. ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் இயற்கை உபாதைக்காக ஊருக்கு வெளியே ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வந்ததும் அவர்களுடன் இருந்த முகீரா இப்னு ஷுஃபா அவர்கள் உளூச் செய்வதற்காகத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் முகத்தையும் கைகளையும் கழுவ முற்பட்டபோது, சிரியா தேசத்து இறுக்கமான குளிராடைக் குப்பாயத்தை அணிந்திருந்ததால் அவர்களால் சட்டையின் கைகளை மேல்நோக்கிச் சுருட்ட முடியவில்லை. குளிர்காற்று உள்ளே புகாதவாறு குளிராடைகள் இறுக்கமாகத் தயாரிக்கப்பட்டிருந்ததால் கைகளைச் சுருட்ட முடியாமல், அடிபாகத்தின் வழியாகக் கைகளை வெளியே எடுத்துச் சிரமப்பட்டு உளூச் செய்து கைகளைக் கழுவினார்கள்.

அதன்பின் நபி (ஸல்) அவர்கள் தம் முன்நெற்றியிலும், தலைப்பாகையின் மீதும் மஸஹ் செய்தார்கள். காலுறைகளை அணிந்து உளூச் செய்த ஒருவர், பின்னர் உளூச் செய்யும்போது காலுறையைக் கழற்றாமல் அதன் மீது ஈரக்கையால் மஸஹ் செய்துகொள்ள ஒரு நாள் வரை சலுகை இருப்பது போன்றே, தலைப்பாகை அணிந்திருக்கும்போது அதைக் கழற்றாமல் அதன் மீதே மஸஹ் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இதன் மூலம் கற்றுத் தருகிறார்கள். கடுங்குளிரின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகையை இறுக்கமாகக் கட்டியிருந்தார்கள்; அதைக் கழற்றினால் தலையிலும் காதுகளிலும் குளிர் தாக்கும் என்பதால்தான் தலைப்பாகையைக் கழற்றாமல் அதன் மீதே மஸஹ் செய்தார்கள். இதிலிருந்து, நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் கௌரவ அந்தஸ்துக்காகத் தலைப்பாகை அணியவில்லை, மாறாகக் குளிருக்காகவே அணிந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த ஷாம் நாட்டு ஆடையை ‘ஜுப்பா’ என்று ஹதீஸில் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள உருது மொழிப் பிரயோகத்தில், முழங்காலுக்குக் கீழ் வரை அணியும் நீள அங்கியை ஜுப்பா என்கிறோம். ஆனால் அரபு மொழியில் ஜுப்பா என்பது குளிருக்காக அணியப்படும் கம்பளியாலான இறுக்கமான மேலங்கியைக் குறிக்கும். அந்தச் சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த ஜுப்பாவைக் கழற்றுவதே சிரமமாக இருக்கும் அளவுக்கு, அது குளிரைத் தாங்குவதற்காக இறுக்கமாக அணியப்பட்டிருந்தது.

அதேபோன்று தலைப்பாகை என்பதும் ஒரு கௌரவத்திற்காகவோ தகுதியைக் காட்டுவதற்காகவோ அணியப்பட்ட கிரீடம் போன்றதல்ல; கடும் குளிரிலிருந்தும் காற்றில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந்தார்கள். இன்று சிலர் மக்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவும், தலைமைத்துவத்தை வெளிப்படுத்தவும் மிம்பர்களிலும் பிற இடங்களிலும் பெரிய தலைப்பாகைகளைச் சுற்றிக் கொள்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததில்லை. அவர்கள் பெரும்பாலும் குளிரின் காரணமாகவே தலைப்பாகை கட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் அணிந்த தலைப்பாகை கருப்பு நிறத்தில் இருந்தது. அந்தத் தலைப்பாகைக்கு இரண்டு முனைகள் இருந்து, அவ்விரண்டையும் தங்களின் தோள்புஜங்களுக்கு இடையே தொங்கவிட்டுக் கொள்வார்கள். மக்கா வெற்றியின் போதும், மிம்பரில் நின்று உரை நிகழ்த்திய போதும் நபி (ஸல்) அவர்கள் கருப்புத் தலைப்பாகை அணிந்திருந்தார்கள். கடும் குளிரின் போது அணிந்து மஸஹ் செய்தது, மக்கா வெற்றியின் போது அணிந்தது மற்றும் மிம்பரில் உரை நிகழ்த்திய போது அணிந்தது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களே நபி (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்ததற்கான பிரதான சான்றுகளாக உள்ளன.

பொதுவாக மன்னர்கள் அணியும் ஆடைகள் தங்கத்தாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அவர்களின் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்களின் ஆடை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் தைக்கப்படாத சால்வைகளையே கீழாடையாகவும் மேலாடையாகவும் அணிந்தார்கள். உள்சட்டை, பனியன் போன்றவற்றை அணிந்து அதற்கு மேல் ஆடை அணியாமல், அந்த ஒரு சால்வையையே முழு மேலாடையாகப் போர்த்திக் கொள்வார்கள்.

அவர்கள் மேலாடையாக அணிந்த சால்வை எந்த அளவிற்கு எளிமையானதாக இருந்தது என்றால், மிம்பரில் நின்று மழைக்காகப் பிரார்த்தனை செய்த போது, அவர்கள் கைகளை உயர்த்தியதும் அவர்களின் அக்குள் பகுதி மக்களுக்குத் தெரிந்தது. சட்டை அல்லது பனியன் அணிந்திருந்தால் அக்குள் பகுதி தெரிய வாய்ப்பில்லை; சால்வையை உடலைச் சுற்றிப் போர்த்தியிருந்த காரணத்தினால்தான் கைகளை உயர்த்தும்போது அக்குள் பகுதி வெளிப்பட்டது. அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போதும் அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அவர்களின் அக்குள் பகுதியைப் பார்த்திருக்கிறார்கள். ஓர் ஆட்சியாளராக இருந்தும் கூட, மற்றவர்கள் கண்ணியமாகப் பார்க்கும் ஆடம்பர ஆடைகளைத் தவிர்த்து, இவ்வளவு எளிமையான ஆடையையே அவர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள்.

சில நேரங்களில் மேலாடையாகவும் கீழாடையாகவும் ஒரே நிறத்திலான இரண்டு சிவப்பு நிறச் சால்வைகளை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தார்கள் (புகாரி: 5848) ➚. சில நேரங்களில் இரு ஆடைகளும் வெவ்வேறு நிறங்களிலும் இருக்கும். தைக்கப்படாமல் விரிந்த நிலையில் உள்ள துணிகளையே அவர்கள் பெரும்பாலும் ஆடையாகப் பயன்படுத்தினார்கள்.

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கையால் நெய்த ஓர் ஆடையைக் கொண்டு வந்தார்.

بِبُرْدَةٍ مَنْسُوجَةٍ نَسَجْتُهَا بِيَدِي فَجِئْتُ لِأَكْسُوَكَهَا
கையால் நெய்யப்பட்ட ஒரு போர்வையைக் கொண்டுவந்து, “இதை என் கையால் நெய்தேன்; உங்களுக்கு ஆடையாக அணிவிப்பதற்காகவே இதைக் கொண்டுவந்தேன்” என்று கூறினார்.
(புகாரி: 1277) ➚

அந்நேரத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஓர் ஆடை தேவையாக இருந்ததால், அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு, தங்களின் இல்லத்திற்குச் சென்று அதைத் தங்களின் கீழாடையாக அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள். அதைப் பார்த்த ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம் அந்த ஆடையைத் தமக்குத் தந்துவிடுமாறு கேட்டார். எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள் எனத் தெரிந்திருந்தும், நபி (ஸல்) அவர்கள் விரும்பி அணிந்த ஆடையைக் கேட்கிறாரே என்று உடனிருந்தவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள். அதற்கு அவர், தாம் அணிந்து அழகு பார்ப்பதற்காகவோ பெருமை அடிப்பதற்காகவோ அதைக் கேட்கவில்லை என்றும், தாம் மரணிக்கும் போது நபி (ஸல்) அவர்களின் உடல் பட்ட அந்த ஆடையே தமக்குக் கபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே கேட்டதாகவும் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் சென்று, தம் பழைய ஆடையை அணிந்து கொண்டு, அந்த ஆடையை அவருக்குக் கொடுத்து விட்டார்கள். அவரும் மரணித்த போது அந்த ஆடையே அவருக்குக் கபனாக ஆனது.

நபி (ஸல்) அவர்களுக்குச் சட்டை, வேட்டி என்ற குறிப்பிட்ட பாகுபாடுகள் இருக்கவில்லை. தைக்கப்படாத ஒரு நீளமான துணியை விரும்பினால் மேலாடையாகவும், விரும்பினால் கீழாடையாகவும் பயன்படுத்திக் கொள்வார்கள். குளிர்காலங்களில் கனமான போர்வைகளையும், சாதாரண நாட்களில் மெல்லிய துணிகளையும் ஆடையாகப் பயன்படுத்தினார்கள். எப்போதும் இத்தகைய எளிமையான ஆடையிலேயே நபி (ஸல்) அவர்கள் காட்சி அளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் நாட்டில் நெய்யப்பட்ட, தடித்த கம்பளி போன்ற ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது ஒரு கிராமவாசி வந்து, நபி (ஸல்) அவர்களின் அந்த மேலாடையைப் பிடித்துக் கடுமையாக இழுத்தார். அது கடினமான ஆடையாக இருந்ததால், இழுத்த வேகத்தில் நபி (ஸல்) அவர்களின் கழுத்துப் பகுதியில் தழும்பு ஏற்பட்டு சிவந்துவிட்டது. அவர் நபி (ஸல்) அவர்களிடம், يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ عِنْدَكَ (முஹம்மதே! உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குத் தருமாறு உத்தரவிடுங்கள்) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்து, சினம்கொள்ளாமல் புன்னகைத்தார்கள்; மேலும் அவருக்குக் கேட்பதைக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்த ஆடை அத்தகைய முரட்டுத்தனமான ஒரு போர்வையாகவே இருந்தது. இன்று பலர் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுத்து ஆடம்பர ஆடைகளை அணிகிறார்கள்; அதில் தவறில்லை என்றாலும், ஒரு நாட்டின் தலைவராக இருந்த நபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் எவ்வாறு வேண்டுமானாலும் ஆடம்பரமாக வாழ்ந்திருக்க முடியும். ஆட்சியாளர்கள் மற்றவர்களை விடத் தங்களைத் தனித்துக் காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தங்களை ஒருபோதும் உலக ரீதியாக முன்னிறுத்தவோ, பகட்டாகக் காட்டவோ விரும்பியதில்லை. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை எதற்கு முறையாகப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் சட்டையும் அணிந்திருக்கிறார்கள். நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் பின் உபை இறந்தபோது, அவனுடைய மகன் நல்லதொரு முஸ்லிமாக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன் தந்தையைக் கபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் தங்கள் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார்கள். இதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது. அவனது தகுதிக்கு அந்தச் சட்டை கொடுக்கப்பட வேண்டியதில்லை என்றாலும், அவனுடைய மகனுக்காக நபி (ஸல்) அவர்கள் அதைக் கொடுத்தார்கள். அதுமட்டுமின்றி அவனுக்கு ஜனாஸா தொழுகையும் நடத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் தடுத்தபோதும் தொழுகை நடத்தினார்கள். இதற்குப் பிறகே அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்றும், ஒருபோதும் وَلَا تَقُمْ عَلَىٰ قَبْرِهِ أَبَدًا (அவனது கப்ரின் மீது நீர் நிற்க வேண்டாம்) என்றும் தடுத்தான். நபி (ஸல்) அவர்கள் எப்போதும் போர்வையை மட்டுமே போர்த்தியிருக்கவில்லை, எப்போதாவது சட்டையும் அணிந்திருக்கிறார்கள்; என்றாலும் பெரும்பாலான நேரங்களில் வேட்டியும் போர்வையும்தான் அவர்களது ஆடையாக இருந்தது.

நபி (ஸல்) அவர்களின் ஆடை மட்டுமல்லாமல், அவர்களது வீட்டில் பயன்படுத்தப்பட்ட பாய், தலையணை, கட்டில் போன்ற தளவாடங்களும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன. இவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு மனிதனால் வாழ முடியுமா என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, மிக எளிய பொருள்களைக் கொண்டே அவர்கள் மனநிறைவு அடைந்தார்கள். இத்தகைய எளிய வாழ்க்கையை அவர்கள் ஏற்று வாழ்ந்ததை உணர்த்துவதற்காகவே இச்செய்திகள் கூறப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் மிகப்பெரிய தலைவராக இருந்தபோதும் உலக ஆடம்பரங்களை முற்றிலும் துறந்து, மிக எளிய ஆடைகளையும் குறைந்த வசதிகளையும் கொண்டே வாழ்ந்து மக்களுக்குப் போதனையான முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் வல்லரசின் அதிபராகவும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்தபோதிலும், தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மிக எளிமையாக அமைத்துக் கொண்டார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அன்றைய மன்னர்கள் அணிந்த ஆடம்பர ஆடைகளை நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அணிந்ததில்லை.

ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்த ஒரு பட்டாடையைப் பார்த்துவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ابْتَعْ هَذِهِ (இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்), تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ (பெருநாளுக்கும் வெளிநாட்டுத் தூதுக்குழுக்களைச் சந்திப்பதற்கும் இதைக்கொண்டு உங்களை அலங்கரித்துக் கொள்ளலாம்) என்று கூறினார்கள். பெருநாளுக்கோ வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பதற்கோ கூட நபி (ஸல்) அவர்களிடம் பிரத்யேகமான ஆடைகள் எதுவும் இருக்கவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்கள், إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لَا خَلَاقَ لَهُ (மறுமையில் நற்பேறு இல்லாதவர்களே இதை அணிவார்கள்) என்று கூறி அதை மறுத்துவிட்டார்கள் (புகாரி: 948) ➚.

பொதுவாக ஆண்களுக்குப் பட்டாடை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும், நபி (ஸல்) அவர்களிடம் விசேஷ நாட்களுக்கு என்று தனியாக ஓர் ஆடை கூட இருக்கவில்லை என்பதே இங்கு கவனிக்கத்தக்கது. இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் ஆடைகளைத் தயாரிப்பது மிகுந்த உழைப்பைக் கோரிய ஒரு கடினமான பணியாக இருந்தது. இதனால் வசதி படைத்தவர்கள் விசேஷமான ஆடைகளை அதிக விலை கொடுத்து வாங்கிப் பாதுகாத்து வைப்பார்கள். அண்டை நாட்டு மன்னர்கள் அரச சபைகளில் விலைமதிப்பற்ற ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வந்த காலத்தில், ஓர் அரசராக இருந்தும் கூட நபி (ஸல்) அவர்கள் அத்தகைய ஆடம்பரங்களை விரும்பாமல் மக்களோடு மக்களாகவே எளிய ஆடையில் வாழ்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் மேலே ஒரு போர்வையையும் கீழே ஒரு போர்வையையும் அணிந்திருந்தார்கள். மாற்று ஆடை இல்லாத சில சந்தர்ப்பங்களில், ஒரேயொரு போர்வையை மட்டும் உடம்பில் போர்த்தி, அதன் ஓரங்களைக் கழுத்தில் முடிச்சிட்டுக்கொண்டு தொழுதிருக்கிறார்கள் (புகாரி: 354) ➚. ஒரு நாட்டின் தலைவராக இருந்துகொண்டு நினைத்தபடி ஆடம்பரமாக வாழ வாய்ப்பிருந்தும், உடையில் கூடத் தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்ளாமல் நபி (ஸல்) அவர்கள் எளிமையைப் பேணினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு தடித்த போர்வையையும் ஒரு கீழாடையையும் மக்களுக்கு எடுத்துக் காட்டினார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் நபி (ஸல்) அவர்கள் இந்த ஆடைகளையே அணிந்திருந்தார்கள் என்றும், இந்த ஆடையில் இருக்கும்போதுதான் அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டது என்றும் கூறினார்கள்.

قُبِضَ رُوحُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
நபி (ஸல்) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது.
(புகாரி: 5818) ➚

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இறுதிக் கட்டத்திலும் கூட, சொகுசான ஆடைகளை நாடாமல் எளிய போர்வையையும் கீழாடையையுமே நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உயர்தர ஆடைகளை வாங்குவதற்கு வாய்ப்பிருந்தும், அல்லாஹ்வுடைய தூதராக ஒரு முன்மாதிரியான எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதையே அவர்கள் விரும்பினார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய மகள் பாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டு வாசலில் அலங்கரிக்கப்பட்ட கவர்ச்சிகரமான திரைச்சீலை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்ததைக் கண்டதும், வீட்டிற்குள் நுழையாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். தந்தையார் உள்ளே வராமல் திரும்பிச் சென்றதைக் கண்ட பாத்திமா (ரலி) அவர்கள் விசாரித்தபோது, இத்தகைய அலங்காரங்கள் நமக்குப் பொருத்தமற்றவை என்றும், எனக்கும் இந்த உலக ஆடம்பரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கூட, தன் மகள் ஆடம்பரத்தை நாடாமல் எளிய வாழ்க்கையையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவும், மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் அதை விரும்பவில்லை. பின்னர் அந்தத் திரையை என்ன செய்வது என்று பாத்திமா (ரலி) அவர்கள் கேட்டபோது, அதை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள் (புகாரி: 2613) ➚.

நபி (ஸல்) அவர்களுக்கு இயல்பாகவே ஆடைகளில் அலங்காரங்களோ கவர்ச்சியோ ஆடம்பர வேலைப்பாடுகளோ இருப்பதை விரும்பி அணியும் வழக்கம் இருக்கவில்லை. பொருளாதார ரீதியாக அத்தகைய வசதிகள் இல்லாதது ஒருபுறமிருக்க, வசதி இருந்தாலும் கூட ஆடம்பரமான ஆடையணிந்து தன்னைத் தனித்துக் காட்டிக் கொள்வதை அவர்கள் விரும்பியதில்லை.

ஒருமுறை அபூ ஜஹ்ம் என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு ஆடைகளைக் காட்டி, இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார். நபி (ஸல்) அவர்கள் அதில் வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து தொழுதார்கள். தொழுது முடித்த உடனேயே அதை வேகமாகக் கழற்றி, அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு மற்றொரு சாதாரண ஆடையை வாங்கி வருமாறு கூறினார்கள். அந்த ஆடையிலிருந்த வேலைப்பாடுகள் தொழுகையின்போது தனது பார்வையில் பட்டு கவனத்தைத் திசைதிருப்பி விட்டதே அதற்குக் காரணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கவனத்தைத் திருப்பும் ஓர் அலங்கார ஆடையைக் கூட நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து அணிய விரும்பவில்லை.

அறியாமைக் காலத்தில் சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்கள் மரணித்தால் அவர்களைத் தலைப்பாகையுடனும் விலைமதிப்புமிக்க சட்டையுடனும் அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது எந்த ஆடையில் கஃபனிடப்பட்டார்கள் என்று வினவப்பட்டபோது, அவர்கள் தைக்கப்படாத மூன்று பருத்தி ஆடைகளில்தான் கஃபனிடப்பட்டார்கள் என்று கூறப்பட்டது.

لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ
அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.
(புகாரி: 1271) ➚

அக்காலத்தில் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்டது போன்று நபி (ஸல்) அவர்களுக்குத் தலைப்பாகையோ சட்டையோ அணிவிக்கப்படவில்லை. அவர்களிடம் அவை இருந்திருந்தால் அதைக் கொண்டே கஃபனிட்டிருப்பார்கள். ஒருவரிடம் இருப்பதை வைத்தே கஃபனிடுவது வழக்கம் என்பதால், நபி (ஸல்) அவர்களிடம் தொடர்ந்து அணியக்கூடிய அளவில் தலைப்பாகையோ சட்டையோ இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் பயன்படுத்தப்பட்ட தளபாடங்களும் மிக எளிமையானவையாகவே இருந்தன. ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டில் ஒரேயொரு பாய் மட்டுமே இருந்தது. அந்தப் பாயை பகல் நேரத்தில் விரிப்பாகப் பயன்படுத்தினார்கள்; இரவு நேரத்தில் அதை வாசலில் தொங்கவிட்டு கதவுக்கான மறைப்பாக ஆக்கிக் கொள்வார்கள். வீட்டில் பலகையிலான மரக்கதவுகளோ தாழ்ப்பாளோ இருக்கவில்லை. அரசுப் பணத்தைத் தம் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். கைபர் மற்றும் ஃபதக் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த வருமானத்தைக் கொண்டே தம் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருந்ததால், கதவு அமைப்பதற்குக் கூட வசதி இருக்கவில்லை. மேலும், திருடர்கள் வந்து திருடிச் செல்வதற்கு அந்த வீட்டில் ஒரு பேரீச்சம் பழக் கொட்டைகூட இருக்கப் போவதில்லை என்பதால், தங்களை மறைத்துக் கொள்ளவே அந்தப் பாயை இரவில் கதவாகப் பயன்படுத்தினார்கள். பகலில் வாசல் திறந்தே இருக்கும்.

நபி (ஸல்) அவர்களுடைய வீடு மஸ்ஜிதுந் நபவியை ஒட்டியே அமைந்திருந்தது. அவர்கள் வீட்டில் நின்று தொழுதால் பள்ளிவாசலில் இருப்பவர்களுக்கு அது தெரியும் அளவுக்கு அறையின் சுவர் குட்டையாக இருந்தது. சுமார் மூன்றரை அல்லது நான்கடி உயரமே இருந்த அந்தச் சுவரின் வழியே நின்றிருப்பவரின் தலை வெளியே தெரிந்தது. ஓர் ஆண்டு ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இரவுத் தொழுகை தொழுதபோது, வெளியே நின்ற மக்கள் நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டு அவர்களைப் பின்பற்றித் தொழத் தொடங்கினார்கள். தொடர்ந்து சில இரவுகள் மக்கள் இவ்வாறு பின்தொடரவே, இரவுத் தொழுகை அவர்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி நபி (ஸல்) அவர்கள் தடுத்து, வீடுகளிலேயே தொழுது கொள்ளுமாறு கூறினார்கள்.

وَجِدَارُ الْحُجْرَةِ قَصِيرٌ فَرَأَى شَخْصَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسُ
அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நிற்பதை மக்கள் கண்டார்கள்.
(புகாரி: 729) ➚

நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் படுப்பதற்கும் மறைப்பதற்கும் சேர்த்து ஒரேயொரு பாய் மட்டுமே இருந்தது. இரண்டு பாய்கள் இருந்திருந்தால் ஒன்றை படுக்கவும் மற்றொன்றைத் திரையாகவும் ஆக்கியிருக்கலாம். ஆனால் இருந்த ஒற்றைப் பாயையே இரண்டிற்கும் பயன்படுத்தும் நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள்.

அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் இரவு நேரங்களில் விளக்குகூட எரியாது. அக்காலத்தில் விளக்கெரிப்பதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்பட்டது. ஆனால் விளக்கெரிக்கும் எண்ணெயை ரொட்டிக்குத் தொட்டு சாப்பிட்டுவிடலாமே என்று நினைக்கும் அளவுக்குத்தான் அவர்களது வறுமை நிலை இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழும்போது, இடப்பற்றாக்குறையினால் ஆயிஷா (ரலி) அவர்கள் குறுக்காகப் படுத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யும்போது இடமில்லாததால் ஆயிஷா (ரலி) அவர்களின் காலில் விரலால் குத்துவார்கள்; உடனே அவர்கள் காலை மடக்கிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் தொழுது சஜ்தாவிலிருந்து எழுந்ததும் ஆயிஷா (ரலி) அவர்கள் மீண்டும் காலை நீட்டிக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவுக்கு வருவதை அறிந்து தாங்களாகவே காலை மடக்கிக் கொள்ளாமல், விரலால் குத்திய பிறகே கால்களை மடக்கியதற்குக் காரணம் கேட்கப்பட்டபோது ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்:

وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
அந்நாட்களில் வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
(புகாரி: 382) ➚

இரவு நேரங்களில் உணவு உண்பதற்கோ அல்லது பிற அத்தியாவசியத் தேவைகளுக்கோ கூடச் சில மணி நேர வெளிச்சம் இல்லாத நிலையில்தான் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் விளக்கு இல்லாத காரணத்தினால், அவர்கள் இருட்டிலேயே உணவைச் சமைத்து, இருட்டிலேயே உண்டு, இருட்டிலேயே தொழுதிருக்கிறார்கள். விளக்கு என்பது ஓர் அத்தியாவசியத் தேவையாக இருந்தபோதிலும், அதற்கான வசதி அவர்களது இல்லத்தில் இருக்கவில்லை.

பொது நிதியிலிருந்து தங்களுக்கென எதையும் எடுத்துக்கொள்ளாத நபி (ஸல்) அவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வருவாயிலிருந்து விளக்கெண்ணெய்க்குச் செலவழித்தால், அது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் அடிப்படைத் தேவைகளையும் பாதித்துவிடும் என்பதாலேயே அதனைத் தவிர்த்தார்கள்.

இவ்வாறு விளக்கு இல்லாத, கதவுகள் இல்லாத, குறைந்த உயரமுடைய சுவர்களையும், விரிக்கும் பாயையே கதவாகவும் கொண்ட ஓர் எளிய வீட்டில்தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள்.

ஆடம்பரங்கள் ஏதுமின்றி, மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்களின் இந்த எளிமையான வாழ்க்கை முறை நமக்கு மனநிறைவையும் தன்னடக்கத்தையும் சிறந்த பாடமாக உணர்த்துகிறது.

மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சியாளராகவும் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை எவ்வித உலக வசதி வாய்ப்புகளுமின்றி மிக எளிமையானதாகவே அமைந்திருந்தது.

மதீனாவுக்கு வந்த ஆரம்பக் காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கத்தினாலான மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு தங்கம் ஆண்களுக்கு உகந்தது அல்ல என்பதால் அதை வேண்டாம் என்று கழற்றி எறிந்துவிட்டார்கள். அதைக் கண்ட நபித்தோழர்களும் தங்களுடைய தங்க மோதிரங்களை அகற்றிவிட்டு, வெள்ளி மோதிரங்களை அணிந்து கொண்டார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்து கொண்டார்கள். ஆனால், அவர்கள் அதை விரலில் அணியும் ஓர் ஆபரணமாகப் பயன்படுத்துவதற்காகச் செய்யவில்லை; மாறாக, கடிதங்களுக்கு முத்திரையிடும் பயன்பாட்டிற்காகவே அதைத் தயாரித்தார்கள்.

வெளிநாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் அனுப்பும்போது, அவற்றில் முத்திரை பதிக்கப்படாவிட்டால் அவர்கள் அக்கடிதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்காகவே நபி (ஸல்) அவர்கள் அந்த வெள்ளி மோதிரத்தைச் செய்தார்கள். அதன் முகப்பில் முஹம்மது, ரசூல், அல்லாஹ் என மூன்று வரிகளில் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. கடிதங்களில் அரக்கு வைத்து முத்திரையிடும் தேவை ஏற்படும்போது மட்டுமே அவர்கள் அதைப் பயன்படுத்தினார்களே தவிர, கைகளில் ஆபரணமாக அணிந்து கொண்டிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் செல்லும்போது மோதிரத்தைக் கழற்றி வைப்பார்கள் என்று நஸயீ உள்ளிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள செய்தி, அறிவிப்பாளர் தொடரில் தொடர்பு விடுபட்ட பலவீனமான அறிவிப்பாகும். எனவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரத்தை ஆபரணமாக அணியவே இல்லை என்பதே சரியான செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அந்த மோதிரம் அபூபக்கர் (ரலி) அவர்களின் வசம் சென்றது. அது தனிப்பட்ட சொத்து அல்லாமல், அரசாங்க ஆவணப் பயன்பாட்டுப் பொருளாக இருந்ததால் அவர்களும் கடிதங்களுக்கு அந்த முத்திரையையே பயன்படுத்தினார்கள். இந்த விவரங்கள் புகாரி (3106) மற்றும் அஹ்மத் ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளன. அக்கால மன்னர்கள் காதுகளில் கடுக்கன் அணிந்தும், விரல்கள் தோறும் மோதிரங்கள் பூட்டியும் பகட்டாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் வெள்ளி மோதிரம் செய்ய அனுமதி இருந்தும், நபி (ஸல்) அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதையோ, பெருமைப்படுத்திக் கொள்வதையோ சிறிதும் விரும்பவில்லை.

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் இருந்த உடைமைகளில் கயிற்றுக் கட்டில் ஒன்றும் இருந்தது. சில நேரங்களில் பாயிலும், சில நேரங்களில் அந்தக் கட்டிலிலும் அவர்கள் படுத்துறங்குவார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும்போது, ஆயிஷா (ரலி) அவர்கள் அந்தக் கயிற்றுக் கட்டிலில் படுத்திருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கட்டிலின் நடுப்பகுதியை முன்னோக்கி நின்று தொழ ஆரம்பிப்பார்கள்; அவர்கள் தொழத் தொடங்கியதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கட்டிலின் கால்பக்கமாக மெதுவாக இறங்கிச் சென்று விடுவார்கள். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது என்பது தெளிவாகிறது (புகாரி: 508) ➚.

வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வரும்போது முன்னறிவிப்பு இன்றியும் வருவார்கள்; சில நேரங்களில் குறிப்பிட்ட நாளில் வருவதாகக் கூறிவிட்டும் வருவார்கள். அவ்வாறு ஒரு முறை வருவதாக வாக்களித்துவிட்டு அவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் நெடுநேரம் காத்திருந்தும் அவர் வராததால், தமக்கு ஏற்பட்ட உள்ளுணர்வின் காரணமாகத் தாம் அமர்ந்திருந்த கட்டிலுக்கு அடியில் பார்த்தபோது அங்கே ஒரு நாய்க்குட்டி பதுங்கியிருப்பதைக் கண்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் அது எப்போது வந்தது என்று தெரிந்திருக்கவில்லை. உடனே அந்த நாய்க்குட்டி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது. அது வெளியேற்றப்பட்ட உடனேயே ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். வரத் தாமதமானதற்குக் காரணம் கேட்டபோது அவர் விளக்கமளித்தார்.

إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ
நாயோ உருவப் படங்களோ இருக்கின்ற வீட்டில் நிச்சயமாக நாங்கள் நுழைவதில்லை.
(புகாரி: 3227) ➚

நாய்க்குட்டி கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்தது என்ற இந்த வரலாற்று நிகழ்வின் மூலமும் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் ஒரு கட்டில் இருந்தது என்பது தெளிவாகிறது. இவ்வாறு அவர்களுடைய வீட்டுப் பொருட்களைக் கணக்கிட்டால் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கே அவை இருந்தன.

நபி (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாற்றிய அனஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர்கள் பயன்படுத்திய செருப்புகளைத் தம்மிடம் பாதுகாத்து வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் மக்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டிய அந்தச் செருப்புகள் தோலினால் செய்யப்பட்டு, இரு வார்ப்பட்டைகள் பொருத்தப்பட்டு, மிகவும் நைந்துபோன நிலையில் இருந்தன (புகாரி: 3107) ➚. பிற்காலத்தில் சிலர் கற்பனையாகச் சித்தரிப்பது போன்று விரல்களை இடுக்கிக் கொள்ளும் மரக்கட்டை அமைப்பில் அது இருக்கவில்லை; காலில் பிடிப்புடன் நடந்து செல்வதற்கு ஏற்பத் தோலினால் செய்யப்பட்டு வார்ப்பட்டைகள் அமைக்கப்பட்ட செருப்பையே நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பல வகையான செருப்புகளை வைத்திருக்கவில்லை; மிக நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுத் தேய்ந்துபோன நிலையிலிருந்த அந்த ஒரு ஜோடித் தோல் செருப்பையே அவர்கள் வைத்திருந்தார்கள். ஒரு நாட்டின் தலைவராக இருந்தும் நபி (ஸல்) அவர்களின் உலக உடைமைகள் இவ்வளவு மிகக் குறைந்த அளவிலேயே இருந்தன.

அரபு நாடுகளில் குளிர் காலத்தில் கடுமையான குளிர் நிலவும் என்பதால், அக்காலத்தில் காலுறைகள் மிக அத்தியாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டன. அந்தக் கடும் குளிரைத் தாங்குவதற்காகத் தோலினால் செய்யப்பட்ட காலுறைகளை மக்கள் அணிந்து வந்தனர். நபி (ஸல்) அவர்களிடமும் அத்தகைய காலுறைகள் இருந்தன. குளிர்காலத்தில் நபி (ஸல்) அவர்கள் காலுறைகளை அணிந்து கொண்டு உளூச் செய்யும்போது, கால்களைக் கழுவாமல் ஈரக்கையினால் காலுறைகளின் மீது தடவி மஸஹ் செய்துகொள்வார்கள். ஒருமுறை உளூச் செய்து காலுறை அணிந்துவிட்டால், அடுத்த ஒரு நாள் முழுவதும் உளூ நீங்கினால் மீண்டும் உளூச் செய்யும்போது கால்களைக் கழுவத் தேவையில்லை; காலுறையின் மீதே மஸஹ் செய்துகொள்ளலாம். குளிருக்காக அணிந்த காலுறையைக் கழற்றித் தண்ணீர் ஊற்றினால் குளிர் அதிகமாகிவிடும் என்பதற்காக மார்க்கம் இந்தச் சலுகையை வழங்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு காலுறைகள் மீது மஸஹ் செய்துள்ளார்கள் என்பது பல ஹதீஸ்களில் வந்துள்ளது.

مسح على الخفين
இரு காலுறைகள் மீது மஸஹ் செய்தல்

குளிர்காலத்தில் காதுகளில் கடும் குளிர்க்காற்றுப் படுவதைத் தடுப்பதற்காக, தலையையும் காதுகளையும் மறைக்கக்கூடிய முக்காடு போன்ற ஒரு துணியையும் நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தார்கள். அரபியில் ஹிமார் என்று அழைக்கப்படும் இத்தகைய தலைத்துணியை ஆண்களும் பெண்களும் அக்காலத்தில் அணிந்துள்ளனர். பெண்கள் மார்க்கக் கடமையாகத் தலையை மறைக்க அணிந்தார்கள்; ஆண்களோ குளிரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தேவைக்காக அணிந்தார்கள். உளூச் செய்யும்போது கடுமையான குளிர் காரணமாக அந்தத் துணியைக் கழற்றாமல், முகத்தைக் கழுவிவிட்டு தலைக்கு மஸஹ் செய்வதற்குப் பதிலாக அந்தத் தலைத்துணியின் மீதே நபி (ஸல்) அவர்கள் மஸஹ் செய்து கொள்வார்கள்; காதுக்குத் தனியாக மஸஹ் செய்ய மாட்டார்கள். மார்க்கத்தை எளிதாக்கும் நோக்கில் அமைந்த இந்த வழிகாட்டல் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடம் காலுறைகளும், தலையில் அணியக்கூடிய முக்காட்டுத் துணியும் இருந்தன என்பதை நாம் அறியலாம்.

அக்காலத்தில் செருப்புகள் பெரும்பாலும் ஆட்டுத் தோலினால் செய்யப்பட்டன. ஆட்டின் ரோமமே குளிரைத் தாங்கக்கூடிய கம்பளியாக அமைந்ததால், தோலில் உள்ள ரோமத்தை நீக்காமல் அப்படியே பதனிட்டுச் செய்யப்பட்ட செருப்புகளும் பயன்பாட்டில் இருந்தன. அதே சமயம், வேறு பகுதிகளில் தோலை வேகவைத்து, ரோமத்தை முழுமையாக நீக்கிப் பதனிடப்பட்ட செருப்புகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. நபி (ஸல்) அவர்கள் ரோமம் நீக்கப்பட்ட தோலினால் செய்யப்பட்ட செருப்புகளையே அணிந்தார்கள்; முடியுடன் கூடிய தோல் செருப்புகளை அணியவில்லை. இப்னு உமர் அவர்களிடம், ரோமமுள்ள செருப்பு குளிருக்குக் கதகதப்பாக இருக்கும்போது, நீங்கள் ஏன் ரோமம் நீக்கப்பட்ட செருப்பை அணிகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் ரோமம் நீக்கப்பட்ட தோல் செருப்புகளையே அணிந்தார்கள்; எனவே நானும் அவ்வாறே அணிய விரும்புகிறேன் என்று பதிலளித்தார்கள். இச்செய்தி புகாரியில் 166-வது ஹதீஸாக இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் நான்கு கால்கள் கொண்ட பலகையிலான, சாய்மானம் இல்லாத நாற்காலி ஒன்றும் இருந்தது. பொதுவாக வீட்டில் படுக்கையிலோ தரையிலோ அமரும் நபி (ஸல்) அவர்கள், தரையில் அமர்வது சிரமமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அந்த நாற்காலியில் அமர்வார்கள். அபூ ரிஃபாஆ என்ற நபித்தோழர் மதீனாவுக்கு வந்த நிகழ்வு இதற்கு ஆதாரமாக உள்ளது. இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அவர் மஸ்ஜிதுந் நபவிக்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். மார்க்க நெறிமுறைகள் எதையும் அறியாத அந்தத் தோழர், நேரடியாக நபி (ஸல்) அவர்களின் அருகில் சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்.

رجل غريب جاء يسأل عن دينه لا يدري ما دينه
மார்க்கம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு வெளியூர்வாசி, தனது மார்க்கத்தைப் பற்றிக் கேட்பதற்காக வந்துள்ளார்.

அவர் அவ்வாறு கூறியதும் நபி (ஸல்) அவர்கள் தம் உரையை நிறுத்திவிட்டு, அவரிடம் இறங்கி வந்தார்கள். பின்னர் வீட்டில் இருந்து தங்களுடைய நாற்காலியைக் கொண்டுவரச் செய்து, அதில் அமர்ந்து அவருக்கு மார்க்கத்தை விளக்கிக் கூறினார்கள். இச்செய்தி நஸயீயில் ஆதாரப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது.

ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, மார்க்கத்தை அறிந்துகொள்ள ஒரு புதியவர் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தமது உரையை நிறுத்தினார்கள். அங்கு உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தவர்கள் ஏற்கெனவே இஸ்லாத்தை ஏற்று மார்க்கத்தை அறிந்தவர்கள்; அவர்களுக்குப் பின்னரும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், புதிதாக வந்தவர் ஏமாற்றமடைந்து மார்க்கத்தை விட்டும் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு முன்னுரிமை அளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழே இறங்கி வந்ததும், فأتِيَ بكرسيٍّ (அவருக்கு ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது) என்றபடி, நபிகளாரின் இல்லத்திலிருந்து ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதன் நான்கு கால்களும் இரும்பாலும், அமரும் பலகை மரத்தாலும் அமைந்திருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதில் அமர்ந்து, அவரது சந்தேகங்களைத் தீர்த்து மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். பின்னர் மீண்டும் மிம்பருக்குச் சென்று தமது உரையைத் தொடர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் இத்தகைய ஓர் எளிய நாற்காலி மட்டுமே பயன்பாட்டில் இருந்தது என்பதை இந்த நஸயீ ஹதீஸிலிருந்து அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்களின் இல்லத்தில் விதவிதமான சாப்பாட்டுத் தட்டுகள் கிடையாது; அக்கால மக்களிடமும் அவ்வாறான தட்டுகள் பெரிதாக இருக்கவில்லை. அவர்கள் உண்பதற்காக ‘சுஃப்ரா’ எனப்படும் உணவு விரிப்புத் துணியையே பயன்படுத்தினார்கள். அத்துணியை விரித்து, அதில் காய்ந்த ரொட்டிகளை வைத்து சுற்றிலும் அமர்ந்து உண்பார்கள். அதற்குத் தனித்தனி தட்டுகளோ பாத்திரங்களோ தேவைப்படவில்லை. குழம்பு இருந்தால் ஒரு சிறிய கோப்பையில் வைத்து தொட்டுக் கொள்வார்கள்; பெரும்பாலும் குழம்புகூட இருக்காது, வெறும் ரொட்டியையோ அல்லது வினிகரில் தொட்டோ உண்பார்கள். விருந்தினர்களுக்கு என்று பிரத்தியேக பாத்திரங்கள் எவையும் நபி (ஸல்) அவர்களிடம் இருக்கவில்லை.

நான்கைந்து பேர் ஒன்றாக அமர்ந்து உண்பதற்கு வசதியாக ஒரேயொரு பெரிய தட்டு மட்டுமே நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது. அக்காலத்தில் பாத்திரங்கள் தொலைதூர தேசங்களிலிருந்து மிக அரிதாகவே கொண்டு வரப்பட்டதால், ஒரு பாத்திரம் உடைந்தால் எளிதாக இன்னொன்றை வாங்கிவிட முடியாது. நபி (ஸல்) அவர்களிடம் இருந்த அந்தப் பாத்திரத்தின் ஓரம் உடைந்தபோது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய பாத்திரம் வாங்குவதற்குப் பதிலாக, வெள்ளியைக் கொண்டு அந்த விரிசலைச் சரிசெய்து தொடர்ந்து பயன்படுத்தினார்கள். இந்தச் செய்தி புகாரியில் (3109) இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் உலக ஆடம்பரங்களைத் தவிர்த்து, மிக எளிய மற்றும் குறைவான வீட்டு உபயோகப் பொருட்களைக் கொண்டே தங்களின் வாழ்நாளைக் கழித்தார்கள் என்பதே இதில் நாம் பெறும் படிப்பினையாகும்.