12) நேர்மையை பேணிய நபிகளார்

நபிகளாரின் தனி தன்மைகள்

பொது வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு நேர்மையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பொதுவாக ஒரு கட்சியின் தலைவராகவோ, கிளையின் தலைவராகவோ, ஜமாஅத்தின் தலைவராகவோ அல்லது உள்ளூர் சங்கத்தின் நிர்வாகியாகவோ பொதுப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் நேர்மையாக இருப்பதில்லை. சொல்லப்போனால், நேர்மையற்றவர்கள்தான் பொது வாழ்க்கையை விரும்பி ஏற்று அதன் மூலம் பொருளாதாரத்தைச் சுரண்ட முற்படுகிறார்கள். அந்த அளவிற்கு இன்று பொது வாழ்க்கை என்பது மிகுந்த சந்தேகத்திற்குரியதாக மாறியிருக்கிறது.

ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு மதத் தலைமை, இறைத்தூதர் என்ற தகுதி, ஆட்சித் தலைமை ஆகிய அதிகாரங்கள் ஒருசேர இருந்தன. உலக நடைமுறையின்படி இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒருவர் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். ஆனால், அத்தனை அதிகாரங்கள் இருந்தபோதிலும் நபி (ஸல்) அவர்கள் அனைத்து விவகாரங்களிலும் முழுமையான நேர்மையையே கடைப்பிடித்தார்கள்.

இதற்குச் சான்றாக நபி (ஸல்) அவர்களின் மூத்த மருமகன் தொடர்பான ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிடலாம். நபி (ஸல்) அவர்களுக்கு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், பாத்திமா ஆகிய நான்கு பெண் மக்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்த மகள் ஜைனப் அவர்களை, கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி மகனான அபுல் ஆஸ் என்பவருக்கு இஸ்லாத்திற்கு முந்தைய காலத்திலேயே நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடங்கி, தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தபோது மக்காவில் கடுமையான எதிர்ப்பு உருவானது. அப்போது எதிரிகள் ஒன்று திரண்டு, நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் நோக்கில் அவர்களுடைய மகள்களைத் திருமணம் செய்தவர்கள் அவர்களை விவாகரத்து செய்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அப்போது ஜைனப் அவர்களுக்கும், ருகைய்யா அவர்களுக்கும் திருமணம் முடிந்திருந்தது.

ருகைய்யா அவர்களை நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அபூ லஹபின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். இஸ்லாத்திற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் மீது பிரியம் கொண்டிருந்த அபூ லஹப், நபித்துவத்திற்குப் பிறகு கொடூரமான எதிரியாக மாறினான். அவனைக் கண்டித்தே تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ (அபூ லஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்; அவனும் நாசமாகிவிட்டான்) என்ற அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கினான். எதிரிகளின் முடிவிற்கு ஏற்ப, அபூ லஹபின் மகன் ருகைய்யா அவர்களை விவாகரத்து செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.

ஆனால் மூத்த மகள் ஜைனப் அவர்களின் கணவரான அபுல் ஆஸிடம் விவாகரத்து செய்யுமாறு வற்புறுத்தியபோது, எக்காரணத்தைக் கொண்டும் ஜைனபை விடச் சிறந்த ஒரு மனைவி தமக்குக் கிடைக்க மாட்டார் என்று கூறி அவர் விவாகரத்து செய்ய மறுத்துவிட்டார்.

அதன்பின் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு பத்ருப் போர் நடைபெற்றது. அப்போரில் எதிரிகள் தரப்பில் அபுல் ஆஸும் போர்க்களத்திற்கு வந்திருந்தார். போரில் இணைவைப்பாளர்கள் தோல்வியடைந்தபோது, நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் உள்ளிட்ட பலருடன் அபுல் ஆஸும் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மூன்று விதமான நடைமுறைகளைக் கையாண்டார்கள். முதலாவதாக, போருக்கு வர விரும்பாமல் ஊரின் நிர்பந்தத்தின் காரணமாக வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டவர்கள் என்பதைத் தமது உளவுத்துறை தகவல்கள் மற்றும் விசாரணையின் மூலம் உறுதிசெய்து, அவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவித்தார்கள். இரண்டாவதாக, சண்டையிடுவதற்கென்றே திட்டமிட்டு வந்தவர்களிடம் உரிய ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தார்கள்; போருக்கு வந்தால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதை எதிரிகளுக்கு உணர்த்துவதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. மூன்றாவதாக, கைதிகளில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், எழுதப்படிக்கத் தெரியாத முஸ்லிம்களுக்குக் கற்பிப்பதையே பிணையத் தொகையாக ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தார்கள்.

மக்காவிலிருந்து ஒவ்வொரு கைதியையும் ஈட்டுத் தொகை கொடுத்து மீட்டுச் சென்றபோது, அபுல் ஆஸை மீட்பதற்காக நபி (ஸல்) அவர்களின் மகள் ஜைனப் அவர்கள் தம்முடைய தங்கக் காசு மாலையை ஈட்டுத் தொகையாக அனுப்பி வைத்தார். அந்த மாலையைப் பார்த்தவுடன் நபி (ஸல்) அவர்களின் கண்கள் கலங்கி, கண்ணீர் பொங்கியது. ஏனெனில், அது கதீஜா (ரலி) அவர்கள் தம் மகள் ஜைனபின் திருமணத்தின்போது அன்பளிப்பாக அணிவித்த மாலையாகும்.

மேலும் அபுல் ஆஸ் கொடூரமான எதிரியாக இருக்கவில்லை. ஊரின் நிர்பந்தம் மற்றும் கட்டுப்பாட்டின் காரணமாகவே அவர் போர்க்களத்திற்கு வந்திருந்தார். மக்காவில் இருந்த முஸ்லிம்களுக்கு அவர் எந்தத் தொந்தரவும் தரவில்லை; எதிரிகள் வற்புறுத்தியபோதும் மனைவியை விவாகரத்து செய்யாமல் உறுதியாக இருந்தார். இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்துடன் நல்லுறவைப் பேணியவராக இருந்தார். இதனால் பொதுவான விதிமுறைகளின்படி அவரை விடுவிப்பதற்கான அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இருந்தன.

அபுல் ஆஸ் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார் என்பதை நபி (ஸல்) அவர்களே ஒரு சந்தர்ப்பத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்கள். அலி (ரலி) அவர்கள், பாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும்போதே மற்றொரு திருமணம் செய்ய முனைந்தபோது, பாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தம் மனவருத்தத்தைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தும்போது, தாம் அபுல் ஆஸுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்தபோது அவர் அளித்த வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் மகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போதே, ‘வேறு திருமணம் செய்யக்கூடாது’ என்ற நிபந்தனையை விதித்திருந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் காரணமேயின்றி பல பெண்களைத் திருமணம் செய்யும் வழக்கம் இருந்த சூழலிலும், அபுல் ஆஸ் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றினார். இந்த அறிவுறுத்தலுக்குப் பிறகு அலி (ரலி) அவர்கள் அந்தத் திருமண முயற்சியைக் கைவிட்டு, பாத்திமா (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை வேறு திருமணம் செய்யவில்லை.

அலீ (ரலி) அவர்கள் இன்னொரு திருமணம் செய்ய நாடியபோது, அபுல் ஆஸ் தமக்கு அளித்த வாக்குறுதியை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அபுல் ஆஸ் ஒரு கொடூரமான மனிதராகவோ எதிரியாகவோ இருக்கவில்லை. திருமணத்தின் போது செய்துகொண்ட உடன்படிக்கையில் அவர் உறுதியாக இருந்தார்; ஆனால் அலீ (ரலி) அவர்கள் இதில் உறுதியாக இருக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டதும், அலீ (ரலி) அவர்கள் அந்த இரண்டாம் திருமண முடிவைக் கைவிட்டார்கள்.

அப்போது இறைமறுப்பாளராக இருந்தபோதிலும், அபுல் ஆஸ் வாக்குறுதியைப் பேணுகின்ற ஒரு நல்ல மனிதராகத் திகழ்ந்தார். பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்ட அபுல் ஆஸை, இழப்பீடு ஏதுமின்றி விடுதலை செய்ய நபி (ஸல்) அவர்களால் முடிவு செய்திருக்க முடியும். ஏனெனில், தகுதியான பலரை அவர்கள் அவ்வாறு இழப்பீடின்றியே விடுதலை செய்திருக்கிறார்கள். எனினும், அபுல் ஆஸ் தம் மருமகன் என்பதாலும், அவரை விடுவிப்பதற்காகத் தம் மகள் ஜைனப் (ரலி) அவர்கள் அனுப்பிய மாலை வந்திருப்பதாலும், மக்கள் இதனை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கருதினார்கள்.

எனவே, மக்களை ஒன்று கூட்டி, “நீங்கள் விரும்பினால், அபுல் ஆஸை விடுதலை செய்து, ஜைனப் அனுப்பிய இந்த மாலையையும் அவரிடமே திருப்பி அனுப்பி விடுகிறேன்” என்று அனுமதி கேட்டார்கள். இழப்பீட்டுப் பொருள் வந்துவிட்டதால், சட்டப்படி யாரையும் கேட்காமலேயே அவரை விடுதலை செய்திருக்க முடியும். ஆனால், அந்த இழப்பீட்டைப் பெறாமல் திருப்பித் தருவதற்கே நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் அனுமதி கோரினார்கள். மக்களின் தலைவராக இருந்த நபி (ஸல்) அவர்கள் எதைச் செய்தாலும் அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். அப்படியிருந்தும் கூட, அவர்கள் மக்களின் அனுமதியைப் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை. மக்களும் மனமுவந்து சம்மதம் தெரிவித்த பின்னரே அவரை விடுதலை செய்தார்கள். இந்தச் செய்தி அபூதாவூத் உள்ளிட்ட பல நூல்களில் பதிவாகியுள்ளது.

அவரை விடுதலை செய்யும் போது, “நீர் இஸ்லாத்தை ஏற்கவில்லை; என் மகள் முஸ்லிமாக இருக்கிறார். எனவே, இஸ்லாமிய மார்க்கத்தின்படி நீங்கள் இருவரும் இணைந்து வாழ முடியாது. ஆகவே என் மகளை என்னிடம் அனுப்பிவிட வேண்டும்” என்ற நிபந்தனையை நபி (ஸல்) அவர்கள் விதித்தார்கள். அதற்கு அபுல் ஆஸும் சம்மதித்தார்.

அதன்பின்னர், ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களையும் ஓர் அன்சாரித் தோழரையும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடைப்பட்ட முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் பயணம் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தது என்பதால், குறிப்பிட்ட ஓர் இடத்திற்குச் சென்று தம் மகளைப் பாதுகாப்பாக அழைத்து வருமாறு அவ்விருவரிடமும் திட்டமிட்டுக் கூறினார்கள். அபுல் ஆஸும் தம் வாக்கை நிறைவேற்ற, அவ்விரு தோழர்களும் ஜைனப் (ரலி) அவர்களை மக்காவிலிருந்து மதீனாவிற்குப் பத்திரமாக அழைத்து வந்தார்கள்.

முன்னதாக, அபுல் ஆஸ் கைதியாக இருந்தபோது, “நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் எந்த இழப்பீடும் இன்றி விடுதலை செய்யப்படுவாய்” என்று சில தோழர்கள் கூறியபோது, “அச்சத்தினாலோ மிரட்டலினாலோ இஸ்லாத்தை ஏற்கும் கோழையல்ல நான்” என்று அவர் கூறிவிட்டார். பின்னர் விடுதலை பெற்று மக்காவுக்குச் சென்ற அவர், தம்மிடம் மக்கள் ஒப்படைத்திருந்த அமானிதப் பொருட்கள் அனைத்தையும் உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்தார்; தாம் பெற்றிருந்த கடன்களையும் அடைத்தார். எவருக்கும் தம்மிடம் கொடுக்கல் வாங்கல் பாக்கி இல்லை என்பதை உறுதி செய்த பிறகு, “நான் பணத்திற்காகவோ பயத்தினாலோ இஸ்லாத்திற்குச் செல்லவில்லை; தெளிவோடுதான் இந்த மார்க்கத்தை ஏற்கிறேன்” என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்துவிட்டு இஸ்லாத்தைத் தழுவினார். பின்னர் அவர் ஒரு சிறந்த சஹாபியாக வாழ்ந்தார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் போது தம் தோளில் சுமந்து கொண்ட உமாமா என்ற பெண் குழந்தை, இந்த அபுல் ஆஸ் மற்றும் ஜைனப் தம்பதியருக்குப் பிறந்தவர்தான்.

அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பாக மற்றொரு சம்பவமும் நிகழ்ந்தது. அவர் பெரும் வணிகப் பொருட்களுடன் கூடிய ஒரு கூட்டத்தோடு ஷாம் தேசத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். பொதுவாக ஓர் அரசுக்குட்பட்ட பகுதிக்குள் அனுமதி பெறாமல் நுழையும் எதிரி நாட்டு வணிகக் கூட்டத்தின் உடைமைகளைப் பறிமுதல் செய்வது அன்றைய சர்வதேச நடைமுறையாக இருந்தது; அது கொள்ளையடிப்பது ஆகாது. அபுல் ஆஸ் தம் மருமகன் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் சலுகை எதையும் காட்டவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநிறுத்தும் வகையில், அபூ சுஃப்யான் போன்ற எதிரிகளுக்கு என்ன சட்டமோ அதே சட்டத்தையே தம் மருமகனுக்கும் நடைமுறைப்படுத்தி, அப்பொருட்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்கள்.

அச்சமயத்தில் மதீனாவில் இருந்த ஜைனப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஸ்லிம்களில் எவரேனும் ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தால் அதன் நிலை என்ன? அரசு மட்டும்தான் அடைக்கலம் தர முடியுமா அல்லது தனிப்பட்ட குடிமக்களும் தரலாமா?” என்று மார்க்கச் சட்டத்தைக் கேட்டறிந்தார்கள். இஸ்லாமிய நாட்டில் வாழும் ஒரு குடிமகன் எவருக்கு அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த அரசுக்கும் கட்டுப்பட்டதாகும்; அந்த அடைக்கலத்தை எவரும் மீற முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.

சட்டத்தை அறிந்து கொண்ட ஜைனப் (ரலி) அவர்கள், பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும் பெண்கள் பகுதியிலிருந்து, தாம் அபுல் ஆஸுக்கு அடைக்கலம் கொடுத்துவிட்டதாகக் குரலெழுப்பி அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களும், “இது ஜைனபுக்கு மட்டுமேயான சலுகை அல்ல; முஸ்லிம்களில் யார் யாருக்கு அடைக்கலம் கொடுத்தாலும் அந்தப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று கூறி, அபுல் ஆஸை ஓர் இயல்பான நபரைப் போன்று நடத்த உத்தரவிட்டார்கள். உலக நாடுகள் எதிலும் காணக் கிடைக்காத வகையில், நாட்டின் எந்தவொரு குடிமகனும் பிறருக்கு அடைக்கலம் வழங்க முடியும் என்ற உன்னத உரிமையை இஸ்லாமியச் சட்டம் வழங்கியிருக்கிறது.

பொதுவாக ஓர் அரசாங்கம்தான் யாரைக் குடிமகனாக்க வேண்டும் என்ற அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும். ஆனால் இஸ்லாத்தில் குடிமக்கள் அனைவருக்கும் அந்த அதிகாரம் இருக்கிறது. ஒருவரை இந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று அரசாங்கம்தான் அறிவிக்க வேண்டும் என்பதில்லை; இந்நாட்டின் குடிமக்கள் அனைவருமே இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். எனவே, குடிமக்களில் எவரேனும் ஒருவருக்கோ இருவருக்கோ அடைக்கலம் கொடுத்து இந்நாட்டைச் சேர்ந்தவராக மாற்ற நினைத்தால், அதில் இஸ்லாமிய அரசாங்கம் தலையிடாது; குறுக்கே நிற்காது. மாறாக, அதனை ஏற்றுக்கொண்டு அவரையும் இந்நாட்டைச் சேர்ந்தவராகக் கருதிக்கொள்ளும் அளவுக்கு இஸ்லாமியச் சட்டம் வழிகாட்டுகிறது.

அந்தச் சட்டத்தை நன்கு தெரிந்துகொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மகளாரும் செயல்பட்டார். தன் கணவர் சிக்கிக்கொண்டபோது, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தன் கணவருக்காக எந்தச் சலுகையையும் கேட்கவில்லை. மாறாக, ஒரு குடிமகன் மற்றொருவருக்கு அடைக்கலம் கொடுத்தால் அதனுடைய சட்டம் என்னவென்றுதான் முதலில் கேட்டார். அந்த அடைக்கலம் செல்லும், அது அங்கீகரிக்கப்படும், அரசாங்கம் அதில் தலையிடாது என்ற பதிலை உறுதிசெய்த பிறகுதான், “நான் என் கணவருக்கு அடைக்கலம் கொடுக்கிறேன்” என்று அறிவித்தார். நபி (ஸல்) அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கும்போது சொந்தம் பந்தம் என்று பார்க்காமல், வகுக்கப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்துக் காரியங்களையும் மேற்கொண்டார்கள். இதே போன்றதொரு நிகழ்வு அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் சிக்கியபோதும் இடம்பெற்றுள்ளது.

பொது வாழ்விலும் ஆட்சி அதிகாரத்திலும் குடும்பச் சலுகைகளுக்கு இடமளிக்காமல், சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு நேர்மையுடன் செயல்படுவதே நாம் பின்பற்ற வேண்டிய அழகிய வழிமுறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவர், நாட்டின் ஆட்சித் தலைவர் ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் வகித்தபோதும், பொது வாழ்க்கையில் எவ்வாறு நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

பத்ருப் போரில் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் எதிரிகள் தரப்பில் பங்கெடுத்து வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவராக இருந்தபோதிலும், மூர்க்கமான எதிரி அல்ல. ஊராரின் கட்டாயத்தினாலும் மிரட்டலினாலும் மட்டுமே போருக்கு வந்திருந்தார். அந்தப் போரில் எதிரிகள் தோல்வியடைந்து பலர் கொல்லப்பட்டனர்; பலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவ்வாறு கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில் அப்பாஸும் ஒருவராக இருந்தார்.

போர்க் கைதிகளை விடுதலை செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் அல்லது மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை நபி (ஸல்) அவர்கள் விதித்திருந்தார்கள். அப்போது கைது செய்யப்பட்ட அப்பாஸ், தான் ஒரு முஸ்லிம் (إِنِّي كُنْتُ مُسْلِمًا – நான் முஸ்லிமாக இருக்கிறேன்) என்று கூறி, இழப்பீட்டுத் தொகை ஏதுமின்றி தன்னை விடுதலை செய்யுமாறு நபி (ஸல்) அவர்களிடம் கோரிக்கை வைத்தார். பொதுவாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறினால் அவரது உள்ளத்தை ஆராயும் அதிகாரம் மனிதர்களுக்கு வழங்கப்படவில்லை; வெளிப்படையான கூற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக இஸ்லாத்திற்கு வந்து, பின்னர் உண்மையான முஸ்லிம்களாக மாறியவர்களும் உண்டு. ஆனால், போர்க்களத்தில் கைதியாகிவிட்ட நிலையில் விடுதலையாவதற்காக அப்பாஸ் அவ்வாறு கூறியபோது, நீர் முஸ்லிமாகியிருந்தால் அதற்குரிய கூலியை அல்லாஹ் வழங்குவான்; எனினும் தற்போது நஷ்டஈடு கொடுத்தே தீர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள்.

அப்பாஸ் தனக்கான நஷ்டஈட்டை மட்டுமல்லாமல், அலீ (ரலி) அவர்களின் சகோதரரும் நபி (ஸல்) அவர்களை வளர்த்தெடுத்த அபூதாலிபின் மகனுமான உகைல் என்பவருக்கும், மற்றொரு உறவினரான நவ்ஃபல் இப்னுல் ஹாரிஸ் என்பவருக்கும் சேர்த்து மூத்தவர் என்ற அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். தன்னை வளர்த்த பெரிய தந்தையின் மகன் என்பதற்காக உகைலுக்கோ, தனது பெரிய தந்தை என்பதற்காக அப்பாஸுக்கோ எந்தச் சலுகையும் காட்டப்படவில்லை. மற்ற கைதிகளைப் போன்றே அவர்களும் நடத்தப்படுவார்கள் என்றும், இழப்பீடு தராவிட்டால் அடிமைகளாகப் பகிர்ந்தளிக்கப்படுவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். தனக்கு நெருங்கிய உறவினர்கள் என்பதற்காகச் சட்டத்தை அவர்கள் வளைக்கவில்லை.

அப்போது அப்பாஸ், இழப்பீடு வழங்குவதற்குத் தன்னிடம் மக்காவிலும் இங்கேயும் எந்தப் பணமும் வசதியும் இல்லை என்றார். ஆனால், அவர் மக்காவில் வட்டித் தொழில் செய்து பெரும் வசதியோடு வாழ்ந்த செல்வந்தர் என்பது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியும். எனவே, நீங்களும் உங்கள் மனைவியும் மக்காவில் புதைத்து வைத்தீர்களே, அந்தப் பணம் எங்கே போனது என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அடுத்ததாக, ஜகாத் வசூலிக்கச் சென்றபோது நடந்த ஒரு சம்பவம் புகாரியில் 1468-வது ஹதீஸில் பதிவாகியுள்ளது. நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ், காலித் இப்னு வலீத் மற்றும் இப்னு ஜமீல் ஆகிய மூவரும் ஜகாத் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இவர்களில் இப்னு ஜமீல் என்பவர் ஆரம்பத்தில் ஏழையாக இருந்து, பின்னர் அல்லாஹ்வின் அருளால் செல்வந்தரானவர். அவர் எந்த நியாயமான காரணமும் இன்றி ஜகாத் கொடுக்க மறுத்ததால், அவரிடமிருந்து கட்டாயமாக ஜகாத்தை வசூலிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைப் பொறுத்தவரை, அவரிடம் ஜகாத்தைக் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில் அவர் தனது போர்க் கவச உடைகள் உட்பட அனைத்தையும் மார்க்கத்திற்காகத் தேவைப்பட்ட போதெல்லாம் வாரி வழங்கியவர்; ஜகாத்தின் அளவை விடப் பன்மடங்கு அதிகமாகவே மார்க்கத்திற்காகத் தானமாகத் தந்தவர். எனவே, ஏற்கனவே ஒருவர் தர்மமாகவோ கடனாகவோ கொடுத்திருப்பதை ஜகாத்தில் கழித்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் அவருக்குச் சலுகை அளித்தார்கள்.

ஆனால் அப்பாஸ் ஜகாத் கொடுக்க மறுத்தபோது, அவர் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை என்பதால் அவரிடம் யாரும் அதிகாரம் செலுத்த மாட்டார்கள், வற்புறுத்த மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சலுகை எடுத்துக்கொள்ளப் பார்த்தார். எனவே நபி (ஸல்) அவர்கள், فَهِيَ عَلَيْهِ وَمِثْلُهَا مَعَهَا (அவர் அந்த ஜகாத்தையும் கொடுக்க வேண்டும்; அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் சேர்த்து அபராதமாகக் கொடுக்க வேண்டும்) என்று கூறி அவரிடமிருந்து இரட்டிப்பாக வசூலித்தார்கள். மார்க்கத்திற்காகத் தியாகம் செய்த காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் உறவினர் அல்லாதபோதும் அவருக்குச் சலுகை அளித்தார்கள். ஆனால், தன் சொந்தப் பெரிய தந்தை என்பதற்காகச் சலுகை பெற முயன்ற அப்பாஸ் அவர்களுக்குச் சலுகை தராமல், அபராதமும் விதித்தார்கள். தனக்கு வேண்டியவர் என்பதற்காகச் சட்டத்தை வளைக்காமல், தமக்கு முழுமையான அதிகாரம் இருந்தபோதும் நீதிக்கும் நேர்மைக்கும் முன்னுரிமை அளித்தார்கள்.

இதேபோன்று மற்றொரு சம்பவம்: நபி (ஸல்) அவர்களின் உறவினர்களான பனூ ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் என்பவரும், ரபீஆ பின் ஹாரிஸ் என்பவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்தார்கள். ரபீஆவுக்கு ஓர் இளைஞரான மகன் இருந்தார். அப்பாஸுக்கும் ஃபள்ல் இப்னு அப்பாஸ் என்ற ஓர் இளைஞரான மகன் இருந்தார். வேலை எதுவும் இல்லாமல் இருந்த இந்த இரண்டு இளைஞர்களைப் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அப்பாஸ் அவர்களும் ரபீஆ அவர்களும் வேலையின்றியிருக்கும் தங்களுடைய மகன்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருவதற்காகக் கலந்தாலோசித்தனர். அக்காலத்தில் ஜகாத் வசூலிக்கும் பணி என்பது ஆளுநருக்கு இணையான, ஒரு பகுதி முழுமைக்குமான அதிகாரமிக்க பெரும் பொறுப்பாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அப்பணிக்காகப் பலரை நியமித்து வந்ததால், தங்கள் பிள்ளைகளையும் அப்பணிக்கு நியமிக்குமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

இச்செய்தியறிந்த அலி (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் இப்பொறுப்பைக் கேட்க வேண்டாம் என்றும், கேட்டாலும் அவர்கள் நிச்சயமாகத் தரமாட்டார்கள் என்றும் அவர்களை எச்சரித்தார். ஆனால் அவர்களோ, அலி (ரலி) அவர்கள் நபியவர்களின் மருமகனாக இருப்பதால் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் வாய்ப்பைத் தடுப்பதாகவும், காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதாகவும் எண்ணி அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.

தங்கள் தந்தையரின் அறிவுறுத்தலின்படி அவ்விரு இளைஞர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களை அன்போடு அழைத்து வந்த காரணத்தைக் கேட்டார்கள். அப்போது அவர்கள், أنت أبر الناس وأوصل الناس (மனிதர்களிலேயே மிக உபகாரியானவரும், உறவுகளை அதிகம் பேணக்கூடியவருமான தாங்கள்) என்று நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து, தாங்கள் திருமண வயதை அடைந்துவிட்டதாகவும், பிறரை நியமிப்பது போல தங்களையும் ஜகாத் வசூலிக்கும் பணிக்கு நியமித்தால் அதில் உரிய ஊதியத்தைப் பெற்றுத் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வோம் என்றும் கூறினர்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் எவ்விதப் பதிலும் கூறாமல் நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்கள் ஜைனப் (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்ததால், நபியவர்களின் மௌனத்தைக் கவனித்த அன்னார், நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்திருக்கக் கூடும் எனக் கருதி அவ்விரு இளைஞர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு சைகை காட்டினார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி, முஹம்மதுடைய குடும்பத்தினருக்கு ஜகாத் கூடாது என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس
நிச்சயமாக இந்த சதகா முஹம்மதுடைய குடும்பத்தாருக்குத் தகுதியானதல்ல; நிச்சயமாக அது மக்களின் அழுக்காகும்.
(முஸ்லிம்: 1072) ➚

ஜகாத் வசூலிக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு அதிலிருந்து ஊதியம் வழங்க மார்க்கத்தில் அனுமதி உண்டு. எனினும், அந்த ஊதியமும் ஜகாத் நிதியிலிருந்தே வருவதால், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் அப்பணியின் மூலம்கூட ஜகாத்திலிருந்து எதையும் பெற முடியாது என்று கூறி அப்பொறுப்பை வழங்க மறுத்துவிட்டார்கள். வேறு யாரேனும் கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன் என்றும், நீங்கள் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தர முடியாது என்றும் கூறிவிட்டார்கள். நபியவர்களின் குடும்பம் என்பது அவர்களின் பிள்ளைகளோடும் மனைவியரோடும் மட்டும் முடிந்துவிடுவதில்லை; மாறாக, அவர்களது கொள்ளுப் பாட்டனாரான ஹாஷிமின் வழியில் வந்த அப்பாஸ், ஹம்ஸா உள்ளிட்ட நால் தலைமுறையினரான பனூ ஹாஷிம் அனைவரையுமே அது குறிக்கும். ஆகவே, நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ஜகாத் நிதியைப் பெறவோ, ஜகாத் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு ஊதியமாகக்கூட அதை அனுபவிக்கவோ கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

பொது வாழ்க்கையில் நேர்மையைக் கடைப்பிடிப்பதிலும், பொது நிதியை நிர்வகிக்கும் பொறுப்புகளில் உறவினர்களை நியமிக்காமல் இருப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தார்கள். அரசாங்க நிதியிலிருந்து தானோ அல்லது தன் குடும்பத்தினரோ எவ்விதப் பயனையும் அடைய மாட்டோம் என்ற நிலையை அவர்கள் வார்த்தைக்காக மட்டும் சொல்லவில்லை. உலக அரங்கில் ஆட்சியாளர்கள் பொது நிதியை நேரடியாகத் தொடாமல் உறவினர்களின் பெயரிலும் பினாமிகளின் பெயரிலும் முறைகேடு செய்வதைப் பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களோ பொது நிதியைத் தாமோ, தம் குடும்பத்தினரோ, ஏன் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகூடத் தொடக்கூடாது என்பதில் அக்னி போன்ற கண்டிப்புடன் இருந்தார்கள்.

தம்மால் விடுதலை செய்யப்பட்ட ஓர் அடிமை வாரிசுகள் எவருமின்றி இறந்துவிட்டால், அவருடைய சொத்து விடுதலை செய்தவருக்கே சேரும் என்ற சட்டம் இஸ்லாத்தில் உண்டு. இதன் காரணமாகவே, நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிஉ (ரலி) அவர்கள் ஜகாத் வசூலிக்கும் பணியைக் கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். அந்த அடிமை ஜகாத் மூலம் சம்பாதித்து மரணித்தால், இறுதியில் அந்தப் பணம் தமக்கே வந்து சேர்ந்துவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் அத்தனை எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார்கள்.

பொதுப்பொறுப்பிலும் அரசாங்க நிதியிலும் எவ்விதச் சுயநலமும் குடும்பச் சலுகைகளும் புகுந்துவிடாமல் நபி (ஸல்) அவர்கள் காட்டிய தூய நேர்மையும் வெளிப்படைத்தன்மையுமே ஓர் இறைநம்பிக்கையாளர் பொதுவாழ்வில் பின்பற்ற வேண்டிய உச்சக்கட்ட முன்மாதிரியாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தபோதிலும், பொது வாழ்க்கையில் அசாத்தியமான நேர்மையைக் கடைப்பிடித்தார்கள். நிதி ஆதாரங்களாக இருந்தாலும் சரி, நீதி செலுத்துவதாக இருந்தாலும் சரி, அனைத்து விவகாரங்களிலும் அவர்களின் நேர்மை முன்னுதாரணமாக விளங்கியது. குறிப்பாக, அரசாங்கத்தின் பொது நிதியான ஜகாத் நிதியைத் தாமும் தொட மாட்டேன், தம்முடைய குடும்பத்தாரும் தொடக்கூடாது என்று முடிவு செய்தார்கள். மறுமை நாள் வரை வரக்கூடிய தம் வழித்தோன்றல்களுக்கும் அந்த நிதியை அவர்கள் தடுத்துவிட்டார்கள்.

பொதுவாக அதிகாரப் பொறுப்புக்கு வருபவர்கள் பொது நிதியைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாகவும் பாரபட்சமாகவும் வழங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், பொது வாழ்க்கையில் இருக்கும்போது தம்முடைய குடும்பத்தார் அந்த நிதியைப் பெற்றால் தலைமைத்துவத்தின் நாணயமும் நேர்மையும் சந்தேகத்திற்குரியதாகிவிடும் என்பதால், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தலைமையைத் தர வேண்டும் என்பதற்காகவே அதைத் தமக்குத் தடுத்துக்கொண்டார்கள். பேரீச்சம்பழமும் தண்ணீரும் மட்டுமே உண்டு வாழ்ந்து, அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத அளவுக்குக் கடும் சிரமமும் வறுமையும் இருந்தபோதிலும், பொது நிதியை எடுப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தபோதிலும் அவர்கள் அதைத் தீண்டவே இல்லை.

ஜகாத் நிதியைப் பெறுவது மட்டுமன்றி, அதை வசூலிக்கும் பணியில் ஊதியம் கிடைக்கும் என்றாலும்கூட அப்பணியையும் தம் குடும்பத்தினருக்கு வழங்கக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக இருந்தார்கள். தம் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்கும் ஜகாத்தையோ அதை வசூலிக்கும் பணியையோ வழங்கக் கூடாது என்ற விதியை உருவாக்கினார்கள். ஏனெனில், ஒருவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமை பின்னர் செல்வந்தராகி வாரிசு இல்லாமல் இறந்தால், அந்தச் சொத்து விடுதலை செய்தவருக்கே வந்து சேரும் என்ற வாரிசுரிமைத் தொடர்பு உண்டு. அந்த அடிப்படையில், தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளும் தங்களைச் சேர்ந்தவர்களே என்பதால் அவர்களும் பொது நிதியைத் தொடக்கூடாது என்று தடுத்தார்கள்.

அந்த வகையில், நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிஉ என்பவரை மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ஜகாத் வசூலிக்கும் பணிக்குத் துணையாக அழைத்தார். தமக்கு அந்தப் பணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், தம்முடன் வந்தால் வசூலில் பங்கு தருவதாகவும் கூறினார். அப்போது அபூராஃபிஉ அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கேட்காமல் இதில் ஈடுபட மாட்டேன் என்று கூறி நபி (ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்:

إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا
நிச்சயமாக ஸதகா (ஜகாத்) எங்களுக்கு ஆகுமானது அல்ல.

மேலும், وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ (ஒரு சமூகத்தாரால் விடுதலை செய்யப்பட்டவரும் அச்சமூகத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே, விடுதலை செய்யப்பட்டவராக இருந்தாலும் அவர் தம்மைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார் என்பதால், ஜகாத் வசூலிப்பதற்கோ, வசூலிப்பவருக்குத் துணையாகச் சென்று அதில் ஊதியமோ ஆதாயமோ பெறுவதற்கோ செல்லக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஜகாத் நிதியைத் தொடவும் கூடாது, அந்த நிதியைப் பரிபாலனம் செய்யும் பணியில் ஈடுபட்டுப் பயனடையவும் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறே, அலி (ரலி) அவர்களின் மகளும் உமர் (ரலி) அவர்களின் மனைவியுமான உம்மு குல்ஸூம் அவர்களிடம் அதாஉ இப்னுஸ் ஸாயிப் என்பவர் ஜகாத்துப் பொருளைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று எண்ணி அவர் அதைக் கொடுத்தபோது, அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது தாம் சிறுமியாக இருந்ததால் அதை நேரடியாகக் கேட்காவிட்டாலும், நபி (ஸல்) அவர்களின் அடிமையான மஹ்ரான் தமக்குக் கூறியதாகக் குறிப்பிட்டு, إِنَّ آلَ مُحَمَّدٍ لَا تَحِلُّ لَنَا الصَّدَقَةُ (முஹம்மதுடைய குடும்பத்தாராகிய எங்களுக்கு ஸதகா ஆகுமானதல்ல) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அந்தத் தர்மத்தை எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டார்கள். கடுமையான தேவை இருந்தபோதிலும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலால் அவர்கள் தர்மப் பொருளை மறுத்துவிட்டார்கள்.

ஒருவர் பொறுப்புக்கு வந்துவிட்டால் அவரைச் சார்ந்த உறவினர்கள் அனைவரும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதையே உலகெங்கும் பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள், தம் குடும்பத்தினர் பொது நிதியை நெருங்கவே கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்கள். எத்தகைய எளிமையான ஆட்சியாளராக இருந்தாலும் அரசாங்கத்திலிருந்துதான் சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன; மக்கள் வரிப்பணத்திலிருந்து சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். ஓய்வுபெற்ற பிறகும் தலைமுறைகள் வாழும் அளவுக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அரசுப் பணத்தைத் தொடாமல் சுயமாக உழைத்து வாழ்ந்த ஒரே தலைவராக நபி (ஸல்) அவர்களே திகழ்கிறார்கள். அவர்களுக்கு முன்னரும் பின்னரும் எந்தத் தலைவரிடமும் இத்தகைய நேர்மையைக் காண முடியாது.

நபி (ஸல்) அவர்களின் மஸ்ஜிதுந் நபவி வளாகமானது தொழுகைக்கான இடமாக மட்டுமன்றி, போர்ப் பயிற்சி அளிப்பது, அம்பெய்தல் மற்றும் குதிரையேற்றப் பயிற்சிகள் கொடுப்பது, ஜகாத் ஒட்டகங்களைக் கட்டி வைப்பது, வழக்கு விசாரணை நடத்துவது எனப் பல பணிகளுக்கும் பயன்பட்டு வந்தது. அந்தப் பள்ளிவாசல் வளாகத்தில்தான் ஜகாத்தாக வசூலிக்கப்பட்ட பேரீச்சம்பழங்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்களின் பேரரான ஹஸன் (ரலி) அவர்கள், அங்கிருந்த ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்கள்.

ஏழைகளுக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த ஜகாத்துடைய பேரீச்சம்பழங்களிலிருந்து நபி (ஸல்) அவர்களின் பேரன் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் வைத்தார். அவர் சிறு பிள்ளையாக இருந்தும், அற்பமான ஒரு பேரீச்சம்பழமாக இருந்தும் கூட, நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து, அவரது வாயில் விரலை விட்டு அதைத் துப்பச் செய்தார்கள்.

أَمَا شَعَرْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ
நாங்கள் சதகாவை உண்ண மாட்டோம் என்பதை நீ அறியவில்லையா?
(ஸஹீஹ்(புகாரி: 1491) ➚

ஜகாத் அல்லது சதகா என்பது மக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் பொது நிதியாகும். அந்தப் பொது நிதியிலிருந்து ஒரு சிறு பிள்ளை ஒரு பேரீச்சம்பழத்தை எடுப்பது சாதாரண மனிதர்களின் பார்வையில் பெரிய விஷயமாகத் தெரியாது. நம்முடைய வீட்டிற்குள் ஒருவர் நுழைந்து ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்துச் சாப்பிட்டுவிட்டால் கூட, நாம் அதை ஒரு குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்க மாட்டோம். சிறு பிள்ளைகள் என்பதற்காகவும், அற்பமான பொருள் என்பதற்காகவும் சலுகை வழங்குவது பொதுவான வழக்கம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் சிறு பிள்ளை என்றோ, சிறிய பொருள் என்றோ பார்க்காமல், பொது நிதியைத் தங்கள் குடும்பத்தினர் எவரும் பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

மக்கள் தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக ஒட்டகக் கணக்கில் பேரீச்சம்பழங்களை அள்ளிச் சென்றனர். ஆனால், குடும்பத்தில் உணவுக்கே கஷ்டப்படுகின்ற சூழல் நிலவிய போதிலும், தம் கண் முன்னே குவிந்து கிடந்த அந்தப் பொது நிதியைத் தம் குடும்பத்தினர் எவரும் தொடக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். ஃபாத்திமா, ஹஸன், ஆயிஷா உள்ளிட்ட மனைவியர், பிள்ளைகள், பெரிய தந்தை, சிறிய தந்தை என எவருமே அதைத் தொடக் கூடாது என்று கடுமையான கட்டுப்பாட்டை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களை வைத்து அவரது குடும்பத்தினர் சம்பாதித்துக் கொண்டார்கள் என்ற பேச்சு ஒருபோதும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தம் மீதான மக்களின் நம்பிக்கை சிறிதும் குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இத்தகைய கடினமான நிலையைத் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உணவை வீணடிக்காமல் மதிக்கும் குணம் கொண்டவர்கள். கீழே கிடக்கும் ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்துத் துடைத்துவிட்டு உண்ணும் அளவிற்கு எளிமையானவர்கள். ஆனால், மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் பேரீச்சம்பழங்கள் குவிக்கப்பட்டிருந்த காரணத்தால், தம் வீட்டு வாசலில் ஒரு பேரீச்சம்பழம் கிடப்பதைக் கண்டால் கூட, அது ஜகாத்துடையதாக இருக்குமோ என்ற அச்சத்தில் அதை உண்ண மாட்டார்கள்.

فَأَرْفَعُهَا لِآكُلَهَا ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً
நான் அதை உண்பதற்காக எடுப்பேன்; பின்னர் அது சதகாவாக இருக்குமோ என்று அஞ்சி (விட்டு) விடுவேன்.
(ஸஹீஹ்(புகாரி: 2432) ➚

தம் வீட்டில் இருந்த பேரீச்சம்பழம் வாசலில் விழுந்திருக்க வாய்ப்பிருந்தும் கூட, அது பொது நிதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் காரணமாகவே அதைத் தவிர்த்துவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் தமக்கென வாழாமல், மற்றவர்களுக்குத் தாராளமான சலுகைகளை வழங்கிவிட்டுத் தங்களுக்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்ட இந்த நேர்மையே மக்களைப் பெரிதும் ஈர்த்தது.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்தவுடன், வழக்கமாக அமர்ந்து துஆ செய்வது போல் அமராமல், மிக விரைவாக எழுந்து தம் வீட்டிற்குச் சென்றார்கள். இதைக் கண்ட மக்கள் வியப்புடன் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்த நபி (ஸல்) அவர்கள் அதற்கான காரணத்தை விளக்கினார்கள். ஜகாத்தாக வந்திருந்த ஒரு வெள்ளிக்கட்டி வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. தொழுகையின் போது அது நினைவுக்கு வந்தது. ஒருவேளை மரணம் திடீரென வந்துவிட்டால், வீட்டில் இருக்கும் அந்தப் பொருளைத் தங்களுடைய சொத்து என்று குடும்பத்தினர் தவறாகக் கருதி எடுத்துக்கொள்ளக் கூடும் என்பதால், பொது நிதியை ஒரு கணமும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கருதி, உடனே அதை உரியவர்களிடம் பங்கிட்டுக் கொடுக்குமாறு கூறிவிட்டு வந்ததாகத் தெரிவித்தார்கள். பொது நிதியைத் தவறுதலாகக் கூட வீட்டில் வைத்துவிடக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் அவ்வளவு அச்சம் கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்வு ஸஹீஹ் புகாரியில் 851-வது செய்தியாகப் பதிவாகியுள்ளது.

ஒரு மனிதன் எவ்வளவு சொத்து சேர்த்தான் என்பது அவன் மரணித்த பிறகே தெரியவரும். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் முன் தம்முடைய நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். அவர்கள் ஜகாத் நிதியில் ஒருபோதும் வாழவில்லை. மாறாக, நூறு ஆடுகளைக் கொண்ட ஆட்டுப்பண்ணை, கைபர் மற்றும் ஃபதக் பகுதிகளில் யூதர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்த விவசாய நிலங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த சொந்த வருமானத்தைக் கொண்டே வாழ்ந்தார்கள். அவ்வாறு சொந்தமாகச் சம்பாதித்த சொத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட, தமக்கு மரணம் ஏற்பட்ட பிறகு தம்முடைய சொந்த நிதி எதுவுமே குடும்பத்தினருக்குச் சேரக் கூடாது என்றும், அவை பொது நிதியில் சேர்க்கப்பட்டு அரசாங்கத்திற்குச் சொந்தமாகிவிட வேண்டும் என்றும் கூறினார்கள். மனைவியர் கையேந்தும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் உயிரோடு இருக்கும் வரை பேரீச்சந்தோட்டங்களின் வருமானத்திலிருந்து அவர்களின் வாழ்வாதாரச் செலவுகளை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்; அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகாது, அது அரசாங்கத்தையே சாரும் என்று தெளிவுபடுத்தினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமக்குப்பின் விட்டுச் செல்லும் சொத்துக்களிலிருந்து வரும் வருவாயை தம்முடைய மனைவிமார்களின் செலவுகளுக்குப் பிரித்துக் கொடுக்குமாறும், அந்தச் சொத்து யாருக்கும் வாரிசுரிமையாகச் சொந்தமாகாமல் பொது நிதியிலும் ஏழை எளியவர்களுக்கான தர்மத்திலும் சேர்ந்துவிட வேண்டும் என்றும் தம் வாழ்நாளிலேயே உத்தரவிட்டிருந்தார்கள்.

لَا يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَوْنَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ
என் வாரிசுகள் எவரும் தங்க நாணயங்களைப் பங்கிட்டுக் கொள்ள மாட்டார்கள்; என் மனைவிமார்களின் செலவும் என் ஊழியரின் கூலியும் போக நான் விட்டுச் சென்றவை அனைத்தும் தர்மமாகும்.
(புகாரி: 6729) ➚

ஒருவர் தாம் உழைத்துச் சம்பாதித்த சொத்து தம் குடும்பத்திற்குச் சேர வேண்டும் என்று விரும்புவது இயல்பானது; அதில் தவறேதும் இல்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் தாம் ஈட்டிய சொத்துக்கள் அனைத்தும் தமக்குப்பின் பொதுமக்களுக்கான தர்மமாக மாறி அரசாங்கத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், அதிலிருந்து தம் மனைவிமார்களின் செலவுகள் மட்டுமே பொறுப்பேற்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனையிட்டு, அனைத்தையும் தர்மமாக்கிவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு ஃபதக் மற்றும் கைபர் ஆகிய நிலங்கள் அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. அதிலிருந்து கிடைத்த வருமானத்திலிருந்து நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களுக்குரிய செலவினங்கள் வழங்கப்பட்டு வந்தன. அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, தம் தந்தை விட்டுச் சென்ற சொத்தில் தமக்குரிய பங்கைத் தருமாறு கோரினார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாரிசுரிமை இல்லை என்று கூறியதை அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.

لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ
எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார்கள்; நாங்கள் விட்டுச் சென்றவை அனைத்தும் தர்மமாகும்.
(புகாரி: 3093) ➚

இதனைக் கேட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையான கோபம் அடைந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், தம் சொந்தக் குடும்பத்தை விடவும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தை அதிகமாக நேசித்தாலும், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறி அந்தச் சொத்தை வழங்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்கள். இதனால் மனவருத்தமடைந்த ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைந்த ஆறு மாதங்களில் தாமும் மரணிக்கும் வரை அபூபக்கர் (ரலி) அவர்களுடன் பேசவே இல்லை. அவர்கள் மரணித்த செய்தி அபூபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் அலி (ரலி) அவர்களால் இரவோடு இரவாக நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்குத் தேவைகள் இருந்தபோதும் கூட, நபிமார்களின் சொத்து தனிப்பட்ட குடும்பத்திற்கானதாக அமையாமல் சமூகத்தின் பொதுநலனுக்கும் ஏழை எளியவர்களுக்கும் பயன்படும் பொதுச் சொத்தாகவே விளங்க வேண்டும் என்பதில் நபி (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமக்கென எதையும் சேர்த்து வைக்காமல், தம் சொந்த உழைப்பையும் சொத்துக்களையும் கூட சமுதாயத்தின் ஏழை எளிய மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர்களுடைய உறவினர்கள் உரிமை கோரி அபூபக்கர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் கேட்டபோது, நபி (ஸல்) அவர்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது என்று அவர்கள் பதிலளித்த விவரத்தைப் பார்த்தோம்.

இதற்கு முன்னதாக, நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற அந்தச் சொத்துக்கள் என்னவென்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். வீட்டை விட்டு, நாட்டை விட்டு வெறுங்கையோடு மதீனாவுக்கு வந்த நபி (ஸல்) அவர்களுக்கு அங்கே சொத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், எத்தகைய சொத்துக்கு அவர்கள் உரிமை கோரினார்கள் என்பதை விளங்க முடியும்.

நபி (ஸல்) அவர்கள் போர்க்களங்களில் ஈடுபடும்போது, எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் போர்ப் பொருட்களைப் போரில் பங்கெடுத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். போர்க்களத்தில் வெற்றி பெற்றவுடன் எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் அனைத்தும் போராளிகளுக்குப் பங்கிடப்படும். அதேபோன்று ஒரு நாடு கைப்பற்றப்பட்டால், அங்கு தனிநபர்களுக்குச் சொந்தமில்லாத பொதுவான புறம்போக்குச் சொத்துக்கள் அனைத்தும் கைப்பற்றிய நாட்டிற்குச் சொந்தமாகும் என்பது எல்லாக் காலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உலக விதியாகும். அந்த அடிப்படையில் கைப்பற்றப்படும் பொதுவான நிலங்களையும் சொத்துக்களையும் ஏழைகளுக்கும் போரில் ஈடுபட்டவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.

இவ்வாறு போரில் கைப்பற்றப்படும் கனீமத் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை, அதாவது 20 சதவீதத்தை நபி (ஸல்) அவர்கள் முடிவெடுத்துச் செயல்படுத்துவதற்கு அல்லாஹ் அனுமதியளித்தான்.

وَٱعْلَمُوٓا۟ أَنَّمَا غَنِمْتُم مِّن شَىْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُۥ
அறிந்திருங்கள்: நீங்கள் போரில் வெற்றிப்பொருளாக எதனைப் பெற்றாலும், நிச்சயமாக அதில் ஐந்தில் ஒரு பங்கு அல்லாஹ்வுக்கு உரியதாகும்.
(அல்குர்ஆன்: 8:41)➚

போரில் பங்கெடுத்தவர்களுக்கே அனைத்தையும் கொடுத்துவிட்டால், களத்திற்கு வராத அனாதைகள், ஏழைகள், ஊனமுற்றவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்கு எதுவும் கிடைக்காமல் போய்விடும். அக்காலத்தில் ராணுவ வீரர்களுக்குத் தனியாகச் சம்பளம் கிடையாது என்பதால், போரில் கிடைத்ததில் 80 சதவீதப் பங்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 20 சதவீதம் அரசாங்கத் தலைவர் என்ற முறையில் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு ஜகாத், சதகா பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த 20 சதவீதத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் தேவையானதை எடுத்துக்கொள்ளவும், உறவினர்களுக்கு வழங்கவும், அனாதைகள் மற்றும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கவும் அல்லாஹ் அனுமதித்தான். ஆயினும் நபி (ஸல்) அவர்கள் மிகக் குறைந்த அளவே தமக்கென்று எடுத்துக்கொண்டு, எஞ்சிய அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கும் போரில் கலந்துகொள்ளாத எளிய மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

இரண்டாவதாக ‘ஃபைவு’ என்றொரு வகைச் சொத்து இருக்கிறது. அதாவது, ஆயுதம் ஏந்தியோ, குதிரைப்படை அல்லது காலாட்படை திரட்டியோ போர் புரியாமல், எதிரிகள் தாமாகவே பயந்து விட்டுவிட்டு ஓடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய சொத்துக்களாகும். இதில் போர் எதுவும் நடைபெறாததாலும், போராளிகள் யாரும் பங்கெடுக்காததாலும், இந்த முழுச் சொத்தையும் எவ்வாறு கையாள்வது என்ற அதிகாரம் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை அவர்கள் தமக்கும், குடும்பத்தாருக்கும், தேவையுடைய ஏழை எளியவர்களுக்கும் பகிர்ந்தளித்தார்கள். இந்தச் சட்டம் திருக்குர்ஆனின் 59-வது அத்தியாயத்தின் 6 முதல் 9 வரையிலான வசனங்களில் கூறப்படுகிறது. எவ்விதப் படை திரட்டலும் இன்றி அல்லாஹ் தன் வல்லமையால் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய அச்சொத்துக்களைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்:

فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَٱبْنِ ٱلسَّبِيلِ
அது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், தூதரின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும்.
(அல்குர்ஆன்: 59:7)➚

போர் எதுவும் நடைபெறாத காரணத்தினால், இத்தகைய பொதுச் சொத்தில் போராளிகள் எவரும் உரிமை கொண்டாட முடியாது.

இவ்வாறாக நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை வரலாற்று ரீதியாக விளங்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில், பனூ நளீர் மற்றும் பனூ குறைழா ஆகிய யூதக் கூட்டத்தினர் மதீனாவைச் சுற்றி வாழ்ந்து வந்தனர். அவர்கள் சாதாரண மக்களாக வாழாமல், கோட்டைகளைக் கட்டி, தனியாக ஆட்சி அதிகாரம் செலுத்தி, மக்களிடம் வரி வசூலித்துக்கொண்டு தங்களை யாரும் நெருங்க முடியாத சிற்றரசாங்கங்களாக வாழ்ந்து வந்தார்கள். மதீனாவைச் சுற்றிலும், கைபர் பகுதியிலும் இத்தகைய கோட்டைகள் அமைந்திருந்தன.

அச்சமயத்தில் மக்கத்து இணைவைப்பாளர்கள் பனூ நளீர் மற்றும் பனூ குறைழா கூட்டத்தினருக்குக் கடிதம் எழுதினார்கள். நாங்கள் எங்கள் நாட்டிலிருந்து விரட்டியடித்தவர்களுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்திருக்கிறீர்கள்; அவர்களை நீங்கள் உங்கள் பகுதியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராகப் போரிட வேண்டும்; இல்லையெனில் மக்காவிலிருந்து நாங்கள் உங்கள் மீது படையெடுத்து வந்து, உங்கள் மீது தாக்குதல் நடத்தி, உங்களைச் சிறைபிடிப்போம் என்று மிரட்டல் விடுத்தார்கள்.

ஒற்றர்கள் மூலம் இத்தகவலை அறிந்த நபி (ஸல்) அவர்கள், நேரடியாக பனூ நளீர் கூட்டத்தாரைச் சந்தித்து, மக்கத்து இணைவைப்பாளர்களின் பேச்சைக் கேட்டு தங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்கள். நபி (ஸல்) அவர்களோடு இருப்பவர்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள் என்பதை உணர்ந்த யூதர்கள், மக்கத்து இணைவைப்பாளர்களின் சொல்லை ஏற்காமல் அமைதி காத்தனர்.

இதன் பின்னர் பத்ருப் போர் நிகழ்ந்தது. அப்போரில் மக்கத்து இணைவைப்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். அதன் கோபத்தில் அவர்கள் மீண்டும் பனூ நளீர் கூட்டத்தினருக்கு மற்றொரு கடிதத்தை அனுப்பினார்கள். பத்ருப் போரில் அவரது கை ஓங்கிவிட்டது; அவரை இப்படியே விட்டுவிட்டால் எங்களுடைய கதிதான் உங்களுக்கும் ஏற்படும்; நேரடிப் போரில் அவரை வெல்ல முடியாது என்பதால், வஞ்சகமான முறையில் அவரைத் தீர்த்துக்கட்டி விடுங்கள் என்று தூண்டினார்கள்.

மக்கத்து இணைவைப்பாளர்களையே வென்ற முஸ்லிம்களை நேருக்கு நேர் எதிர்க்க முடியாது என்பதையும், அருகிலேயே நபி (ஸல்) அவர்கள் வலிமை பெற்று வருவதால் தங்களது ஆட்சியும் கோட்டைகளும் பறிபோய்விடும் என்பதையும் பனூ நளீர் கூட்டத்தினர் உணர்ந்தனர். எனவே சதித்திட்டம் தீட்டி நபி (ஸல்) அவர்களை அழிக்க முடிவெடுத்தார்கள். இதற்காக அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பினார்கள்: நீங்கள் ஒரு புதிய மார்க்கத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்; நாங்கள் வேறொரு மார்க்கத்தில் இருக்கிறோம்; இதில் எது சரியானது என்பதை விவாதித்து ஏற்றுக்கொள்வோம்; எனவே உங்கள் தரப்பிலிருந்து முப்பது பேருடன் நீங்கள் வாருங்கள்; நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து முப்பது பாதிரியார்களை அழைத்து வைத்திருக்கிறோம்; நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு விளக்கம் கொடுங்கள் என்று அழைத்தார்கள்.

நாங்கள் அனுப்பும் முப்பது பாதிரிமார்களும் நீங்கள் இறைத்தூதர்தான் என்பதை ஏற்றுக்கொண்டால், எங்கள் சமுதாயம் முழுவதுமே உங்களை ஏற்றுக்கொண்டு உங்கள் பின்னால் வந்துவிடும் என்று யூதர்கள் கூறினர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தில் கூறவில்லை; நபி (ஸல்) அவர்களை வரவழைத்துக் கொலை செய்வதற்காகவே இத்திட்டத்தைத் தீட்டினர்.

நபி (ஸல்) அவர்கள் முப்பது தோழர்களோடு அங்கு சென்று சேர்ந்தார்கள். அப்போது அங்கிருந்த சிலர் தங்களுக்குள் ஆலோசித்து, “நாம் நினைப்பது போல் இவர் தனியாக வரவில்லை, முப்பது பேருடன் வந்திருக்கிறார். இந்த இடத்தில் நாம் தாக்குதல் நடத்தினால், இந்த முப்பது பேரும் தங்கள் உயிரை விட்ட பிறகே தவிர அவரை நெருங்க விடமாட்டார்கள். இவர்கள் சாதாரண நபர்கள் அல்லர்; தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள். நாம் திடீரெனத் தாக்கினாலும் பயந்து சிதறி ஓடமாட்டார்கள், கடுமையான பதிலடி கொடுப்பார்கள். எனவே அவரை நெருங்க முடியாது; நமக்கே பெரும் சேதம் ஏற்படும்” என்று கூறினர்.

அதனால் அவர்கள் தங்கள் திட்டத்தை மாற்றிக்கொண்டனர். நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அறுபது பேர் கூடிப் பேசும்போது கூச்சலும் குழப்பமும் ஏற்படும்; யார் சொல்வது சரி என்று விளங்காது. எனவே நீங்கள் மூன்று பேருடன் வாருங்கள், நாங்களும் மூன்று பேரை அழைத்து வருகிறோம். அந்த மூன்று பாதிரிமார்களும் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டால், நாங்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினர். மூன்று பேராக வரும்போது சுலபமாகத் தாக்கிவிடலாம் என்பதே அவர்களின் உள்நோக்கமாக இருந்தது.

இந்த வஞ்சகத் திட்டம் நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. அவர்கள் மூன்று பேருடன் செல்வதற்குத் தயாரானபோது, பனூ நளீர் கோத்திரத்தைச் சேர்ந்த, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரின் சகோதரி வழியாக இச்செய்தி தெரியவந்தது. அந்தப் பெண் யூத மதத்திலேயே இருந்தார். நபி (ஸல்) அவர்களைக் கூட்டமாகச் சேர்ந்து கொல்வதற்காகவே அழைக்கிறார்கள் என்ற தகவலை அவர் தன் சகோதரருக்குத் தெரிவிக்க, அவர் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி வந்து சேர்ந்தது. மூன்று பேராகச் செல்லும்போது ஐம்பது பேர் சூழ்ந்து தாக்கினால் தற்காத்துக் கொள்ள முடியாது என்பதற்காகவே இப்படி அழைத்திருக்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் வஞ்சகத் திட்டம் தீட்டியிருப்பது எனக்குத் தெரிந்துவிட்டது. எனவே என்னுடன் ஒரு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்; இல்லையேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று அவர்களுக்குத் தகவல் அனுப்பினார்கள். தொடர்ந்து காலாட்படை, குதிரைப்படை எனப் படைகளையும் அங்கு கொண்டு போய்க் குவித்தார்கள்.

இதைக் கண்ட யூதர்கள் சமாதானத்திற்கு வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் வஞ்சகம் செய்தவர்கள். நேருக்கு நேர் எதிரிகளாக நின்றால் அது வேறு விஷயம். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறி வரவழைத்துக் கொலை செய்யத் துணிந்த உங்களை இனி நம்ப முடியாது; உங்களுடன் இணைந்து வாழவும் முடியாது. எனவே நீங்கள் அனைவரும் உயிரோடு செல்ல வேண்டுமென்றால், இந்நாட்டை விட்டு வெளியேறி வேறொரு பாதுகாப்பான நாட்டிற்குச் சென்றுவிட வேண்டும். உங்கள் சொத்துக்களை எல்லாம் இங்கேயே விட்டுவிட வேண்டும்; ஷாம் தேசத்திற்குச் சென்றுவிட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்கள்.

அக்காலத்தில் ஷாம் (சிரியா) பகுதியில் யூதர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தனர். “ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது. ஒருவருக்கு ஒரு ஒட்டகம் வீதம், அந்த ஒட்டகத்தில் எவ்வளவு சுமை ஏற்ற முடியுமோ அவ்வளவு பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு பாதுகாப்பாகப் போய்விட வேண்டும். இதற்கு உடன்படாவிட்டால் போர்தான் நடக்கும். இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறி வஞ்சகம் செய்து துரோகம் இழைத்ததால், உங்கள் மன்னிப்பையோ திருந்துதலையோ ஏற்க முடியாது” என்றும் தெளிவுபடுத்தினார்கள். வேறு வழியின்றி அவர்கள் இதை ஏற்றுக்கொண்டனர். பனூ நளீர் கூட்டத்தினர் தங்கள் வீடுகளைப் பிறர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தாங்களே இடித்துத் தகர்த்துவிட்டு, சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இவ்வாறு ஒரு முழுச் சமுதாயமும் விட்டுச் சென்ற பெரும் சொத்துக்கள்தான் ஃபய் எனப்படும். இச்சொத்துக்கள் அனைத்தும் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு வந்து சேர்ந்தன. இந்தப் பெரும் சொத்தைக் கைப்பற்றுவதற்குப் போரோ, குதிரைப்படைத் தாக்குதலோ, எந்தவிதச் சேதமோ ஏற்படவில்லை. முஸ்லிம்கள் எந்தப் பெரும் முயற்சியும் செய்யாமலேயே அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் அச்சத்தை ஏற்படுத்தி வெளியேற்றினான். இதனை முஸ்லிம்களின் ஆளுகையிலிருந்து முதன்முதலாக ஒரு கூட்டத்தினர் வெளியேற்றப்பட்ட நிகழ்வு (أَوَّلُ الْحَشْرِ) என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. திருக்குர்ஆனின் 59-வது அத்தியாயமான ஸூரா அல்-ஹஷ்ர் இது குறித்தே பேசுகிறது.

ஒரு பகுதியே காலி செய்யப்பட்டுச் சென்றதால், பல ஏக்கர் தோட்டங்கள், நிலங்கள், ஆடு மாடுகள் எனப் பெரும் செல்வம் இஸ்லாமிய அரசாங்கத்திற்குக் கிடைத்தது. இத்தகைய ஃபய் சொத்துக்களில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போர் வீரர்கள் உரிமை கோர முடியாது. இது பொதுமக்களுக்கான நிதியாகவே ஆக்கப்பட வேண்டும். இதனை எவ்வாறு பங்கிடுவது என்பதை அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் பொறுப்பிலேயே விட்டுவிட்டான்.

நபி (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் தமக்கே உரித்தாக்கிக் கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் மதீனாவில் உள்ள ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். தம் மனைவிமார்களின் எளிய வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்காக அதிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கினார்கள். அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையோ, தங்க நகைகளோ, பட்டாடைகளோ அணிந்து வாழவில்லை. குடிசையில் வாழ்ந்து, பேரீச்சம்பழமும் தண்ணீரும் மட்டுமே உண்டு கழித்தார்கள்; அவர்களின் வீடுகளில் பல நாட்கள் அடுப்பு எரியாமலும் இருந்தது. அத்தகைய எளிய வாழ்க்கைக்குரிய பேரீச்சந்தோட்டங்களின் ஆண்டு மகசூலை மட்டும் நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அதை அவர்கள் உணவாகவும், பண்டமாற்று செய்து வேறு தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.

இச்சொத்து குறித்து நபி (ஸல்) அவர்கள், “என் குடும்பத்தார் வாழும் வரை இந்த வருமானத்திலிருந்து அவர்களின் செலவினங்களைக் கொடுத்துவிடுங்கள். அவர்கள் மறைந்த பிறகு இது பொதுச் சொத்தாக, அரசாங்கத்திற்கே உரியதாகிவிடும். இச்சொத்தை யாரும் சொந்தமாக்கிக்கொள்ளக் கூடாது, இது தர்மமாகும் (ஸதகா)” என்று தெளிவுபடுத்தியிருந்தார்கள். அதாவது மனைவிமார்கள் உயிரோடு இருக்கும் வரை அதிலிருந்து கிடைக்கும் விளைபொருட்களை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமே தவிர, மூலச் சொத்தைக் கொடுத்துவிடக் கூடாது.

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் மருமகன்களில் ஒருவரான உஸ்மான் (ரலி) பெரும் செல்வந்தராகவும் வணிகராகவும் இருந்ததால், இந்தச் சொத்து குறித்து எந்த உரிமையும் கோரவில்லை. மற்றொரு மருமகனான ஏழ்மை நிலையில் இருந்த அலி (ரலி) அவர்கள் இச்சொத்தின் நிர்வாகத்தைத் தம் பொறுப்பில் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள் அலி (ரலி) அவர்களிடம் வந்து, “நபி (ஸல்) அவர்களுக்கு ஆண் மக்கள் இல்லாததால், வாரிசுரிமைச் சட்டப்படி பெரிய தந்தை என்ற முறையில் எனக்கும் இதில் பங்கு உண்டு” என்று கூறி வாதாடினார்கள். சாதாரண சொத்துக்களுக்குரிய வாரிசுரிமை விதியின் அடிப்படையில் அவர்கள் பங்கு கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்சினை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு வந்தது.

இவ்விவகாரத்தைத் தீர்த்து வைக்குமாறு கோரி உமர் (ரலி) அவர்களிடம் வழக்கு கொண்டுவரப்பட்டது. உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவர்களைச் சந்திப்பதற்காகச் சொர்க்கவாசிகளென நற்செய்தி கூறப்பட்ட முக்கியமான நான்கு தோழர்கள் வந்தார்கள். உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகிய அந்த நால்வரும் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டனர்.

உஸ்மான் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி), ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) ஆகிய நால்வருக்கும் உமர் (ரலி) அவர்கள் தங்களைச் சந்திக்க அனுமதி வழங்கினார்கள். சற்று நேரத்தில், சொத்துத் தகராறு தொடர்பாக முறையிடுவதற்காக அலி (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் வருகை தந்து அனுமதி கேட்டபோது, அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், பனூ நளீர் கோத்திரத்தாரிடமிருந்து ஃபய் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த சொத்து விவகாரத்தில் தங்களுக்கும் அலி (ரலி) அவர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு முறையிட்டார். மேலும், அலி (ரலி) அவர்கள் மீது கடும் அதிருப்தி கொண்டு, மோசடிக்காரன், பொய்யன் போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தமக்குரிய பங்கைக் கொடுக்காமல் ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய கடுமையான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பது ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில் பதிவாகியுள்ளது; புகாரியில் இவ்வார்த்தைகள் இடம்பெறவில்லை. அங்கிருந்த மற்ற நால்வரும் இவ்விருவருக்கும் இடையிலான இந்த வழக்கை விரைந்து தீர்த்து வைக்குமாறு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் அங்கிருந்த நால்வரையும் நோக்கி, நபி (ஸல்) அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ
நாங்கள் விட்டுச் சென்றவை தர்மமாகும், எங்களுக்கு யாரும் வாரிசாக முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் அறிவீர்களா?

அதற்கு அந்த நால்வரும் ஆம் என்று உறுதிப்படுத்தினர். பின்னர் உமர் (ரலி) அவர்கள் அலி (ரலி), அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இதே கேள்வியைக் கேட்க, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அவ்வாறாயின், இது நபி (ஸல்) அவர்களின் தனிப் பொறுப்பில் இருந்த பொதுத் தர்மம் எனும் பொழுது, இதனை எவ்வாறு நீங்கள் சொந்தம் கொண்டாட முடியும் என்று உமர் (ரலி) கேள்வி எழுப்பினார்கள். இச்சொத்தின் வருமானத்திலிருந்து நபி (ஸல்) அவர்களின் மனைவியருக்கும் செலவிடப்பட வேண்டும் என்பதால், இதனை எவருக்கும் சொந்தமாக்கித் தர முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இச்சொத்து எவ்வாறு நிர்வகிக்கப்பட்டதோ அதே அடிப்படையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் பொறுப்பாளரைப் போன்று இருந்து நிர்வகித்து, அதன் வருமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் நிபந்தனையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒப்படைக்க முடியும்; இல்லையெனில் தாமே தொடர்ந்து நிர்வகிப்பதாக உமர் (ரலி) கூறினார்கள். அந்த நிபந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னர் அப்பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களுக்குப் பெரும் சொத்துகள் கிடைத்தபோதும், தம் மறைவுக்குப் பிறகு குடும்பத்தினர் அதனைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாதவாறு தடுத்து பொதுவுடைமையாக்கினார்கள். இறைவனால் வழங்கப்பட்ட அந்த வருமானத்திலிருந்து குடும்பத்தினரின் வாழ்வாதாரத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு, பின்னர் அது பொதுமக்களின் அரசுச் சொத்தாகவே மாற வேண்டும் என்று பணித்தார்கள். அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அச்சொத்தை எவருக்கும் சொந்தமாகப் பிரித்துக் கொடுக்காமல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலையே செயல்படுத்தினார்கள். கைபர் போன்ற பிற சொத்துகளிலும் இதே போன்ற நிலைப்பாடே கடைப்பிடிக்கப்பட்டது.

உலக மக்கள் அனைவரும் தம் குடும்பத்திற்காகவே சொத்துகளைச் சேர்த்து வைக்கும் இயல்புக்கு மாறாக, நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தினர் வாரிசுரிமை அடிப்படையில் அதனை அனுபவிக்காதவாறு தடுத்து நேர்மையைப் பேணினார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு சிறந்த சான்றாகும்.

நபி (ஸல்) அவர்கள் தம் சொந்தக் குடும்பத்திற்கு வாரிசுரிமையாக எதையும் விட்டுச் செல்லாமல் பொதுச் சொத்தாக ஆக்கிச் சென்றதன் மூலம், சுயநலமற்ற ஓர் உன்னத நேர்மைக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.