ஆயுதத்தின் ஓசை கேட்ட நபி (ஸல்) — காவலுக்கு வந்திருந்தார் ஸஅத் (ரலி)
“(நான் தான்) ஸஅத் பின் அபீவக்காஸ்” — “உங்களைக் காவல் காக்க வந்தேன்” என்றார்
سَهِرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْدَمَهُ الْمَدِينَةَ، لَيْلَةً، فَقَالَ: «لَيْتَ رَجُلًا صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ» قَالَتْ: فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ سَمِعْنَا خَشْخَشَةَ سِلَاحٍ، فَقَالَ: «مَنْ هَذَا؟» قَالَ: سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَاءَ بِكَ؟» قَالَ: وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ أَحْرُسُهُ، فَدَعَا لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَامَ. وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ فَقُلْنَا: مَنْ هَذَا؟
– وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، يَقُولُ: قَالَتْ عَائِشَةُ: أَرِقَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), “இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!” என்று கூறினார்கள். இவ்வாறே நாங்கள் இருக்கும்போது ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். வந்தவர், “(நான் தான்) சஅத் பின் அபீவக்காஸ்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எதற்காக வந்தீர்?” என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “யார் அது?” என்று நாங்கள் கேட்டோம் எனக் காணப்படுகிறது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4786) ➚
யாரும் கேட்காமலேயே, இரவில் தானாக முன்வந்து நபி (ஸல்) அவர்களைக் காவல் காக்க வந்தார் ஸஅத் (ரலி). அவர் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை; தம் அன்பையும் பொறுப்பையும் மட்டுமே செயலாக்கினார். அதற்குப் பதிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அவருக்குக் கிடைத்தது ஒரு தூதரின் நேரடிப் பிரார்த்தனை.
மார்க்கத்திற்காகவும், மார்க்கத்தைச் சுமப்பவர்களுக்காகவும் நாம் அமைதியாகச் செய்யும் சிறு சேவைகள் கூட இறைவனிடம் பெரிதாகக் கருதப்படும். பாராட்டுக்காகக் காத்திராமல், நம் கடமை என்று நினைத்து அமைதியாகச் செய்யும் ஒவ்வொரு சேவையும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்.