தொழுகையில் மறந்த நபி (ஸல்) — “நானும் மனிதன்தான்” என்று கூறியது ஏன்?
“நானும் உங்களைப் போலவே மறந்துவிடுகிறேன்; மறந்தால் எனக்கு நினைவுபடுத்துங்கள்” என்றார்கள் நபி (ஸல்)
صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ إِبْرَاهِيمُ: زَادَ أَوْ نَقَصَ – فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا، قَالَ: فَثَنَى رِجْلَيْهِ، وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: «إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ، فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيَسْجُدْ سَجْدَتَيْنِ»
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள் “நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)” என்று கூறினர்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி, “ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன்.
அவ்வாறு நான் எதையேனும் மறந்து விட்டால் எனக்கு (அதை) நினைவுபடுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவு செய்து,அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 991) ➚
தொழுகையில் ஏற்பட்ட மாற்றத்தைத் தோழர்கள் சுட்டிக்காட்டியபோது, மறைக்கவோ சாக்குப்போக்குச் சொல்லவோ முயலவில்லை நபி (ஸல்) அவர்கள். உடனே திருத்திக்கொண்டு, தாமும் மறதிக்கு உட்பட்டவர்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்கள்.
தவறு நேர்ந்தால் மறைப்பதிலோ நியாயப்படுத்துவதிலோ அல்ல, ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்வதிலேயே கண்ணியம் இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் நமக்குக் கற்பிக்கிறது. இறைத்தூதரே இவ்வளவு எளிமையாக ஒப்புக்கொண்டபோது, நம் தவறுகளை ஒப்புக்கொள்ள நமக்கென்ன தயக்கம்?