அபூதர்தாவை நோன்பு விடச் சொன்ன ஸல்மான் (ரலி) — கடமைகளின் பங்கீடு

ஹதீஸ் சம்பவங்கள்

“உம் இறைவனுக்கும், உமக்கும், உம் குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு” என்றார்கள் ஸல்மான் (ரலி)

آخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ سَلْمَانَ، وَأَبِي الدَّرْدَاءِ، فَزَارَ سَلْمَانُ أَبَا الدَّرْدَاءِ، فَرَأَى أُمَّ الدَّرْدَاءِ مُتَبَذِّلَةً، فَقَالَ لَهَا: مَا شَأْنُكِ؟ قَالَتْ: أَخُوكَ أَبُو الدَّرْدَاءِ لَيْسَ لَهُ حَاجَةٌ فِي الدُّنْيَا، فَجَاءَ أَبُو الدَّرْدَاءِ فَصَنَعَ لَهُ طَعَامًا، فَقَالَ: كُلْ؟ قَالَ: فَإِنِّي صَائِمٌ، قَالَ: مَا أَنَا بِآكِلٍ حَتَّى تَأْكُلَ، قَالَ: فَأَكَلَ، فَلَمَّا كَانَ اللَّيْلُ ذَهَبَ أَبُو الدَّرْدَاءِ يَقُومُ، قَالَ: نَمْ، فَنَامَ، ثُمَّ ذَهَبَ يَقُومُ فَقَالَ: نَمْ، فَلَمَّا كَانَ مِنْ آخِرِ اللَّيْلِ قَالَ: سَلْمَانُ قُمِ الآنَ، فَصَلَّيَا فَقَالَ لَهُ سَلْمَانُ: إِنَّ لِرَبِّكَ عَلَيْكَ حَقًّا، وَلِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا، وَلِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا، فَأَعْطِ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقَ سَلْمَانُ»

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஸல்மான்(ரலி), அபூ தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபூ தர்தாவின் மனைவி) உம்மு தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் ஸல்மான் கேட்டதற்கு உம்மு தர்தா (ரலி), ‘உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார்.

ஸல்மான் அபூ தர்தாவிடம், ‘உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, ‘நான் நோன்பு வைத்திருக்கிறேன்’ என்றார். ஸல்மான், ‘நீர் உண்ணாமல் உண்ணமாட்டேன், என்று கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா (ரலி) நின்று வணங்கத் தாயரானார். அப்போது ஸல்மான் (ரலி), ‘உறங்குவீராக’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான், ‘உறங்குவீராக’ என்றார். கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி), ‘இப்போது எழுவீராக!’

என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம் ஸல்மான் (ரலி), ‘நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக’ என்று கூறினார்கள். பிறகு அபூ தர்தா(ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைத் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஸல்மான் உண்மையையே கூறினார்!’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஜுஹைஃபா (ரலி)

நூல் – (புகாரி: 1968)

வணக்க வழிபாட்டில் தீவிரம் காட்டுவது பக்தியின் அடையாளமல்ல என்பதை ஸல்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரருக்கு நேரடியாகவே காட்டினார்கள். பட்டினி கிடப்பதும், இரவு முழுவதும் தூங்காமல் நிற்பதும் மார்க்கம் கேட்பது அல்ல; இறைவனுக்கும், தமக்கும், குடும்பத்தாருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவிகிதமாகச் செய்வதே உண்மையான பக்தி என்பதை அவர்கள் செயலால் உணர்த்தினார்கள்.

நம்மில் பலரும் மார்க்கத்தில் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், உடலையோ குடும்பத்தையோ புறக்கணித்துவிடுகிறோம். ஆனால், ஓய்வெடுக்கும் உடலும், நேரம் செலவிடும் குடும்பமும் கூட இறைவனுக்கான கடமையின் ஒரு பகுதியே. அளவோடு வாழ்வதே நபிவழி என்பதை இந்தச் சம்பவம் நமக்கு நினைவூட்டுகிறது.