பூமி ஏன் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கிறது?
சைக்கிள் ஓட்டும்போது பெடலை மிதிப்பதை நிறுத்தினால், அது சிறிது தூரம் ஓடி நின்றுவிடும். ஊஞ்சலையும் தொடர்ந்து ஆட்ட நாம் தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால், பூமி தன்னைத்தானே எப்படித் தொடர்ந்து சுற்றுகிறது?
இதற்கான விடையை கலிலியோ கண்டறிந்தார். அவர் ஒரு சோதனையில், ‘V’ வடிவில் அமைக்கப்பட்ட இரண்டு பலகைகளில் ஒரு பந்தை உருட்டிப் பார்த்தார். பந்து ஒரு பலகையில் இருந்து கீழே உருண்டு, அதே உயரத்திற்கு அடுத்த பலகையில் ஏறியது. உராய்வு இல்லாவிட்டால், பந்து தொடர்ந்து மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டே இருக்கும் என்பதை அவர் கண்டார்.
இரண்டாவது பலகையை கிடைமட்டமாக வைத்தால் என்ன ஆகும் என்று கலிலியோ யோசித்தார். உராய்வு விசை மட்டும் இல்லை என்றால், பந்து காலம் காலமாக உருண்டு ஓடிக்கொண்டே இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
இதைத்தான் சடத்துவம் (Inertia) என்கிறோம். நியூட்டனின் முதல் விதியும் இதைத்தான் கூறுகிறது: ஒரு பொருளின் மீது வெளி விசை செயல்படாதவரை, அது ஓய்வு நிலையிலோ அல்லது ஒரே சீரான இயக்க நிலையிலோ இருக்கும்.
விண்வெளியில் உராய்வு விசை இல்லை. அதனால், சுற்றிக்கொண்டிருக்கும் பூமி, வேறு எந்த விசையும் செயல்படாதவரை, அதே சீரான வேகத்தில் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும்.
இறைவன் இந்த உலகத்தைப் படைத்து, அதன் இயக்கத்திற்கு இத்தகைய விதிகளை வகுத்திருப்பது வியப்பளிக்கிறது. இந்த விதிகள் இல்லாவிட்டால், நாம் காணும் சீரான இயக்கம் சாத்தியமில்லை.
ஆதாரம்: இந்து தமிழ் திசை