பறவைகள் வழிதவறாமல் பறப்பது எப்படி?
ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவுக்குப் பறவைகள் வலசை செல்கின்றன. கனடாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பெருங்கடல்களைத் தாண்டி, பல கண்டங்களைத் தாண்டிப் பறவைகள் வலசை போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டு எந்த இடத்துக்குச் சென்றனவோ, அதே இடத்துக்கு அடுத்த ஆண்டும் துல்லியமாகச் செல்கின்றன.
பறவைகள் வழிதவறாமல் வலசை போவது எப்படி என்று பல காலமாகவே ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. சூரியனின் திசையை வைத்துப் பறவைகள் வழி கண்டுபிடிப்பது ஒரு காரணம். ஆனால், பறவைகள் பெரும்பாலும் இரவில்தான் பயணிக்கின்றன. எனவே, சூரியன் மட்டுமே முழுமையான காரணமாக இருக்க முடியாது.
பறவைகளின் அலகில் உள்ள மேக்னடைட் (காந்தப் படிகங்கள்) புவிக் காந்தப்புலத்துடன் இடைவினை புரிந்து திசையைத் தீர்மானிக்கின்றன என்பது இன்னொரு காரணம். ஆனால், பறவைகள் புவிக் காந்தப்புலத்தின் வட தென் முனைகளை உணர்வதில்லை. மாறாக, புவியின் காந்தப்புலச் சாய்வுக்கோணத்தையே (inclination angle) உணர்கின்றன.
இந்தச் சாய்வுக்கோணம் பூமியின் அட்சரேகையைப் (latitude) பொறுத்து மாறுகிறது. நிலநடுக்கோட்டில் காந்தப்புலச் சாய்வுக்கோணம் மேற்பரப்புக்கு இணையாக இருக்கும். வடக்கே அல்லது தெற்கே செல்லச் செல்ல சாய்வுக்கோணம் அதிகமாகி, துருவங்களில் மேற்பரப்புக்குச் செங்குத்தாக இருக்கும். இந்தச் சாய்வுக்கோணத்தை உணர்வதன் மூலம் பறவைகள் எந்த அட்சரேகையில் பயணிக்கிறோம் என்பதை அறிகின்றன.
பறவையின் கண்ணில் உள்ள விழித்திரையில் கிரிப்டோகுரோம் (cryptochrome) என்னும் புரத வேதிப்பொருள் உள்ளது. நீலநிற ஒளி பறவையின் கண்ணில் படும்போது, இந்த கிரிப்டோகுரோம் புரதத்தில் உள்ள இரண்டு மூலக்கூறுகளுக்கு இடையே ஓர் எலக்ட்ரான் தாவுகிறது. இதனால் அவை தீவிர வினைபுரியும் ரேடிக்கல் ஜோடியாக (radical pair) மாறுகின்றன.
இந்த ரேடிக்கல் ஜோடிகள் புவிக் காந்தப்புலத்தை உணர்ந்து, ஒரு குறிப்பிட்ட நிலைக்கு (மூன்று நிலை) மாறுகின்றன. இந்த மூன்று நிலை ரேடிக்கல் ஜோடிகளின் எண்ணிக்கை, பறவை இருக்கும் அட்சரேகையின் காந்தப்புலச் சாய்வுக்கோணத்தைச் சார்ந்தது. இந்த வினைப்பொருள்கள்தான் பறவையின் மூளைக்குத் திசை உணர்வைக் கொண்டுவருகின்றன.
இப்படிப் பறவைகள் வழிதவறாமல் வலசை போவதற்கு, அவற்றின் உடலில் உள்ள குவாண்டம் இயற்பியல் நிகழ்வுகள் உதவுகின்றன. இத்தகைய நுட்பமான அமைப்புகளைக் கொண்ட உயிரினங்களைப் படைத்து, அவற்றின் பயணத்தை ஒழுங்குபடுத்திய இறைவனின் ஆற்றலையும் ஞானத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆதாரம்: இந்து தமிழ் திசை