ஒளிச்சேர்க்கை ஒரு குவாண்டம் நிகழ்வா?
தாவரங்கள் சூரிய ஒளியை வேதி ஆற்றலாக மாற்றும் நிகழ்வுக்கு ஒளிச்சேர்க்கை என்று பெயர். தாவர இலைகளில் குளோரோபிளாஸ்ட் என்ற நுண்ணுறுப்பு உள்ளது. இந்த குளோரோபிளாஸ்ட்டின் உள்ளே தைலகாய்டு என்ற வட்டத்தட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த வட்டத்தட்டுகள் குளோரோபில் என்ற பச்சை நிறமி மூலக்கூறுகளால் ஆனவை. இந்த குளோரோபில் மூலக்கூறுகள்தான் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக (குளுகோஸ்) மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சூரிய ஒளியில் உள்ள போட்டான்கள் (ஆற்றல் துகள்கள்) குளோரோபில் மூலக்கூறை வந்தடையும்போது, அதன் கடைசி ஆற்றல் நிலையில் உள்ள ஒரு எலக்ட்ரானை வெளியே தள்ளுகின்றன. எலக்ட்ரான் வெளியேறுவதால் குளோரோபில் மூலக்கூறில் ஒரு நேர்மின் துளை உருவாகிறது. வெளியேறிய எலக்ட்ரானும் இந்த நேர்மின் துளையும் சேர்ந்து ‘எக்சைட்டான்’ என்ற துகளாக மாறுகின்றன.
இந்த எக்சைட்டான் துகளானது தைலகாய்டில் உள்ள வினைமையம் என்ற பகுதிக்குச் சென்றால் மட்டுமே குளுகோஸ் உருவாகும். ஆனால், எக்சைட்டான் துகளானது வினைமையத்தை கிட்டத்தட்ட நூறு சதவீதம் துல்லியமாக அடைந்து வேதி ஆற்றலை உருவாக்குகிறது. இது குவாண்டம் ஒருங்கிணைவு (quantum coherence) என்ற பண்பின் மூலமே சாத்தியம் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
எக்சைட்டான் துகளானது வினைமையத்திற்குச் செல்லும் பல்வேறு சாத்தியமான பாதைகளை ஒரே நேரத்தில் உணர்ந்து, சரியான பாதையைத் தேர்வுசெய்து துல்லியமாக வினைமையத்தை அடைகிறது. ஒளிச்சேர்க்கை நிகழ்வு 100% திறன்மிக்கச் செயல்பாடாக இருப்பதற்கு இதுவே காரணம்.
ஒளிச்சேர்க்கையை குவாண்டம் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆராய்வதன் மூலம், சூரியப் பலகைகளில் (solar panel) சூரிய ஒளியை இன்னும் திறமையாக மின்னாற்றலாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைய முடியும்.
இறைவன் தனது படைப்பில் எவ்வளவு நுட்பமான அமைப்புகளை வைத்துள்ளான் என்பதை இந்த ஒளிச்சேர்க்கை நிகழ்வு காட்டுகிறது. தாவரங்கள் உயிர்வாழவும், நாம் உணவு பெறவும் இந்தச் செயல்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இறைவனின் ஞானமும் ஆற்றலும் வியக்க வைக்கிறது.
ஆதாரம்: இந்து தமிழ் திசை