நிலவின் ஒரு பக்கத்தை மட்டும் ஏன் நாம் பார்க்கிறோம்?
பூமியில் இருந்து பார்க்கும்போது, நாம் எப்போதும் நிலவின் ஒரே ஒரு பக்கத்தைத்தான் பார்க்கிறோம்.
நிலவின் வடிவங்கள் (அதாவது, பௌர்ணமி, அமாவாசை போன்றவை) மாறினாலும், அதில் உள்ள பள்ளங்களும் மேடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
நிலவில் தெரியும் வெளிச்சமான, இருண்ட பகுதிகள் பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மை நோக்கியே உள்ளன.
பூமியில் வாழ்ந்த எல்லா மனிதர்களும் நிலவின் இதே முகத்தைத்தான் பார்த்துள்ளனர்.
நிலவு தன்னைத்தானே சுற்றுவதில்லை என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். நிலவும் தன்னைத்தானே சுற்றுகிறது.
ஆனால், நிலவு தன்னைத்தானே சுற்றும் வேகமும், பூமியைச் சுற்றும் வேகமும் ஒன்றாக இருப்பதால், நமக்கு அதன் ஒரே பக்கம்தான் தெரிகிறது.
நிலவு ஒரு முறை தன்னைத்தானே சுற்றிக்கொள்ள சுமார் இருபத்தி ஏழு நாட்கள் ஆகும். பூமியை ஒரு முறை சுற்றி வரவும் அதே இருபத்தி ஏழு நாட்கள்தான் ஆகும்.
இதன் காரணமாக, பூமியில் இருந்து பார்க்கும்போது நிலவின் ஒரே பக்கமே தெரிகிறது.
வானியல் அறிஞர்கள் இதை ‘ஓதப் பூட்டப்பட்ட நிலை’ (tidally locked) என்று சொல்கிறார்கள். இதற்கு ‘ஒத்திசைவுச் சுழற்சி’ என்றும் ஒரு பெயர் உண்டு.
சுமார் நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலவு உருவானபோது, அது இப்போது இருப்பதை விட மிக வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தது.
பூமியின் ஈர்ப்பு விசை நிலவின் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஈர்ப்பு விசையால் நிலவில் ஒரு சிறு புடைப்பு (tidal bulge) உருவாகிறது. அதாவது, நிலவு ஒரு சரியான கோளமாக இல்லாமல், சற்று நீளமான வடிவத்தில் இருக்கிறது.
இந்த நீளமான பகுதியின் குவிந்த முனை எப்போதும் பூமியை நோக்கியே இருக்கும்.
தொடக்கக் காலத்தில் நிலவு வேகமாகச் சுற்றியபோது, இந்தப் புடைப்பின் இடம் மாறிக்கொண்டே இருந்தது. இது நிலவின் சுழற்சி வேகத்தைக் குறைத்தது.
முடிவில், நிலவு தன்னைத்தானே சுற்றும் காலமும், பூமியைச் சுற்றும் காலமும் ஒன்றாகச் சமநிலை அடைந்தன. அன்று முதல், நிலவின் ஒரு பாதி எப்போதும் பூமியை நோக்கியே பூட்டப்பட்டுவிட்டது.
எனவே, நிலவின் பாதி முகம்தான் நமக்குத் தெரியும். ஆனாலும், ‘நிலவின் அலைவு’ (lunar libration) என்ற ஒரு நிகழ்வு உண்டு.
பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் சற்று மாறுபடுவதால் இந்த அலைவு ஏற்படுகிறது.
இதனால், நிலவின் மொத்தப் பரப்பில் சுமார் ஐம்பத்தொன்பது சதவிகிதத்தை நாம் காலப்போக்கில் பார்க்க முடிகிறது. மீதமுள்ள நாற்பத்தொரு சதவிகிதம் மட்டுமே முற்றிலும் மறைந்தே இருக்கிறது.
பூமியின் மீதும் நிலவு இதே போன்ற விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால் நிலவு பூமியை விட மிகச் சிறியது என்பதால், பூமியின் சுழற்சியைப் பாதிக்க அதிக நேரம் ஆகும்.
இருந்தாலும், இது ஒரு சிறிய விளைவுதான். நிலவு, பூமியின் சுழற்சியை ஒவ்வொரு ஆண்டும் சுமார் பதினைந்து மைக்ரோ விநாடிகள் (ஒரு விநாடியின் ஒரு மில்லியன் பங்கில் பதினைந்து பங்கு) மெதுவாக்குகிறது.
அதாவது, படிப்படியாக நமது நாள்கள் மிகச் சிறிதளவு நீளமாகிக்கொண்டே வருகின்றன.
நிலவு மட்டும்தானா இப்படிப் பூட்டப்பட்டுள்ளது? இல்லை. நமது சூரியக் குடும்பத்தில் பல நிலாக்கள் இவ்வாறு ஓதப் பூட்டப்பட்டுள்ளன.
உதாரணமாக, செவ்வாய்க் கோளின் நிலவான போபோஸ் (Phobos) ஓதப் பூட்டப்பட்டுள்ளது. அது செவ்வாயைச் சுற்றி வர எட்டு மணி நேரம் மட்டுமே ஆகும். தன்னைத்தானே சுற்றிக்கொள்ளவும் எட்டு மணி நேரமே ஆகும்.
மேலும், புளூட்டோவும் அதன் பெரிய நிலவான சரோனும் ஒன்றுடன் மற்றொன்று ஓதப் பூட்டப்பட்டுள்ளன.
தட்டாமாலை சுற்றிவருபவர்கள் ஒருவர் முகம் மற்றவருக்குத் தெரியும், அதே நேரம் பின் மண்டையைப் பார்க்க முடியாது அல்லவா? அதுபோல, அவை எப்போதும் ஒரே பக்கத்தை ஒன்றுக்கு மற்றொன்று காட்டிக்கொள்கின்றன.
இறைவன் இந்த அண்டத்தை எவ்வளவு துல்லியமாகப் படைத்து, ஒவ்வொரு கோளையும் அதன் சுற்றுப்பாதையில் இயங்கச் செய்திருக்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த ஒழுங்குமுறையில் இறைவனின் ஞானமும் ஆற்றலும் வெளிப்படுகின்றன.
ஆதாரம்: இந்து தமிழ் திசை