டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் பூமி வேகமாகச் சுழன்றதா?
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் பூமியில் வாழ்ந்தபோது, பூமி இப்போது இருப்பதை விட வேகமாகச் சுழன்றதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய ஒரு வருடத்தில் பூமி 365 முறை சுழல்கிறது என்றால், அந்த காலகட்டத்தில் அது சுமார் 372 முறை சுழன்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அப்போது ஒரு நாளின் நீளம் சுமார் 23.5 மணிநேரமாக இருந்திருக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்புகள், சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நத்தையின் ஓட்டை ஆய்வு செய்ததன் மூலம் கிடைத்துள்ளன. இந்தத் தொல்லுயிர் படிமத்தை பலமுறை ஆய்வு செய்த பிறகு, பகல் மற்றும் இரவு நாட்களின் விரிவான பதிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வுகள் ‘ஜர்னல் பேலியோசியனோகிராபி அண்ட் பேலியோகிளைமடாலஜி’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் நீல்ஸ் டி வின்டர், இது புவியியல் வரலாற்றில் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வு, பூமியின் நாட்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்ற ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவு எவ்வாறு உருவானது என்பதைப் பற்றி ஆராய்வதற்கான புதிய வழிகளை இந்த ஆய்வு திறந்துள்ளதாக நீல்ஸ் கூறியுள்ளார்.
ஆதாரம்: விகடன்