“என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?” — “அல்லாஹ்”

ஹதீஸ் சம்பவங்கள்

வாள் தலைக்கு மேலிருந்தபோதும் ஒரே பதில்

أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، فَأَدْرَكَتْهُمُ القَائِلَةُ فِي وَادٍ كَثِيرِ العِضَاهِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقَ النَّاسُ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ سَمُرَةٍ وَعَلَّقَ بِهَا سَيْفَهُ، وَنِمْنَا نَوْمَةً، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، وَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ، فَقَالَ: ” إِنَّ هَذَا اخْتَرَطَ عَلَيَّ سَيْفِي، وَأَنَا نَائِمٌ، فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا، فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: اللَّهُ، – ثَلاَثًا – ” وَلَمْ يُعَاقِبْهُ وَجَلَسَ

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்து நாட்டை நோக்கிப் புனிதப் போருக்குச் சென்றேன். அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பினேன்.

முள் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கில் நாங்கள் வந்துகொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அங்கு தங்கினார்கள். மக்கள் நிழல் தேடிப் பல திசைகளிலும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தின் கீழே தங்கி, தம் வாளை மரத்தில் மாட்டித் தொங்கவிட்டார்கள். நாங்கள் சற்று நேரம் உறங்கினோம். அதற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் கண்விழித்துப் பார்த்தபோது, அவர்களுக்கு அருகே ஒரு கிராமவாசி நின்றிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள், “இவர் நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது என்னுடைய வாளை எனக்கெதிராக உருவினார். நான் கண்விழித்துப் பார்த்தபோது இவரின் கையில் உறையிலிருந்து உருவிய என்னுடைய வாள் இருந்தது. இவர், ‘என்னிடமிருந்து உன்னை யார் காப்பாற்றுவார்?’ என்று கேட்டார். நான் ‘அல்லாஹ்’ என்று கூறினேன்” என்றார்கள்.

அந்தக் கிராமவாசி அங்கேயே அமர்ந்திருந்தும் கூட, அவரை நபி (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் – (புகாரி: 2910)

உயிருக்கு ஆபத்து வந்த அந்த ஒரு நொடியில் நபி (ஸல்) அவர்களின் நாவில் வந்த ஒரே பெயர் “அல்லாஹ்” என்பதுதான். அதுதான் உண்மையான தவக்குல்.