குகையில் சிக்கிய மூவரும் அவர்களின் நற்செயல்களும்

ஹதீஸ் சம்பவங்கள்

நற்செயல்களைக் கூறி இறைவனிடம் கேட்ட மூவர்

انْطَلَقَ ثَلاَثَةُ رَهْطٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ حَتَّى أَوَوْا المَبِيتَ إِلَى غَارٍ، فَدَخَلُوهُ فَانْحَدَرَتْ صَخْرَةٌ مِنَ الجَبَلِ، فَسَدَّتْ عَلَيْهِمُ الغَارَ، فَقَالُوا: إِنَّهُ لاَ يُنْجِيكُمْ مِنْ هَذِهِ الصَّخْرَةِ إِلَّا أَنْ تَدْعُوا اللَّهَ بِصَالِحِ أَعْمَالِكُمْ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: اللَّهُمَّ كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَكُنْتُ لاَ أَغْبِقُ قَبْلَهُمَا أَهْلًا، وَلاَ مَالًا فَنَأَى بِي فِي طَلَبِ شَيْءٍ يَوْمًا، فَلَمْ أُرِحْ عَلَيْهِمَا حَتَّى نَامَا، فَحَلَبْتُ لَهُمَا غَبُوقَهُمَا، فَوَجَدْتُهُمَا نَائِمَيْنِ وَكَرِهْتُ أَنْ أَغْبِقَ قَبْلَهُمَا أَهْلًا أَوْ مَالًا، فَلَبِثْتُ وَالقَدَحُ عَلَى يَدَيَّ، أَنْتَظِرُ اسْتِيقَاظَهُمَا حَتَّى بَرَقَ الفَجْرُ، فَاسْتَيْقَظَا، فَشَرِبَا غَبُوقَهُمَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَفَرِّجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ مِنْ هَذِهِ الصَّخْرَةِ، فَانْفَرَجَتْ شَيْئًا لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ “، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَقَالَ الآخَرُ: اللَّهُمَّ كَانَتْ لِي بِنْتُ عَمٍّ، كَانَتْ أَحَبَّ النَّاسِ إِلَيَّ، فَأَرَدْتُهَا عَنْ نَفْسِهَا، فَامْتَنَعَتْ مِنِّي حَتَّى أَلَمَّتْ بِهَا سَنَةٌ مِنَ السِّنِينَ، فَجَاءَتْنِي، فَأَعْطَيْتُهَا عِشْرِينَ وَمِائَةَ دِينَارٍ عَلَى أَنْ تُخَلِّيَ بَيْنِي وَبَيْنَ نَفْسِهَا، فَفَعَلَتْ حَتَّى إِذَا قَدَرْتُ عَلَيْهَا، قَالَتْ: لاَ أُحِلُّ لَكَ أَنْ تَفُضَّ الخَاتَمَ إِلَّا بِحَقِّهِ، فَتَحَرَّجْتُ مِنَ الوُقُوعِ عَلَيْهَا، فَانْصَرَفْتُ عَنْهَا وَهِيَ أَحَبُّ النَّاسِ إِلَيَّ، وَتَرَكْتُ الذَّهَبَ الَّذِي أَعْطَيْتُهَا، اللَّهُمَّ إِنْ كُنْتُ فَعَلْتُ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ غَيْرَ أَنَّهُمْ لاَ يَسْتَطِيعُونَ الخُرُوجَ مِنْهَا “، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَقَالَ الثَّالِثُ: اللَّهُمَّ إِنِّي اسْتَأْجَرْتُ أُجَرَاءَ، فَأَعْطَيْتُهُمْ أَجْرَهُمْ غَيْرَ رَجُلٍ وَاحِدٍ تَرَكَ الَّذِي لَهُ وَذَهَبَ، فَثَمَّرْتُ أَجْرَهُ حَتَّى كَثُرَتْ مِنْهُ الأَمْوَالُ، فَجَاءَنِي بَعْدَ حِينٍ فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ أَدِّ إِلَيَّ أَجْرِي، فَقُلْتُ لَهُ: كُلُّ مَا تَرَى مِنْ أَجْرِكَ مِنَ الإِبِلِ وَالبَقَرِ وَالغَنَمِ وَالرَّقِيقِ، فَقَالَ: يَا عَبْدَ اللَّهِ لاَ تَسْتَهْزِئُ بِي، فَقُلْتُ: إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ، فَأَخَذَهُ كُلَّهُ، فَاسْتَاقَهُ، فَلَمْ يَتْرُكْ مِنْهُ شَيْئًا، اللَّهُمَّ فَإِنْ كُنْتُ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ عَنَّا مَا نَحْنُ فِيهِ، فَانْفَرَجَتِ الصَّخْرَةُ، فَخَرَجُوا يَمْشُونَ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் ஒன்றாக நடந்து சென்றனர். இறுதியில் மலையில் இருந்த குகை ஒன்றில் இரவைக் கழிப்பதற்காகத் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அதில் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறை ஒன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது.

அப்போது அவர்கள், “நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது” என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் கறந்து கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை. ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என் தாயும் தந்தையும் உறங்கிவிட்டிருந்ததைக் கண்டேன். அவர்களுக்குக் கொடுப்பதற்கு முன் மற்றவர்களுக்குக் கொடுப்பதை நான் விரும்பாததால், அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று” எனக் கூறினார். உடனே, அவர்களால் வெளியேற முடியாத அளவுக்குப் பாறை சற்று விலகியது.

மற்றொருவர், “இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது அவள் என்னிடம் வந்தாள். நான் அவளை அடைந்திட வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்றி இருபது தங்கக் காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை நான் வசப்படுத்திவிட்டபோது, ‘முத்திரையை அதற்கான உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்’ என்று அவள் கூறினாள். உடனே, அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அந்தப் பாவத்திலிருந்து விலகி அவளைவிட்டுத் திரும்பிவிட்டேன்; நான் கொடுத்த தங்க நாணயத்தையும் அவளிடமே விட்டுவிட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால், இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று” எனக் கூறினார். பாறை மேலும் விலகியது; ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், “இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியைக் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை வாங்காமல் விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில், சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்’ என்று கூறினார். நான், ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்’ என்றார். ‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை’ என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால், இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று” எனக் கூறினார்.

பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் – (புகாரி: 2272)

பெற்றோருக்கு முன்னுரிமை கொடுத்தது, பாவத்தை நெருங்கிய இடத்திலேயே விட்டுவிட்டு விலகியது, பிறருடைய உரிமையை நேர்மையாகத் திருப்பிக் கொடுத்தது — இப்படி யாருக்கும் தெரியாமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட்ட நற்செயல்கள்தாம், நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்குக் கைகொடுத்தன.