மறுமைக்காக என்ன தயார் செய்துள்ளாய் என நபி (ஸல்) கேட்டதற்கு அந்த மனிதர் சொன்ன பதில்

ஹதீஸ் சம்பவங்கள்

“நீ நேசித்தவர்களுடன்தான் இருப்பாய்” என்றார்கள் நபி (ஸல்)

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: «وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ؟» قَالَ: حُبَّ اللهِ وَرَسُولِهِ، قَالَ: «فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا، بَعْدَ الْإِسْلَامِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ اللهَ وَرَسُولَهُ، وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ، وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ.

– حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَنَسٍ: فَأَنَا أُحِبُّ وَمَا بَعْدَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமைக்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்துவைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் கொண்ட அன்பை” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால், நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால், நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமை யில்) நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இதைப் போன்று நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் நான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களுடைய நற்செயல்கள் அளவுக்கு நான் நற்செயல்கள் புரியாவிட்டாலும் சரியே!

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்… நேசிக்கிறேன்” என்பதும் அதற்குப் பின்னுள்ளதும் இடம் பெறவில்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5141)

மறுமைக்காக என்ன தயார் செய்திருக்கிறாய் என்று கேட்கப்பட்டபோது, அந்த மனிதரிடம் பெரிய நற்செயல்களின் பட்டியல் எதுவும் இருக்கவில்லை; அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும் கொண்ட அன்பு மட்டுமே அவரிடம் இருந்தது. நம் செயல்கள் குறைவாக இருக்கலாம் என்று கவலைப்படுபவர்களுக்கு, உண்மையான அன்பும் விசுவாசமும் எவ்வளவு மதிப்புள்ளவை என்பதை இது உணர்த்துகிறது.

தாம் நேசிப்பவர்களின் நற்செயல்களுக்கு நிகராக தம்மால் செயல்பட முடியாவிட்டாலும், அவர்களை நேசித்த காரணத்தால் அவர்களுடன் இருக்க முடியும் என்று அனஸ் (ரலி) அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். நல்லவர்களை நேசிப்பதும், அவர்களது வழியைப் பின்பற்ற முயல்வதும் நமக்கும் ஒரு நம்பிக்கையைத் தருகிறது.