ஏழை முஹாஜிர் அல்லவா நாம் என்று கேட்டவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) சொன்னது
“மனைவியும் வீடும் இருந்தால் நீர் செல்வர்களில் ஒருவர்” என்றார்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَسَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: أَلَسْنَا مِنْ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: «أَلَكَ امْرَأَةٌ تَأْوِي إِلَيْهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «أَلَكَ مَسْكَنٌ تَسْكُنُهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَنْتَ مِنَ الْأَغْنِيَاءِ»، قَالَ: فَإِنَّ لِي خَادِمًا، قَالَ: «فَأَنْتَ مِنَ الْمُلُوكِ»
– قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَجَاءَ ثَلَاثَةُ نَفَرٍ إِلَى عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، وَأَنَا عِنْدَهُ، فَقَالُوا: يَا أَبَا مُحَمَّدٍ إِنَّا، وَاللهِ مَا نَقْدِرُ عَلَى شَيْءٍ، لَا نَفَقَةٍ، وَلَا دَابَّةٍ، وَلَا مَتَاعٍ، فَقَالَ لَهُمْ: مَا شِئْتُمْ، إِنْ شِئْتُمْ رَجَعْتُمْ إِلَيْنَا فَأَعْطَيْنَاكُمْ مَا يَسَّرَ اللهُ لَكُمْ، وَإِنْ شِئْتُمْ ذَكَرْنَا أَمْرَكُمْ لِلسُّلْطَانِ، وَإِنْ شِئْتُمْ صَبَرْتُمْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ فُقَرَاءَ الْمُهَاجِرِينَ يَسْبِقُونَ الْأَغْنِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الْجَنَّةِ، بِأَرْبَعِينَ خَرِيفًا» قَالُوا: فَإِنَّا نَصْبِرُ، لَا نَسْأَلُ شَيْئًا
அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?”என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?”என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “ஆம் (இருக்கிறாள்)” என்றார். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?” என்று கேட்டார்கள். அந்த மனிதர் “ஆம் (இருக்கிறது)” என்றார்.
“அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவர் ஆவீர்” என்று கூறினார்கள். அந்த மனிதர் “இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்” என்றார். “அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்” என்றார்கள். – அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), “அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை.
எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை” என்று கூறினர். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்” என்று கூறியதைக் கேட்டுள்ளேன்” என்றார்கள். அதற்கு அவர்கள் (மூவரும்), “அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்”என்று கூறினர்.
அறிவிப்பவர்: அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்)
நூல் – (முஸ்லிம்: 5699) ➚
தான் ஏழை என்று குறை சொன்ன அந்த மனிதரிடம், மனைவியும் தங்குமிடமும் இருக்கிறதா என்று மட்டுமே கேட்டு, அவற்றை வைத்தே அவரை செல்வர் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அழைத்தார்கள். நமக்கு ஏற்கெனவே கிடைத்திருப்பவற்றைக் கணக்கில் கொள்ளாமல், இல்லாதவற்றை மட்டுமே பார்த்துக் குறை சொல்வது நம் பழக்கமாக மாறிவிடக் கூடாது என்பதை இது நினைவூட்டுகிறது.
உதவி பெறலாம், ஆட்சியாளரிடம் முறையிடலாம், அல்லது பொறுமையாக இருக்கலாம் என மூன்று வாய்ப்புகள் தரப்பட்டபோதும், அந்த மூவரும் எதையும் கேட்காமல் பொறுமையையே தேர்ந்தெடுத்தனர். நமக்கு உண்மையிலேயே தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கும்போது, கண்ணியத்துடன் பொறுமையைத் தேர்ந்தெடுப்பதே சிறந்த வழி என்பதை அவர்களது முடிவு நமக்குக் காட்டுகிறது.