“ஆண்களே எடுத்துச் சென்றுவிடுகிறார்கள்” என்ற பெண்ணுக்குப் பாடம் நடத்திய நபி

ஹதீஸ் சம்பவங்கள்

“இரண்டு பிள்ளைகளை இழந்தாலுமா?” என மும்முறை கேட்ட பெண்ணுக்கு, “ஆம்” என மும்முறை பதிலளித்த நபி

جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ، تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللهُ، قَالَ: «اجْتَمِعْنَ يَوْمَ كَذَا وَكَذَا» فَاجْتَمَعْنَ، فَأَتَاهُنَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللهُ، ثُمَّ قَالَ: «مَا مِنْكُنَّ مِنِ امْرَأَةٍ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا، مِنْ وَلَدِهَا ثَلَاثَةً، إِلَّا كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ» فَقَالَتِ امْرَأَةٌ: وَاثْنَيْنِ، وَاثْنَيْنِ، وَاثْنَيْنِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاثْنَيْنِ، وَاثْنَيْنِ، وَاثْنَيْنِ»

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே (அந்த வாய்ப்புகளைத்) தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவே,எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். அந்நாளில் நாங்கள் தங்களிடம் வருகிறோம். அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன இன்ன நாளில் நீங்கள் ஒன்று கூடுங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடினர். அந்த நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் சென்று தமக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அப்பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். (ஒரு நாள்), “உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் பிள்ளைகளில் மூன்று பேரை இழந்துவிடுகிறாரோ அவருக்கு அப்பிள்ளைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், “இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?

இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா? இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலுமா?” என்று (மூன்றுமுறை திரும்பத்திரும்பக்) கேட்க, “இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும்தான்; இரண்டு பிள்ளைகளை இழந்துவிட்டாலும் தான்” என்று (மும்முறை) நபியவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் – (முஸ்லிம்: 5130)

நபியவர்களின் அறிவுரைகளை ஆண்கள் மட்டுமே அதிகம் கேட்டுப் பயன்பெறுவதைக் கண்ட ஒரு பெண்மணி, தயங்காமல் நேரடியாகக் கேட்டார் — எங்களுக்கென ஒரு நாளைத் தாருங்கள் என்று. நபி (ஸல்) அவர்கள் அதை ஏளனமாக ஒதுக்கவில்லை; உடனே ஒரு நாளை நிர்ணயித்து, தாமே சென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். கேட்பதற்குத் தயங்காத அந்தப் பெண்ணின் துணிவும், மறுக்காமல் நேரம் ஒதுக்கிய நபியின் பண்பும் இணைந்ததுதான் இந்தச் சம்பவத்தின் அழகு.

மூன்று பிள்ளைகளை இழந்தால் நரகிலிருந்து காக்கும் திரையாக மாறுவார்கள் எனக் கேட்டதும், ஓர் அம்மையார் தயங்காமல் மும்முறை மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டார் — இரண்டானாலும் அதே பலனா என்று. அவருடைய கேள்வியில் இருந்தது அவநம்பிக்கை அல்ல, தன் இழப்பையும் இறைவனின் அருளையும் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கை. துயரத்தில் இருப்பவர்கள் இப்படிக் கேள்வி கேட்பதில் தவறில்லை; பதில் தேடுவதே நம்பிக்கையின் அடையாளம்.