படைப்பு முடிந்ததும் எழுந்து நின்ற “உறவு” — அல்லாஹ்விடம் அது பெற்ற உறுதிமொழி
“உன்னைப் பேணுபவனுடன் நான் பேணுவேன்; உன்னைத் துண்டிப்பவனை நான் துண்டிப்பேன்”
إِنَّ اللهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْهُمْ قَامَتِ الرَّحِمُ، فَقَالَتْ: هَذَا مَقَامُ الْعَائِذِ مِنَ الْقَطِيعَةِ، قَالَ: نَعَمْ، أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى، قَالَ: فَذَاكِ لَكِ ” ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَءُوا إِنْ شِئْتُمْ: {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ، أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ، أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا} [محمد: 23]
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது “உறவு” எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) “(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்” என்று கூறி (மன்றாடி)யது. அல்லாஹ், “ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?”
என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம் (திருப்தியே) என் இறைவா!” என்று கூறியது. அல்லாஹ், “அது உனக்காக நடக்கும்” என்று சொன்னான் என்றார்கள். பிறகு, “நீங்கள் விரும்பினால் “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?” (47:22-24➚) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4994) ➚
படைப்பினங்கள் அனைத்தும் படைக்கப்பட்டு முடிந்தபோது, உறவே தானாக எழுந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியது, குடும்ப உறவு எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதைக் காட்டுகிறது. இது வெறும் சமூக மரியாதை அல்ல; அல்லாஹ் நேரடியாகப் பொறுப்பேற்ற ஓர் உடன்படிக்கை.
உறவைப் பேணுபவனுடன் அல்லாஹ் நல்முறையில் நடப்பான்; துண்டிப்பவனையும் அவனே துண்டிப்பான் என்பது நமக்கு எச்சரிக்கை. இன்று நாம் புறக்கணிக்கும் உறவுகள் ஒவ்வொன்றும் நாளை நம் மேல் சாட்சியாக நிற்கும் என்பதை நினைவில் கொண்டு, முறிந்த உறவுகளை இன்றே இணைக்க முயலவேண்டும்.