தன் மகனின் ஜனாஸாவில் நாற்பது பேர் உண்டா என வினவிய இப்னு அப்பாஸ் (ரலி)
“அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் தொழுதால் பரிந்துரை ஏற்கப்படும்” என்றார்கள் நபி (ஸல்)
أَنَّهُ مَاتَ ابْنٌ لَهُ بِقُدَيْدٍ – أَوْ بِعُسْفَانَ – فَقَالَ: يَا كُرَيْبُ، انْظُرْ مَا اجْتَمَعَ لَهُ مِنَ النَّاسِ، قَالَ: فَخَرَجْتُ، فَإِذَا نَاسٌ قَدِ اجْتَمَعُوا لَهُ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ: تَقُولُ هُمْ أَرْبَعُونَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: أَخْرِجُوهُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللهُ فِيهِ»،
وَفِي رِوَايَةِ ابْنِ مَعْرُوفٍ: عَنْ شَرِيكِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் ஒருவர் “குதைத்” அல்லது “உஸ்ஃபான்” எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா, சொல்” என்றார்கள்.
நான் “ஆம்” என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (இறுதித் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)
நூல் – (முஸ்லிம்: 1730) ➚
தன் சொந்த மகனையே இழந்த துயரத்திலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிமொழியை நினைவுகூர்ந்து நாற்பது பேர் கூடியிருக்கிறார்களா என்று விசாரித்தார்கள். மிகக் கடினமான நேரங்களிலும் நாம் கற்றுக்கொண்ட நல்லறிவை மறந்துவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல முன்மாதிரி.
நம்மிடம் எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவரின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொள்வதுகூட, அவருக்காக நாம் செய்யக்கூடிய ஒரு பெரிய உதவியாக மாறுகிறது. செலவேதும் இல்லாமல் இன்னொருவருக்கு நன்மை சேர்க்கும் இந்த வாய்ப்பை, ஜனாஸாத் தொழுகைகளில் தவறாமல் கலந்துகொள்வதன் மூலம் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.