“நம் பேச்சை அல்லாஹ் கேட்கிறானா?” — ஒரு வீட்டுக்குள் எழுந்த சந்தேகம்

ஹதீஸ் சம்பவங்கள்

“சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்” என்று ஒருவர் சொன்னது

كَانَ رَجُلاَنِ مِنْ قُرَيْشٍ وَخَتَنٌ لَهُمَا مِنْ ثَقِيفَ – أَوْ رَجُلاَنِ مِنْ ثَقِيفَ وَخَتَنٌ لَهُمَا مِنْ قُرَيْشٍ – فِي بَيْتٍ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَتُرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ حَدِيثَنَا؟ قَالَ: بَعْضُهُمْ يَسْمَعُ بَعْضَهُ، وَقَالَ بَعْضُهُمْ: لَئِنْ كَانَ يَسْمَعُ بَعْضَهُ لَقَدْ يَسْمَعُ كُلَّهُ، فَأُنْزِلَتْ: {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ} [فصلت: 22] الآيَةَ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களின் மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்’ (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் ‘நம்முடைய பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’

என்று கேட்டார். அவர்களில் ஒருவர், ‘(நம்முடைய பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்’ என்று பதிலளித்தார். மற்றொருவர் ‘நம்முடைய பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்’ என்று கூறினார். அப்போதுதான், ‘(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை’ எனும் இந்த வசனம் (அல்குர்ஆன்: 41:22)➚ அருளப்பெற்றது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் – (புகாரி: 4816)

இம்மூவரும் அல்லாஹ்வைப் பற்றிய தங்கள் சந்தேகத்தை வெளியில் அல்ல, ஒரு வீட்டுக்குள் தனித்திருந்தபோதே பேசினார்கள். ஒருவரின் உண்மையான நம்பிக்கை வெளிப்படுவது பொதுவில் அல்ல, யாரும் பார்க்காத தனிமையில்தான் என்பதை இச்சம்பவம் காட்டுகிறது.

அவர்களின் சந்தேகத்திற்குப் பதிலாக அப்போதே இறைவசனம் இறங்கியது நமக்கு ஒரு எச்சரிக்கை — நம் வெளிப்படையான செயல்கள் மட்டுமல்ல, நம் மனதுக்குள் எழும் எண்ணங்களும் அல்லாஹ்விடமிருந்து மறைவானவை அல்ல என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.