பஹ்ரைன் நிலத்தைத் தனியே பெற மறுத்த அன்சாரிகள் — “குறைஷிகளுக்கும் எழுதுங்கள்”
“எனக்குப் பின் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள்; தடாகத்தில் என்னைச் சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்”
دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ لِيَكْتُبَ لَهُمْ بِالْبَحْرَيْنِ، فَقَالُوا: لاَ وَاللَّهِ حَتَّى تَكْتُبَ لِإِخْوَانِنَا مِنْ قُرَيْشٍ بِمِثْلِهَا، فَقَالَ: «ذَاكَ لَهُمْ مَا شَاءَ اللَّهُ عَلَى ذَلِكَ»، يَقُولُونَ لَهُ، قَالَ: «فَإِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الحَوْضِ»
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளை, அவர்களுக்கு பஹ்ரைனின் நிலங்களை வருவாய் மானியமாக எழுதித் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் குறைஷிச் சகோதரர்களுக்கும் இதே போன்று எழுதித் தரும் வரை நாங்கள் (இவற்றை) ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘அது குறைஷிகளுக்குக் கிடைக்கும்; அல்லாஹ் அதை விரும்பும் பட்சத்தில்’ என்று கூறினார்கள். குறைஷிகளுக்கும் எழுதித் தரும்படி அன்சாரிகள் (தொடர்ந்து) வற்புறுத்திக் கூறினார்கள்.
அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே) உங்களை விடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே, (மறுமையில், எனக்குச் சொந்தமான) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல் – (புகாரி: 3163) ➚
வருவாய் தானாக வந்து சேர்ந்தபோதும், தம் சகோதரர்களுக்கும் அதே அளவு கிடைக்காத வரை அதை ஏற்க மறுத்தார்கள் அன்சாரிகள். கிடைத்ததை மட்டும் அனுபவித்துவிட்டுப் போகலாம் என்று அவர்கள் நினைக்கவில்லை; தம்முடன் இருப்பவர்களும் சேர்ந்தே உயர வேண்டும் என்பதே அவர்களின் முதல் கவலையாக இருந்தது.
நபி (ஸல்) அவர்களோ, வருங்காலத்தில் மற்றவர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள் என்று முன்கூட்டியே எச்சரித்துவிட்டு, அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள ஒரே வழியைச் சுட்டிக்காட்டினார்கள் — இந்த உலகின் நியாயமின்மையைக் கணக்கில் வைத்துக்கொண்டிராமல், அவர்களைச் சந்திக்கும் அந்த நாளை நோக்கியே பார்வையை வைத்திருப்பது.