“அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்களா?” — அதீ (ரலி)யின் வேட்டைக் கேள்விகள்
இன்னொரு நாய் உடன் கலந்திருந்தால் அதை உண்ணக் கூடாது
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المِعْرَاضِ، فَقَالَ: «إِذَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ، فَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَقَتَلَ فَإِنَّهُ وَقِيذٌ فَلاَ تَأْكُلْ»
فَقُلْتُ: أُرْسِلُ كَلْبِي؟ قَالَ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَكُلْ» قُلْتُ: فَإِنْ أَكَلَ؟ قَالَ: «فَلاَ تَأْكُلْ، فَإِنَّهُ لَمْ يُمْسِكْ عَلَيْكَ، إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ» قُلْتُ: أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ؟ قَالَ: «لاَ تَأْكُلْ، فَإِنَّكَ إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى آخَرَ»
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று கூறினார்கள். நான், ‘என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன்.
(அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள். நான், ‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்…?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.
‘நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்… (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாத்திம் (ரலி)
நூல் – (புகாரி: 5476) ➚
ஒவ்வொரு சிறு சந்தேகத்தையும் அதீ (ரலி) தனித்தனியாகக் கேட்கிறார்கள். உண்ணும் ஒரு வாய் உணவிலும் அனுமதி உண்டா என்று உறுதி செய்யும் இந்தக் கவனமே இறையச்சம்.
பெயர் சொல்லி அனுப்பியது தன் நாய்க்கு; கூட வந்த நாய்க்கு அல்ல — எனவே உண்ணக் கூடாது. அனுமதி எங்கே முடிகிறது என்ற எல்லையை நபி (ஸல்) மயக்கமின்றி வரைந்து காட்டுகிறார்கள்.