இஹ்ராம் அணியாத அபூகதாதா (ரலி) வேட்டையாடிய காட்டுக் கழுதை

ஹதீஸ் சம்பவங்கள்

“உண்ணுங்கள்” என்றார்கள் நபி (ஸல்); கூடியிருந்த அனைவரும் இஹ்ராமில் இருந்தனர்

انْطَلَقَ أَبِي عَامَ الحُدَيْبِيَةِ، فَأَحْرَمَ أَصْحَابُهُ وَلَمْ يُحْرِمْ، وَحُدِّثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ عَدُوًّا يَغْزُوهُ، فَانْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَمَا أَنَا مَعَ أَصْحَابِهِ تَضَحَّكَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَنَظَرْتُ فَإِذَا أَنَا بِحِمَارِ وَحْشٍ، فَحَمَلْتُ عَلَيْهِ، فَطَعَنْتُهُ، فَأَثْبَتُّهُ، وَاسْتَعَنْتُ بِهِمْ فَأَبَوْا أَنْ يُعِينُونِي، فَأَكَلْنَا مِنْ لَحْمِهِ وَخَشِينَا أَنْ نُقْتَطَعَ، فَطَلَبْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْفَعُ فَرَسِي شَأْوًا وَأَسِيرُ شَأْوًا، فَلَقِيتُ رَجُلًا مِنْ بَنِي غِفَارٍ فِي جَوْفِ اللَّيْلِ، قُلْتُ: أَيْنَ تَرَكْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: تَرَكْتُهُ بِتَعْهَنَ، وَهُوَ قَائِلٌ السُّقْيَا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَهْلَكَ يَقْرَءُونَ عَلَيْكَ السَّلاَمَ وَرَحْمَةَ اللَّهِ، إِنَّهُمْ قَدْ خَشُوا أَنْ يُقْتَطَعُوا دُونَكَ فَانْتَظِرْهُمْ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَصَبْتُ حِمَارَ وَحْشٍ، وَعِنْدِي مِنْهُ، فَاضِلَةٌ؟ فَقَالَ لِلْقَوْمِ: «كُلُوا» وَهُمْ مُحْرِمُونَ

அபூகதாதா (ரலி) அறிவித்தார்: நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.

‘அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூ ஃகிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி (ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?’

என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் “ஸுக்யா” எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணிருந்த வேளையில், ‘தஃஹன்’ எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!’ என்றார். (நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும் வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்!

இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!’ என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!’ என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல் – (புகாரி: 1821)

இஹ்ராம் அணிந்திருந்த தோழர்கள் உதவக்கூட மறுத்தார்கள் — சந்தேகம் வந்த இடத்தில் நின்றுவிடுவது நபித்தோழர்களின் பழக்கம்.

நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இரவெல்லாம் குதிரையை ஓட்டித் தேடிச் சென்றார் அபூகதாதா (ரலி). நபியுடன் இருக்கும் நேரம் ஒன்றைக்கூட இழக்கக்கூடாது என்ற அன்பு இதுதான்.