கேட்காமல் வந்த ஊதியத்தை மறுத்தவரிடம் உமர் (ரலி) சொன்னது

ஹதீஸ் சம்பவங்கள்

“வாங்கிக் கொள்ளுங்கள்; தேவையில்லையென்றால் தர்மம் செய்யுங்கள்”

أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ فِي خِلاَفَتِهِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَلَمْ أُحَدَّثْ أَنَّكَ تَلِيَ مِنْ أَعْمَالِ النَّاسِ أَعْمَالًا، فَإِذَا أُعْطِيتَ العُمَالَةَ كَرِهْتَهَا، فَقُلْتُ: بَلَى، فَقَالَ عُمَرُ: فَمَا تُرِيدُ إِلَى ذَلِكَ، قُلْتُ: إِنَّ لِي أَفْرَاسًا وَأَعْبُدًا وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ تَكُونَ عُمَالَتِي صَدَقَةً عَلَى المُسْلِمِينَ، قَالَ عُمَرُ: لاَ تَفْعَلْ، فَإِنِّي كُنْتُ أَرَدْتُ الَّذِي أَرَدْتَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ، فَتَمَوَّلْهُ، وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَإِلَّا فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»

அப்துல்லாஹ் இப்னு சஅதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் ஆட்சிக்காலத்தின்போது சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘நீங்கள் மக்கள் (நலப்) பணிகள் சிலவற்றுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும், அதற்காக ஊதியம் தரப்பட்டால் அதை நீங்கள் வெறுப்பதாகவும் எனக்குத் தகவல் வந்ததே! (உண்மைதானா?)’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன். உமர் (ரலி) அவர்கள், ‘நீங்கள் எந்த நோக்கத்தில் இப்படிச் செய்கிறீர்கள்?’

என்று கேட்க, நான், ‘என்னிடம் பல குதிரைகளும் பல அடிமைகளும் உள்ளனர். நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன். எனவே, என் ஊதியம் முஸ்லிம்களுக்கு தர்மமாக இருக்கட்டும் என்று விரும்புகிறேன்’ என்று பதிலளித்தேன். உமர் (ரலி) கூறினார்: அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் விரும்பியபடியே நானும் விரும்பிவந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு (மக்கள் நல நிதியிலிருந்து) நன்கொடை வழங்குவார்கள். நான், ‘என்னை விட அதிகத் தேவை உடையோருக்கு இதைக் கொடுங்கள்’ என்று சொல்லிவந்தேன்.

இறுதியில் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், (நன்கொடைப்) பொருள் ஒன்றை எனக்கு அளித்தபோது, நான், ‘என்னைவிட அதிகத் தேவை உடையோருக்கு இதை வழங்குங்கள்’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘(முதலில்) இதை வாங்கி உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு, (தேவைப்படவில்லையென்றால்,) தர்மம் செய்துவிடுங்கள். இச்செல்வத்திலிருந்து எது நீங்கள் எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களுக்கு வந்ததோ அதை (மறுக்காமல்) வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் வரவில்லையென்றால் நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு சஅதீ (ரஹ்)

நூல் – (புகாரி: 7163)

தமக்கு வசதி இருப்பதால் ஊதியத்தை மறுத்தவரை உமர் (ரலி) பாராட்டவில்லை; தடுத்தார்கள். ஏனெனில் அதே எண்ணத்தை நபி (ஸல்) அவர்களே அவர்களிடம் திருத்தியிருந்தார்கள்.

எதிர்பார்க்காமல், கேட்காமல் வருவதை மறுப்பது துறவு அல்ல. அதை ஏற்று, தேவையுள்ளவருக்குக் கொடுப்பதே வழி — கையேந்தாமல் இருப்பதும், வந்ததைத் தடுக்காமல் இருப்பதும் இரண்டும் இங்கே ஒன்றாகச் சொல்லப்படுகிறது.