பரீரா (ரலி)யின் விடுதலை — “விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை”

ஹதீஸ் சம்பவங்கள்

“அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை செல்லாது”

إِنَّ بَرِيرَةَ دَخَلَتْ عَلَيْهَا تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَعَلَيْهَا خَمْسَةُ أَوَاقٍ نُجِّمَتْ عَلَيْهَا فِي خَمْسِ سِنِينَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ وَنَفِسَتْ فِيهَا: أَرَأَيْتِ إِنْ عَدَدْتُ لَهُمْ عَدَّةً وَاحِدَةً أَيَبِيعُكِ أَهْلُكِ، فَأُعْتِقَكِ، فَيَكُونَ وَلاَؤُكِ لِي، فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَعَرَضَتْ ذَلِكَ عَلَيْهِمْ، فَقَالُوا: لاَ، إِلَّا أَنْ يَكُونَ لَنَا الوَلاَءُ، قَالَتْ عَائِشَةُ: فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَهُوَ بَاطِلٌ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ»

ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஊக்கியாக்களை- ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே, நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் எஜமானர்களுக்கு) ஒரே முறையில் முழுத்தொகையையும் செலுத்திவிட்டால், உன் எஜமானர்கள் உன்னை எனக்கு விற்றுவிட, நான் உன்னை விடுதலை செய்து உனது வலாவை (வாரிசுரிமையை) நான் அடைந்துக் கொள்ள முடியுமா?

(அதற்கு உன் எஜமானர்கள் சம்மதிப்பார்களா?) நீ என்ன கருதுகிறாய்? என்று கேட்டேன். உடனே பரீரா (ரலி), தன் எஜமானர்களிடம் சென்று எனது நிபந்தனையை அவர்கள் முன் வைத்தார். அதற்கு அவர்கள், இதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே உரியதாக இருக்கும் என்று கூறினார்கள். (இதை அறிந்த) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னிடம் (அவரை) விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு.

ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகள் எல்லாம் விதிக்கின்றர்களே! ஒருவர் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாததாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தக்கதும் உறுதிமிக்கதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் – (புகாரி: 2560)

ஐந்து ஆண்டுத் தவணையில் செலுத்த வேண்டிய தொகையை ஒரே முறையில் செலுத்தி ஒரு மனிதரை விடுதலை செய்ய ஆயிஷா (ரலி) முன்வந்தார்கள். ஒருவரின் சுதந்திரத்தை மீட்பதைவிடப் பெரிய தர்மம் வேறில்லை.

எஜமானர்கள் தங்களுக்குச் சாதகமான ஒரு நிபந்தனையை விதித்தபோது, நபி (ஸல்) அதைச் சட்டப்படி செல்லாது என்று அறுதியிட்டார்கள். மனிதர் ஏற்படுத்தும் நிபந்தனை அல்லாஹ்வின் சட்டத்திற்கு மேலே ஏற முடியாது.