இயேசு கடவுள் இல்லை என்றால் போதகர்கள் அவர் பெயரால் அற்புதம் செய்வது எப்படி ?

மற்றவை: மாற்றுமதத்தோரின் கேள்விகள்

கிறிஸ்தவத்தைத் தழுவிய ஒருவர் எழுப்பிய கேள்வி: இஸ்லாத்தில் இயேசுவை இறைவனின் தூதர் என்று கூறுகிறீர்கள். ஆனால் இயேசுவின் பெயரால் இன்றும் பல்வேறு அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டு வரும்போது அவரை வெறும் தூதர் என்று மட்டும் எவ்வாறு கூற முடியும்? மேலும், எந்த மதத்திலும் இல்லாத ஒரு நல்ல விஷயம் இஸ்லாத்தில் உள்ளது. இஸ்லாத்தைத் தழுவுகிறவர்களை எந்தச் சாதியாக இருந்தாலும் முஸ்லிம் என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறீர்கள். இந்தியாவில் பிற மதங்களில் சாதி வேறுபாடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், இஸ்லாத்தில் மட்டுமே இத்தகைய சமத்துவம் நிலவுகிறது என்பது வரவேற்கத்தக்கது.

இயேசுவைக் கடவுள் என்று ஏற்காமல் இறைவனின் தூதர் என்று கூறும் நிலையில், அவரது பெயரைச் சொல்லி மனித சக்தியால் செய்ய முடியாத பல அதிசயங்கள் இன்றும் நிகழ்த்தப்படுவதால் அவர் கடவுளைப் போலத் தெரிகிறாரே என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இக்கேள்வி கேட்கப்படுகிறது. கிறிஸ்தவ சகோதரர்கள் இதனைத் திறந்த மனதோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

குருடர்கள் பார்க்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் என்ற விளம்பரங்களுடன் சில நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவையெல்லாம் உண்மையிலேயே நடக்கின்றனவா என்றால் நூற்றுக்கு நூறு வீதம் இது தவறான தகவல்; மக்களைத் திசைதிருப்புவதற்காகச் செய்யப்படும் நாடகங்களே இவை. இதில் சந்தேகம் இருந்தால் நேரடியாகச் சோதித்துப் பார்க்கலாம். பார்வை தருவதாகக் கூறுபவர்களிடம், நாம் ஒரு பார்வையற்றவரை அழைத்து வருகிறோம், அவருக்குப் பார்வை கொடுங்கள் என்று கேட்டால் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களே ஒருவரை அழைத்து வந்து பார்வை பெற்றதாகக் காட்டுவார்கள். இதில் பார்வையற்றவராகக் காட்டப்படுபவரே வேறு பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பார்வையற்றவராக வேடமிட்டு வருவதைக் காண முடிகிறது.

கண் தானம் மூலமாகவோ முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமாகவோ ஒருவர் பார்வை பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், தலையில் கை வைத்தவுடனேயே குருடருக்குப் பார்வை கிடைத்துவிடும், செவிடருக்குக் கேட்கும் என்று சொல்வது உண்மையாக இருக்குமானால், அவர்களே பல மருத்துவமனைகளை நடத்தி வர வேண்டிய அவசியம் என்ன? மருத்துவமனைகளே தேவையில்லாமல் அனைவரையும் இவ்வாறே குணப்படுத்தியிருக்கலாமே!

இது தொடர்பாகக் கிறிஸ்தவ மதகுருமார்களோடு நடைபெற்ற ஒரு விவாதத்தில், இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவோம் என்று அவர்கள் வாதிட்டார்கள். அப்போது, அந்த வாசகத்தின் தொடர்ச்சியாக பைபிளில் கூறப்பட்டுள்ள மற்றொன்றையும் முழுமையாகப் படிக்குமாறு கூறினோம். சாவுக்கு ஏதுவான கொடிய விஷத்தைக் குடித்தாலும் அது அவர்களை ஒன்றும் செய்யாது என்று அதில் கூறப்பட்டிருப்பதால், விஷத்தைக் குடித்துக் காட்டி அதை நிரூபிக்குமாறு சவால் விடுத்தோம். ஆனால் அவர்களால் அதைக் குடிக்க முடியவில்லை; பதிலளிக்கவும் முடியவில்லை. இயேசு அவ்வாறு கூறியிருக்க மாட்டார்; மதகுருமார்கள் தங்களின் வசதிக்காக அப்படி எழுதி வைத்துள்ளார்கள் என்பதே உண்மை.

அதேபோன்று, இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக அவர்கள் கூறியபோது, மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறைக்குச் சென்று ஒரு சடலத்தைக் கொண்டு வருகிறோம், அதை உயிர்ப்பித்துக் காட்டுங்கள் என்று சவால் விடுத்தோம். அதையும் அவர்களால் செய்ய முடியவில்லை. குருடருக்குப் பார்வை அளித்ததாகவும், செவிடருக்குக் கேட்க வைத்ததாகவும் கூறியவர்கள் அனைவரும் இறுதியில் மருத்துவமனையில்தான் மரணித்தார்கள்.

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் தமக்கு இருப்பதாக ஒருவர் கூறினால் அது முற்றிலும் பொய்யாகும். உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் ஒருவருக்குச் சற்று கூடுதல் வலிமை இருக்கலாமே தவிர, மனித எல்லைக்கு அப்பாற்பட்ட காரியங்களை யாராலும் செய்ய முடியாது. மனித சக்தியைத் தாண்டிய ஒன்றைச் செய்வதாக யார் கூறினாலும் அவர்களைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அது முஸ்லிமாக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அவர்களின் கூற்று பொய் என்பது நிரூபணமாகிவிடும். ஆனால், அவர்கள் இத்தகைய சோதனைகளுக்கு ஒருபோதும் முன்வர மாட்டார்கள்.

சாதாரண கிறிஸ்தவ மக்களுக்கும் அவர்களது மதகுருமார்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. மதத்தைப் பரப்புவதற்காகப் பொய் சொல்வதில் தவறில்லை என்றே மதகுருமார்களுக்குப் போதிக்கப்படுகிறது. ஒருவருடைய பொய்யினால் கடவுளுக்கு மகிமை கிடைக்குமானால் அவர் பொய்யராகக் கருதப்பட மாட்டார் என்ற கருத்தில் பைபிளில் உள்ள வாசகங்களை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். மதத்தைப் பரப்புவதற்காகவும் ஆட்களைச் சேர்ப்பதற்காகவும் பொய் சொல்லலாம் என்று அவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் இஸ்லாத்தில் மக்களை ஈர்ப்பதற்காகப் பொய் சொல்வதற்கு அடியோடு தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்மையை மட்டுமே உள்ளபடி எடுத்துரைக்க வேண்டும்; அதை விரும்பி ஏற்றுக்கொள்பவர்கள் வரட்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது.

எந்த மதத்தைச் சேர்ந்த சாமியாராக இருந்தாலும் சரி, வெறுங்கையிலிருந்து தங்கமோ வெள்ளியோ எடுப்பதாகக் கூறுவது வெறும் ஏமாற்று வேலையே தவிர வேறில்லை. சாயிபாபா போன்றவர்கள் கையில் மோதிரத்தையோ சங்கிலியையோ வரவழைப்பதாகச் செய்த தந்திரங்கள் அனைத்தும், அவர்கள் அதை எவ்வாறு கைகளில் மறைத்து வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அதிவேகக் கேமராக்கள் மூலம் துல்லியமாக நிரூபித்துக் காட்டப்பட்டுவிட்டன. வெறுங்கையிலிருந்து தங்கத்தை வரவழைக்கும் சக்தி உண்மையாகவே அவர்களுக்கு இருக்குமானால், ஏன் மக்களிடம் காணிக்கையாக ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் கையேந்த வேண்டும்? அவர்களே டன் கணக்கில் தங்கத்தை உண்டாக்கி இந்திய அரசாங்கத்திற்குக் கொடுத்து இந்நாட்டை உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடாக மாற்றியிருக்கலாமே! ஐந்து ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் மக்களிடம் கையேந்தும் இவர்கள் தங்கச் சங்கிலி எடுப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய். ஒரு வித்தைக்காரர் தாம் செய்வது வெறும் தந்திரக் காட்சி என்று நேர்மையாக ஒப்புக்கொள்கிறார்; ஆனால் இந்த மதகுருமார்கள் அந்த வித்தையைத் தெய்வீக அற்புதம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் என்று வாதிடும் எந்த ஒரு மதகுருவையும் எளிய மனித தேவைகளைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க முடியும். இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருக்குமாறு கூறினால் அவர்களால் இருக்க முடியாது. இரண்டு பாட்டில் நீரைக் குடுத்துவிட்டுச் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால் அதற்கும் அவர்களால் முடியாது. உடம்பில் மலத்தையும் சிறுநீரையும் சுமந்துகொண்டு தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதாக எதற்காக மக்களை ஏமாற்ற வேண்டும்? பிற மனிதர்களைப் போலவே அறைந்தால் அவர்களுக்கும் வலிக்கும்; கத்தியால் குத்தினால் காயம்படும். எந்தச் சோதனைக்கு உட்படுத்தினாலும் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

ஆனால் மக்கள் இவர்களின் ஆடை அலங்காரங்களைக் கண்டு ஏமாந்து விடுகிறார்கள். சாதாரண மனிதர்களை விட மாறுபட்ட நீண்ட ஆடைகளையும், வெண்ணிற உடைகளையும் அணிந்து கொண்டு தங்களை ஆன்மீகத்தில் உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். சாதாரண ஏழை மக்களின் வீடுகளில் உணவருந்தாமல் கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே இவர்கள் விருந்து உண்கிறார்கள்.

சுனாமி பேரலை தாக்கி ஜப்பான் போன்ற மிகப்பெரிய பணக்கார நாடே நிலைகுலைந்து பெரும் இழப்பைச் சந்தித்தபோது, இந்தச் சாமியார்கள் தங்களுடைய மந்திர சக்தியினால் ஐந்நூறு டன் தங்கத்தை உண்டாக்கி அந்நாட்டிற்கு அனுப்பி உதவியிருக்கலாமே! அல்லது பாதிக்கப்பட்ட கட்டடங்களைத் தங்கமாக மாற்றி அந்நாட்டை மீட்டெடுத்திருக்கலாமே! துயரமான நேரங்களில் இதுபோன்ற சக்திகளை அவர்களால் ஏன் வெளிப்படுத்த முடிவதில்லை? பணக்காரர்களிடம் வசூல் செய்வதும், மக்களை ஏமாற்றுவதும் மட்டுமே இவர்களின் வேலையாக இருக்கிறது.

கடவுளின் பெயரால் எதையாவது சாதித்துக் காட்டுகிறேன் என்று யார் கூறினாலும் அவர்களால் எதையும் செய்துவிட முடியாது. முஸ்லிம் மதகுருவாக இருந்தாலும், இந்து மதகுருவாக இருந்தாலும், அல்லது கிறித்துவப் பாதிரியாராக இருந்தாலும் எவராலும் இத்தகைய அற்புதங்களைச் செய்ய இயலாது. அவ்வாறு உரிமை கோருபவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை.

மதகுருமார்கள் அனைவரும் சாதாரண மனிதர்களே. மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை கூறுவதே அவர்களது பணியாகும். முஸ்லிம்களைத் தொழுகைக்கு வழிகாட்டலாம், கிறித்தவர்களைக் கர்த்தரை வழிபடச் சொல்லலாம், இந்துக்களைச் சாமியைக் கும்பிடச் சொல்லலாம். இந்த வழிகாட்டலை மட்டுமே மதகுருமார்கள் செய்ய வேண்டுமே தவிர, தங்களைத் தாமே கடவுளைப் போன்ற ஆற்றல் உள்ளவர்களாகக் காட்டிக்கொண்டு ஏமாற்றக் கூடாது.

லிங்கத்தை வரவழைத்துக் காட்டியதாகக் கூறி மக்களைத் தன்பால் ஈர்த்த பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இறுதியில் அவரால் தான் சிறையில் அடைக்கப்பட்டு இறப்பதைத் தடுத்துக்கொள்ள முடிந்ததா? இதுவே எதார்த்தமான உண்மை.

எந்தவொரு மனிதனும் தனக்குத் தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கூறி ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து, மதத்தின் பெயரால் அற்புதம் செய்வதாகக் கூறும் போலிகளை நம்பாமல் இருப்பதே விவேகமாகும்.