டிரெண்டிங்கில் சீரழியும் இஸ்லாமிய சமுதாயம்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

உடலாலும் பொருளாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் தியாகம் செய்த காலம் போய் உடலையும் உடமையையும் இணையதளத்திற்கு விற்று விட்ட காலம் வந்து விட்டது. இறைவனை நித்தம் நித்தமாக நின்று வணங்கிய காலம் போய் நரசத்திற்கு அழைத்துச் செல்லும் திரைக்கு முன்னால் குவியல் குவியலாக நிற்கும் இஸ்லாமியக் கூட்டம். பெருகி விட்டது. மார்க்கத்தை மறவாமல் சொல்லும் இஸ்லாமியர்கள் எங்கே…? கேவலம்! சினிமா பாடலைத் திணறாமல் பாடும் இஸ்லாமியர்கள் இங்கே!

அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர்களைக் காணவில்லை. இம்மார்க்கம் சொல்வது என்ன? இம்மக்கள் செய்வது என்ன?

முழுமையற்ற இஸ்லாமியர்கள்

தன்னை இஸ்லாமியன் என்று பிறரிடத்தில் சொல்லி பொய் கிரீடத்தைச் சூட்டும் வழமை பலரிடத்தில் உண்டு. அதைக் குறித்து இறைவன் தனது ஏட்டில் பதிவிட்டுள்ளான்.

இறைநம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 2:208)➚

இறைநம்பிக்கை கொண்டோரே! என்று அழைத்து இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழையுங்கள் என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும்?

நான் ஒரு இஸ்லாமியன் என்று எவ்வாறு கூறுகிறோமெனில் ஒரு பேனாவை போன்றுதான். ஏனெனில் பேனாவில் மை இருக்கும் வரைத்தான் அதனுடய மதிப்பும் மரியாதையும். மை இல்லையெனில் அப்பேனா கோடி ரூபாயாக இருந்தாலும் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. அதேபோல் தான் இஸ்லாமியன் என்ற பட்டத்திற்கு உகந்த செயல் இல்லையெனில் மையற்ற பேனாவினுடைய தகுதிக்கு ஒருவர் போய் விடுகிறார்.

சீரழியும் இஸ்லாமியர்களின் உற்றத் தோழன்

அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் நேரம் ஒதுக்கி மற்ற முழு நேரத்தையும் தன்னை இஸ்லாமியன் என்று மறந்து அதன் கடமைகளைக் காற்றில் பறக்க விட்டு மூழ்கிக் கிடக்கும் ஒன்று தான் இணையதளம். இந்த இணையதளத்தில் உதவியும்.,கல்வியும் ஏராளம். ஆனால் நாம் பார்க்கும் தீமைகளோ தாராளம். கற்யைப் பேணி பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய இஸ்லாமியப் பெண்கள் இன்றைய இணையதளத்தில் இணைந்து இன்பம் (likes) சம்பாதிக்க வேண்டும் என்று பெண்களின் கேடயமான ஹிஜாபை அணிந்து ஆடலும் பாடலுமாக இணைய தளத்தில் வெளியிட்டு தீமையைச் சம்பாதிக்கும் போலி இஸ்லாமிய பெண்கள் இந்த வசனத்தைப் படிக்கட்டும்.

இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தமது கற்புநெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும்! அவர்கள், (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் வெளிப்படுத்த வேண்டாம்.

(அல்குர்ஆன்: 24:31)➚

சீரழிவதற்கு முதன்மையான காரணமான தீய பார்வையை இம்மார்க்கம் ஒழிக்கின்றது. இன்றைக்கு விபச்சாரம் பல வகைகளாகப் பிரிந்து விட்டது. அதில் ஒன்று தான் chatல் ஆரம்பித்து cheatல் முடிவது ஆகும்.

இத்தகையவர்களுக்கு மத்தியில் மாண்புடனும் மனத் தூய்மையுடனும் கல்வி அறிவுடனும் வாழ்ந்தவர்கள் உண்டு. அத்தகைய அறிவான அரணே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள். அவர்களைப்போல் தீப்பொறியாகக் கிளம்பி பிரச்சாரம் செய்யும் பெண்களே தற்போது அழிந்துவிட்டார்கள் எனலாம். ஆண்களுக்கு முன்னால் பெண்கள் தலை குனியும் காலம் மலை ஏறி, பெண்கள் செய்யும் செயலைக் கண்டு ஆண்கள் தலைகுனியும் சூழல் வந்து விட்டது.

Instagram, facebook, Youtube, snapchat, frd app என பல இணையதளங்களில் இணைந்து தனது முகத்தின் அலங்காரத்தையும் உடலையும் நான்கு சுவற்றுக்குள் மட்டுமின்றி வெட்டவெளியிலும் வெளிப்படுத்தத் தைரியம் உள்ள பெண்களே! ஏன் இம்மார்க்கத்தைக் கடைப்பிடித்து, பிறரிடத்தில் சொல்வதற்குத் தைரியமும் ஆர்வமும் வரவில்லை? அன்னை ஆயிஷா அவர்களின் தைரியத்தைப் பாருங்கள்.

ஆயிஷா (ரலி)

ஆயிஷா (ரலி) அவர்கள், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களின் பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டுசென்று தொழுகை நடத்துமாறு கூறினார்கள். மக்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “எவ்வளவு விரைவாக மக்கள் மறந்துவிடுகின்றனர்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் அல்பைனா (ரலி) அவர்களுக்குப் பள்ளிவாசலில்தான் தொழுகை நடத்தினார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்பாத் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர்

(முஸ்லிம்: 1770)

நபிகளார் செய்த செயலை மக்கள் மறந்த போது அத்தனை ஆண்களுக்கு முன்னால் இம்மார்க்கத்தின் சட்டத்தை ஆணித்தரமாகவும், கவலையுடனும் பிரச்சாரம் செய்த அன்னையாரின் துணிச்சலைப் பாருங்கள்!

குர்ஆனுடனும், ஹதீஸுடனும், மார்க்கச் சொற்பொழிவுடனும், பள்ளிவாசலுடனும் சற்றும் இணையாத இஸ்லாமியனே! மூளை மழுங்கிப் போய், யாரைப் பின்பற்ற வேண்டும் என அறியாதவனே! ரீல்ஸில், டிரெண்டிங்கில் இருக்கும் நபரே எனது தலைவன் என்று சொல்லி மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்களை மறந்த மனிதனே! நாம் எந்த மார்க்கத்தில் இருக்கின்றோம் என்று சிந்தித்தாயா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு, அவருடைய தந்தையையும் அவருடைய பிள்ளையையும்விட நான் மிகவும் நேசத்திற்குரியவனாக ஆகாத வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை உள்ளவர் ஆகமாட்டார்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 14)

அல்லாஹ்வின் தூதரை நீ நேசிக்கிறாயா? என்ற கேள்வி கேட்பதற்கு முன்னால் அல்லாஹ்வின் தூதரைத் தெரியுமா? என்று கேட்கும் நிலை வந்து விட்டது. அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காகவும், இன்பத்தில் திளைப்பதற்காகவும், சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் திரைக்கு முன்னால் நடிக்கும் போலி நடிகளை ஆர்ப்பரித்துக் காதலிக்கும் ரசிகர்களே! உங்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?

உங்கள் பகுதியில் பாதை பதித்தாரா?

தெருவிளக்கு கோளாறைப் பற்றி வினவினாரா?

பொருளாதாரத்தில் உங்களைப் பொருந்திக் கொண்டாரா?

கஷ்டத்தில் ஒட்டி இருக்கும் வயிற்றைப் பட்டி பார்த்தாரா?

இவ்வாறு எதுவுமே செய்யாத இவர்களை சிலாகித்து சித்தரித்துக் காட்டியது இந்த இணையதளம் தான்.

உங்களுக்காக உண்மையாக வாழ்ந்த உன்னத மனிதரை மறந்துவிட்டீர்களா? ஒரு மணி நேரம் அற்ப உலகத்திற்காகப் படிப்பைக் கற்றுத்தரும் ஆசிரியருக்கு மரியாதை தந்து நேசிக்கும் நீ. வாழ்க்கை முழுவதும் வாழக் கற்றுத் தந்த மாமனிதரை மறந்துவிட்டாயா?

மார்க்கத்தைக் குறித்து கடுகளவு சிந்தனை இல்லாதவர்கள்கூட விரும்பும் ஒன்று தான் சொர்க்கம். அதற்குச் செல்ல வேண்டுமெனில் அதற்குத் தகுந்த ஒன்று தான் அல்லாஹ்வின் நேசம். தனது நேசத்தைப் பெற்ற ஒருவரை சுவனத்திற்குள் நுழையச் செய்வான். அந்த நேசத்தை எவ்வாறு பெறுவது என்று நம்மைப் படைத்த இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்புமிக்கவன், நிகரிலா அன்பாளன்” என்று (நபியே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)➚

அழியும் உலகத்திற்காக சாமானியனைச் சார்ந்து இருக்கும் மனிதா! அழிவில்லா உலகத்திற்கு வழிகாட்டிய நாயகனைச் சிந்திக்கவில்லயா?

இணையதளத்தின் விபரீதங்கள்
இசை:

மனக் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் தீர்வு தருகிறேன் என்று இணையதளத்தில் சொல்லும் திசைதான் இந்த இசை.தனது மனக்கவலையை அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கதறாமல் இணையதளத்தில் உள்ள (STATUS, STORY) யில் நான் இந்த இந்த நிலையில் இருக்கிறேன் என்றும், நான் கவலையுடன் இருக்கிறேன் என்று பொதுமக்களுக்கு மார்க்கம் தடுத்த விதத்தில் ஒரு பாடலை வைத்துத் தெரிவிப்பதால் கவலை தணியப் போவதில்லை.

ஆபாசம் நிறைந்த கருத்துகளைக் கொண்ட பாடலை வாய் கூசாமல், திணறாமல் பாடும் இஸ்லாமிய இளைஞர்கள் ஏராளம். இந்நிலையில் குர்ஆனை மொழியும் இஸ்லாமிய இளைஞர்கள் சல்லடை போட்டாலும் சிலர் தான் சிக்குவார்கள். இப்பாடலைக் குறித்து இம்மார்க்கம் எவ்வளவு இழிவாகச் சொல்கிறது என்று தெரியுமா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் விடர் ஈழ் சலத்தால் நிரம்பியிருப்பதை நிரம்பியிருப்பது நன்று.

(புகாரி: 6154)

வல்லோனின் வசனத்தை மறந்து வசையை நோக்கி விரைவதற்கான வசீகரம் என்ன? அது தான் இந்த இணைய தளம்!

மனகவலைக்கு மருந்து மாமறை என்பதை மறந்த மாந்தர்களே!

சுவலை தீர, வலி ஆற இதைக் கேளுங்கள்.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நினைவால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன.

(அல்குர்ஆன்: 13:28)➚

கெட்ட வார்த்தை

நல்லதைப் பேசினால் அவன் நண்பன் இல்லை. தீய வார்த்தையைப் பேசினால் அவனே உற்ற தோழன் என்று இவ்வுலகில் மனிதனின் மூளையை மாற்றியது இந்த இணைய தளம். ஒருவனைச் சிரிக்க வைக்க, முறைக்க வைக்க, உணர்ச்சியைத் தூண்ட வைக்கக் கையில் எடுக்கும் ஒன்றே கெட்ட வார்த்தையாக மாறிவிட்டது. அறிவையும், திறமையையும், வறுமையையும் சார்ந்த காணொலியைக் காணும் மக்களின் எண்ணிக்கை குறைவு. காதலும், காமமும், கேவலமும், ஆபாசமும், ஆடலும், பாடலும் உள்ள காணொலியை விரும்பிக் காணும் மனிதர்கள் நிறைவு.

தீய வார்த்தை பேசினால் இஸ்லாமியன் என்கிற அந்தஸ்திலிருந்து விலகிச் செல்லும் நிலை வந்துவிடும் என்பதைக் கவனத்தில் வைத்து இதைச் சிந்தியுங்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவரது இஸ்லாமே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூமூஸா(ரலி)

(புகாரி: 4)

எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளதான நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளதான பிறப்பு உறுப்பி) ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பாளர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

(புகாரி: 6474)

ஒரு தீய வார்த்தை, மனிதனிற்கு மறுமையில் கைகூடும் வாழ்வை அழித்து விடுகின்றது.

நேரமும் நாமும்

உலகத்தில் பார்க்கும் பொருளை நிரந்தரமாக்க நினைக்கும் மனிதன் நேரத்தை அவ்வாறு கருத முடியாது. ஒரு மனிதனின் வாழ்கையில் நேரம் மிக முக்கியமானது. அதை அவன் பயன்படுத்தும் விதத்தில் தான் வெற்றியும் தோல்வியும் உள்ளது. இதை உணராத பல மாந்தர்கள் இரவு பகலாகக் கண்விழித்துக் காணும் ஒன்றே இணையதளம்.

இப்புவியில் வாழும் மனிதனின் புலம்பல் ஏராளம். அதில் ஒன்று தான் ‘நேரமே இல்லை’ என்று சொல்வது ஆகும். உண்ண, உறங்க, உழைக்க, உணர, உரையாட நேரமே இல்லை என்று சொல்லும் மனிதனுக்கு சல்லிக் காசுக்கு உதவாத, பயனில்லா இணையதளத்தில் தன்னைப் பணயமாக்க பலமடங்கு நேரம் உள்ளதா?

தூக்கத்தையும், ஏக்கத்தையும், இம்மார்கத்தின் ஊக்கத்தையும் மறந்து காலத்தைக் கழித்து, நேரத்தைத் தணித்து வாழ்ந்துவரும் மக்களே! இம்மார்க்கத்தைச் சிந்திக்க நேரம் இல்லையா?

காலத்தைக் குறித்து ஏகன் தனது ஏட்டில் சொல்கிறான்.

காலத்தின்மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 103:1-2)➚

மனிதன் வீணிற்காகவும், விளையாட்டிற் காகவும், பதவிக்காகவும் பணத்திற்காகவும் செய்யும் போக்கத்த சத்தியமாக இவ்வசனத்தில் இறைவனின் சத்தியம் இல்லை. இறைவன் ஒரு விஷயத்தில் சத்தியம் செய்கிறான் என்றால் அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பதற்காகத் தான்.

சில வீடுகளில் இரவு பகலாக, பகல் இரவாக மாறி இருப்பதைப் பார்க்கிறோம். தனது உடலுக்குத் தர வேண்டிய கடமைகளைச் சரியான நேரத்தில் செலுத்த மறந்ததற்கான காரணமே இந்தக் கையடக்க ஷைத்தான் (PHONE) தான். இந்த நிலையில் பயணிப்பவர்கள் இதைப் படிக்கட்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

1. ஆரோக்கியம்,

2. ஓய்வு.

(புகாரி: 6412)

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு மணி நேரமாவது உறங்க வேண்டும் என அறிவியல் உலகம் அறிவிக்கின்றது. இந்த உணர்த்தலை அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் கண்மணி நாயகம் உணர்த்தி விட்டார்கள். நம்மில் பலரின் உடம்பைச் சீராக, வீரியமாக இயங்க செய்யும் ஏகன் கொடுத்த அருளின் கடமையை அவமதிக்கும் விதமாக விழி பிதுங்க விண்ணை ஆய்வு செய்வது போல் வீணாக இரவில் இணையதளத்தில் இணையும் மாந்தர்களே! கேள்வி கணக்கை மறந்துவிட்டீர்களா!

உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின்தொடராதீர்! செவி, பார்வை, உள்ளம் இவை ஒவ்வொன்றும் அதுகுறித்து விசாரிக்கப்படுவதாகும்.

(அல்குர்ஆன்: 17:36)➚

பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்: 102:8)➚

விசாரிக்கும் விசாரணைக்கு விடையில்லை எனில் இவ்வுலகில் வாழ்ந்ததே வீண் என்ற நிலை வந்து விடும். நமக்கு வழங்காத பல அருளை அடையாத. அனுபவிக்காதப் பலரும் உண்டு. உறக்கத்தை உணர்ந்து, அருளை அடைந்து படைத்தவனின் வினாவுக்கு விடையளிப்போம்.

பயனை மறந்து பயணிக்கும் தனம்

இதுவரை நாம் இணையதளத்தின் பாதகத்தையும் அதில் பரவலாக இருக்கும். விபரீதத்தையும் பார்த்தோம். எனினும் முன்பே சொன்னது போல் இணையதளத்தில் உள்ள பயன்கள் ஏராளம். என்றாலும் பலரும் பார்க்கும் வீணும் வெட்கக்கேடுமே தாராளம்.

மார்க்கத்தை மெருகேற்றி ஒளிரச் செய்யவும். மேன்படுத்தவும். பண்படுத்தி மனிதனைப் முட்டாளை மேதையாக்கவும், பல குடும்பதிற்குத் தொழிலாகவும் இத்தகைய இணையதளம் இருப்பதைக் கவனத்தில் வைக்க வேண்டும்.

வாழ்வு முறையையும், வியாபாரத்தையும் பல நடைமுறைகளையும் காலத்திற்குத் தகுந்தவாறு மாற்றிகொள்வது போல் தான் இந்த மார்க்கப் பிரச்சாரமும், மார்க்கத்தைப் பல மேடைகளில் பறைசாற்றி மக்களை வென்றெடுத்த காலம் குறைந்து இணையதளத்தில் இஸ்லாத்தை இலருவான முறையில் எடுத்துரைக்கும் நிலை அதிகரித்து விட்டது. இவ்வாறு இணையதளத்தின் மூலமாக இஸ்லாத்தை இலகுவாக விளங்கும் வண்ணம் ஒரு வழிமுறையைக் காட்டித் தருவதால் இலட்சக்கணக்கான நன்மையை இருந்த இடத்திலேயே பெறும் பாக்கியம் கிட்டும். இதை உணர இதைப் படியுங்கள்!

(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு. அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அவ்வாறு பின்தொடர்ந்த) வர்களின் நன்மையில் எதையும் குறைத்துவிடாது. தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு, அவரைப் பின்தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்துவிடாது.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 5194)

இந்த நபிமொழியை நினைவில் வைத்து நன்மைக்கு வழிகாட்டும் சமூகமாக மாற வேண்டும்.

இணையதளத்தின் முலம் இறையச்சத்தை இழந்து இஸ்லாமியர்களாக வாழும் நிலை வந்து விட்டது. படத்திற்காவும் பாடலுக்காகவும் கண்கலங்கிய மாந்தர்களே!

ஐவேளைத் தொழுகையை விட்டதற்காகக் கண் கலங்கினாயா?

மறுமையை நினைத்துக் கண் கலங்கினாயா?

மண்ணறையை நினைத்துக் கண் கலங்கினாயா?

அவ்வாறு கலங்கிய இறையச்சவாதிகளைப் பற்றி நபிகளார் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் தரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி 1633

இந்த ஹதீஸை உணர்ந்தீர்களா? நமது கண்ணீர் கூட நம்மை நரகிலிருந்து காக்கும் கேடயமாய் உள்ளது. இணையதளத்தில் வரும் ஒரு சில காட்சி நமது உள்ளத்தை வருடியது போல் குர்ஆன் கூறிய ஒரு வசனமாவது நமது உள்ளத்தை வருடியது உண்டா? இறைவன் நம்மைப் பார்த்து எச்சரிக்கையில்…

இந்தச் செய்தியைப் பற்றி நீங்கள் வியப்புறுகிறீர்களா?அழாமல் சிரித்துக் கொண்டிருக்கிறீர்களா?

(அல்குர்ஆன்: 53:59-60)➚

இணையதளத்தில் வீணானவைகள் நமது இறையச்சத்தைச் சீண்டி பார்க்கும்போது நாம் இம்மார்க்கத்தில் உறுதியாக நிலை குத்தி நிற்க வேண்டும். அவ்வாறு இருப்பதன் மூலம் இக்கால கட்டச் சோதனையை வென்று விட முடியும்.

உங்கள் கைகளை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்.

(அல்குர்ஆன்: 2:195)➚

அவர்கள் வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணிப்பார்கள்.

(அல்குர்ஆன்: 28:55)➚

ஆகவே, இறையச்சத்தை இறுகப் பிடித்து இணையதளத்தில் மார்க்கத்தைப் பரப்பி. மானத்தைப் பாதுகாத்து வாழும் சமூகமாக மாற்றி, சொர்க்கத்தில் சுகமாய் நம்மனைவரையும் ஏகன் சங்கமிக்கச் செய்வானாக இன்ஷா அல்லாஹ்.