இரவில் வெளியே சென்ற சவ்தா (ரலி)யை உமர் (ரலி) அடையாளம் கண்டது

ஹதீஸ் சம்பவங்கள்

கையில் எலும்புத்துண்டு இருக்கும்போதே நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தது

خَرَجَتْ سَوْدَةُ بَعْدَمَا ضُرِبَ عَلَيْهَا الْحِجَابُ لِتَقْضِيَ حَاجَتَهَا، وَكَانَتِ امْرَأَةً جَسِيمَةً تَفْرَعُ النِّسَاءَ جِسْمًا، لَا تَخْفَى عَلَى مَنْ يَعْرِفُهَا، فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: يَا سَوْدَةُ، وَاللهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا، فَانْظُرِي كَيْفَ تَخْرُجِينَ، قَالَتْ: فَانْكَفَأَتْ رَاجِعَةً وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي، وَإِنَّهُ لَيَتَعَشَّى وَفِي يَدِهِ عَرْقٌ، فَدَخَلَتْ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ إِنِّي خَرَجْتُ، فَقَالَ لِي عُمَرُ: كَذَا وَكَذَا، قَالَتْ: فَأُوحِيَ إِلَيْهِ، ثُمَّ رُفِعَ عَنْهُ وَإِنَّ الْعَرْقَ فِي يَدِهِ مَا وَضَعَهُ، فَقَالَ: «إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ» وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ، يَفْرَعُ النِّسَاءَ جِسْمُهَا، زَادَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ: فَقَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ

– وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: وَكَانَتِ امْرَأَةً يَفْرَعُ النَّاسَ جِسْمُهَا، قَالَ: وَإِنَّهُ لَيَتَعَشَّى

– وحَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ بِهَذَا الْإِسْنَادِ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பர்தா” அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னர் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (இரவு நேரத்தில்) வெளியே சென்றார்கள். சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமும் (உயரத்துக்கு ஏற்ற) பருமனும் உள்ளவராக இருந்தார்கள். அவரை அறிந்தவர்களுக்கு அவர் (பர்தா அணிந்து சென்றாலும் அவர்) யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களைப் பார்த்து (அறிந்து) விட்டு, “சவ்தாவே!

அல்லாஹ்வின் மீதாணையாக! (பர்தா அணிந்திருந்தாலும்) நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அறிந்து கொள்ளப்படுகிற நிலையில்) எப்படி வெளியே வருகிறீர்கள் என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்” என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கையில் இறைச்சி கலந்த எலும்புத்துண்டு ஒன்று இருந்தது.

சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. பின்னர் அந்நிலை விலக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் அந்த எலும்புத்துண்டு (அப்படியே) இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் “(பெண்களே!)

நீங்கள் உங்கள் (அடிப்படைத்) தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்டவராயிருந்தார்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களது அறிவிப்பில் “அதாவது கழிப்பிடங்களுக்கு(ச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது)” என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல் – (முஸ்லிம்: 4380)

உமர் (ரலி) சொன்னது கடுமையான குற்றச்சாட்டு அல்ல — ஒரு கவனிப்பு. சவ்தா (ரலி) வாதிடவில்லை; உடனே திரும்பி வந்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னார்கள். சொல்ல வேண்டியவரிடம் சொல்வதே சரியான வழி.

அந்தத் தருணத்தின் விவரம் நம்மை நிறுத்துகிறது: வஹீ வந்து முடியும்வரை நபி (ஸல்) அவர்களின் கையில் அந்த எலும்புத்துண்டு அப்படியே இருந்தது; அவர்கள் அதைக் கீழே வைக்கவில்லை. இறைச்செய்தி இறங்கும் நிலையின் கனத்தை அறிவிப்பாளர் ஒரு சிறு விவரத்தால் நமக்குக் காட்டுகிறார்.

பதில் தடையாக வரவில்லை — அனுமதியாக வந்தது: தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு அனுமதி உண்டு. மார்க்கம் பெண்ணின் தேவையை அறியாமல் விதி வகுப்பதில்லை.