கிணறு போன்ற நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட கனவு — இப்னு உமர் (ரலி)
“அப்துல்லாஹ் நல்ல மனிதர்; அவர் இரவில் தொழுதால் நன்றாயிருக்கும்”
كَانَ الرَّجُلُ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا رَأَى رُؤْيَا، قَصَّهَا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَمَنَّيْتُ أَنْ أَرَى رُؤْيَا أَقُصُّهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَكُنْتُ غُلَامًا شَابًّا عَزَبًا، وَكُنْتُ أَنَامُ فِي الْمَسْجِدِ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ مَلَكَيْنِ أَخَذَانِي فَذَهَبَا بِي إِلَى النَّارِ، فَإِذَا هِيَ مَطْوِيَّةٌ كَطَيِّ الْبِئْرِ، وَإِذَا لَهَا قَرْنَانِ كَقَرْنَيِ الْبِئْرِ، وَإِذَا فِيهَا نَاسٌ قَدْ عَرَفْتُهُمْ، فَجَعَلْتُ أَقُولُ: أَعُوذُ بِاللهِ مِنَ النَّارِ، أَعُوذُ بِاللهِ مِنَ النَّارِ، أَعُوذُ بِاللهِ مِنَ النَّارِ، قَالَ فَلَقِيَهُمَا مَلَكٌ فَقَالَ لِي: لَمْ تُرَعْ، فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ، فَقَصَّتْهَا حَفْصَةُ، عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الرَّجُلُ عَبْدُ اللهِ لَوْ كَانَ يُصَلِّي مِنَ اللَّيْلِ» قَالَ سَالِمٌ: فَكَانَ عَبْدُ اللهِ، بَعْدَ ذَلِكَ، لَا يَنَامُ مِنَ اللَّيْلِ إِلَّا قَلِيلًا
– حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُوسَى بْنُ خَالِدٍ، خَتَنُ الْفِرْيَابِيِّ، عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ، وَلَمْ يَكُنْ لِي أَهْلٌ، فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّمَا انْطُلِقَ بِي إِلَى بِئْرٍ، فَذَكَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் ஒரு மனிதர் கனவொன்றைக் கண்டால்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதை விவரித்துச் சொல்வார். அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்துச் சொல்வதற்காகக் கனவொன்றை நானும் காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். (அப்போது) நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் நான் உறங்குவது வழக்கம்.
(ஒரு நாள்) கனவில் இவ்வாறு கண்டேன்: வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்தை நோக்கிக் கொண்டுசென்றார்கள். கிணற்றின் சுற்றுச் சுவரைப் போன்று அதற்குச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரு பக்கங்களிலுமுள்ள கல் தூண்களைப் போன்று இரு தூண்கள் அதற்கும் இருந்தன. அதனுள் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், “நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் கோருகின்றேன்; நரகத்திலிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகின்றேன்” என்று பிரார்த்திக்கலானேன்.
(அப்போது என்னைப் பிடித்துச் சென்ற) அவ்விரு வானவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், “இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்” என்று சொன்னார். நான் இதை (என் சகோதரியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் உமர்) ஒரு நல்ல மனிதர்;அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)” என்று சொன்னார்கள்.
(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் புதல்வர்) சாலிம் (ரஹ்) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்” என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “நான் குடும்பம் (மனைவி, மக்கள்) இல்லாதவனாயிருந்தபோது இரவில் பள்ளிவாசலில் உறங்கிவந்தேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
நூல் – (முஸ்லிம்: 4886) ➚
நபி (ஸல்) அவர்களிடம் சொல்வதற்காகவே ஒரு கனவு காண வேண்டும் என்று ஓர் இளைஞன் ஆசைப்படுகிறான். அந்த ஆசையே அவனை இரவில் பள்ளிவாசலில் உறங்கவைத்தது. நபியின் அருகாமையை விரும்பும் மனம் நடத்தையையே மாற்றிவிடும்.
கண்ட கனவு பயமுறுத்துவதாக இருந்தது — நரகம், வானவர்கள், “நரகிலிருந்து காக்கும்படி கோருகிறேன்” என்ற மும்முறை பிரார்த்தனை. பிறகுதான் வந்தது ஆறுதல்: “இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்.”
நபி (ஸல்) அவர்களின் பதிலில் ஒரு குறையும் ஒரு பாராட்டும் சேர்ந்திருந்தன. அந்த ஒரு வாக்கியம் இப்னு உமர் (ரலி) அவர்களின் வாழ்நாளையே மாற்றியது — அதன் பிறகு இரவில் அவர்கள் மிகக் குறைவாகவே உறங்கினார்கள். திருத்தத்தை அன்பாகச் சொன்னால் அது ஒரு வாழ்க்கையை உருவாக்கும்.