மரணம் முடிவல்ல; பயணத்தின் தொடக்கம்
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
படிப்பு, வேலை, திருமணம், வீடு, பிள்ளைகளின் எதிர்காலம், ஓய்வு காலம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்கும் நாம் திட்டம் போடுகிறோம். ஆனால் நம் வாழ்வில் நூறு சதவீதம் உறுதியாக நடக்கப் போகும் ஒரே நிகழ்வான மரணத்திற்கு மட்டும் எந்தத் திட்டமும் போடுவதில்லை.
இன்று நம் வாட்ஸ்அப் குழுக்களில் ஜனாஸா அறிவிப்பு இல்லாத நாளே இல்லை. அதைப் பார்த்து இன்னாலில்லாஹ் என்று தட்டச்சு செய்து விட்டு, அடுத்த நொடியே அடுத்த வீடியோவுக்கு நகர்ந்து விடுகிறோம். மரணச் செய்திகள் நம்மை எச்சரிக்கும் பாடங்களாக இல்லாமல், கடந்து செல்லும் ஸ்டேட்டஸ்களாக மாறி விட்டது ஏன்?
மரணம் என்பது எல்லாம் அழிந்து போகும் ஒரு முடிவு அல்ல; அது ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கம். அந்தப் பயணத்தின் நிச்சயத்தையும், அதன் படித்தரங்களையும், அதற்கு நாம் தயாராகும் வழியையும் இந்த உரையில் தெரிந்துக் கொள்வோம்.
பணக்காரன், ஏழை, அரசன், ஆண்டி என்ற எந்த வேறுபாடும் பார்க்காத ஒரே நியதி மரணம் தான் என்பதை இறைவன் அறுதியிட்டுக் கூறுகிறான்.
“ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். கியாமத் நாளில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை.”
ஒவ்வோர் உயிரும் என்ற சொல்லில் விதிவிலக்கே இல்லை. நபிமார்களே இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்? இந்த வசனம் மரணத்தோடு நிறுத்தவில்லை; கூலி முழுமையாக வழங்கப்படும் நாள் ஒன்று இருக்கிறது என்றும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகளே தவிர வேறில்லை என்றும் நமக்கு நினைவூட்டுகிறது. வெற்றி என்பது பங்களா கட்டுவதல்ல; நரகத்தை விட்டுத் தூரமாக்கப்பட்டு சொர்க்கம் நுழைவது தான்.
மரணத்தை எவ்வளவு தூரம் தள்ளி வைக்க மனிதன் முயன்றாலும், அது நம் நெஞ்சுக்குள்ளேயே நம்முடன் பயணிக்கிறது.
“”நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!”
நம் நெஞ்சுக்குள் இருக்கும் இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது என்று அறிவியல் கூறுகிறது. நாம் உறங்கும் போதும் அது துடிக்கிறது; ஒரு நொடி கூட நாம் அதற்கு கட்டளை இடுவதில்லை. அதே அறிவியல் இன்னொன்றையும் சொல்கிறது – அந்த இதயம் சில நிமிடங்கள் நின்று விட்டாலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. இயக்குவதும் நம் கையில் இல்லை; நிறுத்தாமல் காப்பதும் நம் கையில் இல்லை.
இதை நாம் செய்திகளில் கண்கூடாகப் பார்க்கிறோம் – உடற்பயிற்சி செய்யும், எந்த நோய் அறிகுறியும் இல்லாத ஆரோக்கியமான இளைஞர்கள் கூட திடீரென இதயத் துடிப்பு நின்று இறந்து போகும் சம்பவங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. காலையில் சாதாரணமாக எழுந்தவர் மாலைக்குள் இல்லாமல் போகலாம். எனவே மரணத்தை விட்டு ஓட எந்த மருத்துவமும், எந்த இளமையும், எந்தச் செல்வமும் உதவாது; அதைச் சந்திக்கத் தயாராவது ஒன்றே வழி.
மரணம் எப்படி இருக்கும் என்று தெரியாது என்று சொல்கிறோம்; ஆனால் அதன் ஒத்திகையை இறைவன் ஒவ்வொரு இரவும் நமக்கு நடத்திக் காட்டுகிறான்.
“உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.”
தூக்கத்தையும் மரணத்தையும் இறைவன் ஒரே வசனத்தில், ஒரே செயலாக – உயிரைக் கைப்பற்றுதல் என்று கூறுகிறான். அறிவியலும் இதை வியந்து பார்க்கிறது – தூக்கத்தில் நம் உணர்வு நின்று விடுகிறது, உடல் அசைவுகள் பெருமளவு அடங்கி விடுகின்றன; நாம் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாத நிலைக்குச் சென்று விடுகிறோம். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் சான்றுகள் உள்ளன என்று வசனமே சொல்கிறது.
ஒவ்வொரு காலையும் நாம் எழுவது இறைவன் நம் உயிரைத் திருப்பித் தருவதால் தான். ஒரு நாள் அந்த உயிர் திருப்பித் தரப்படாது. தினமும் இறந்து தினமும் எழும் நமக்கு, இறுதியாக ஒரு முறை இறந்து மறுமையில் எழுவது ஏன் நம்ப முடியாததாக இருக்கிறது?
அடக்கம் செய்பவர்கள் திரும்பிச் சென்ற பிறகு மண்ணறையில் என்ன நடக்கிறது என்பதை நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்த இடத்திலேயே அமர்ந்து விரிவாகச் சொன்னார்கள்.
خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ، فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ وَلَمَّا يُلْحَدْ، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَلَسْنَا حَوْلَهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِنَا الطَّيْرُ، وَفِي يَدِهِ عُودٌ يَنْكُتُ بِهِ فِي الْأَرْضِ، فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: «اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ» مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا، زَادَ فِي حَدِيثِ جَرِيرٍ «هَاهُنَا» وَقَالَ: ” وَإِنَّهُ لَيَسْمَعُ خَفْقَ نِعَالِهِمْ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ حِينَ يُقَالُ لَهُ: يَا هَذَا، مَنْ رَبُّكَ وَمَا دِينُكَ وَمَنْ نَبِيُّكَ؟ ” قَالَ هَنَّادٌ: قَالَ: ” وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: رَبِّيَ اللَّهُ، فَيَقُولَانِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: دِينِيَ الْإِسْلَامُ، فَيَقُولَانِ لَهُ: مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ ” قَالَ: ” فَيَقُولُ: هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَيَقُولَانِ: وَمَا يُدْرِيكَ؟ فَيَقُولُ: قَرَأْتُ كِتَابَ اللَّهِ فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ «زَادَ فِي حَدِيثِ جَرِيرٍ» فَذَلِكَ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا} [إبراهيم: 27] ” الْآيَةُ – ثُمَّ اتَّفَقَا – قَالَ: ” فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ قَدْ صَدَقَ عَبْدِي، فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ، وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ ” قَالَ: «فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا وَطِيبِهَا» قَالَ: «وَيُفْتَحُ لَهُ فِيهَا مَدَّ بَصَرِهِ» قَالَ: «وَإِنَّ الْكَافِرَ» فَذَكَرَ مَوْتَهُ قَالَ: ” وَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ، وَيَأْتِيهِ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ: لَهُ مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ هَاهْ، لَا أَدْرِي، فَيَقُولَانِ لَهُ: مَا دِينُكَ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ، لَا أَدْرِي، فَيَقُولَانِ: مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ فَيَقُولُ: هَاهْ هَاهْ، لَا أَدْرِي، فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ كَذَبَ، فَأَفْرِشُوهُ مِنَ النَّارِ، وَأَلْبِسُوهُ مِنَ النَّارِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ ” قَالَ: «فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا وَسَمُومِهَا» قَالَ: «وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ» زَادَ فِي حَدِيثِ جَرِيرٍ قَالَ: «ثُمَّ يُقَيَّضُ لَهُ أَعْمَى أَبْكَمُ مَعَهُ مِرْزَبَّةٌ مِنْ حَدِيدٍ لَوْ ضُرِبَ بِهَا جَبَلٌ لَصَارَ تُرَابًا» قَالَ: «فَيَضْرِبُهُ بِهَا ضَرْبَةً يَسْمَعُهَا مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ إِلَّا الثَّقَلَيْنِ فَيَصِيرُ تُرَابًا» قَالَ: «ثُمَّ تُعَادُ فِيهِ الرُّوحُ»
…நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று மையவாடிக்கு வந்தடைந்தோம். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். எங்கள் தலையில் பறவை அமர்ந்தால் எவ்வாறு இருக்குமோ அது போன்று ஆடாமல் அசையாமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள். திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள். மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள்.
அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும், சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். நல்லவரின் உயிர் வெளியேறும் போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மண்ணிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார். அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள்.
அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும். ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லியீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடல் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான்… …ஒரு மனிதர் இறந்து அவர் கப்ரில் வைக்கப்படும் போது, “உங்களிடம் தூதராக அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?’ என்ற ஒரு கேள்வியும் கேட்கப்படும். அப்போது அவர், “அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து அவரை நம்பி உண்மைப் படுத்தினேன்‘ என்று பதில் கூறுவார்…. …இவனுக்கு நெருப்பால் ஆன ஆடையை அணியக் கொடுங்கள். நெருப்பாலான விரிப்பைக் கொடுங்கள். நரகத்தின் வாசலை இவனை நோக்கி திறந்து விடுங்கள் என்று வானிலிருந்து ஒருவர் கூறுவார்.
நரகத்தின் சூடும், ஜவாலையும் அவனிடத்தில் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்ளும் அளவிற்கு மண்ணறை அவனை நெருக்கும். பிறகு கண்பார்வையற்ற வாய் பேசாத ஒருவர் அவனை (வேதனை செய்வதற்காக) நியமிக்கப்படுவார். அவருடன் இரும்பாலான சுத்தியல் இருக்கும். அதைக் கொண்டு மலையை அடித்தால் மலை கூட மண்ணாகிவிடும். ஜின்களையும், மனிதர்களையும் தவிர கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியில் உள்ள அனைத்தும் செவியேற்குமளவுக்கு அந்த சுத்தியலால் அவனை ஒரு அடி அடிப்பார். அவன் மண்ணாகிவிடுவான். மீண்டும் அவனுக்கு ஆன்மா வழங்கப்படும்… அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)
இறை நம்பிக்கையாளனின் உயிர், தோல் பையிலிருந்து நீர் வழிவது போல் இலகுவாக வெளியேறி, சொர்க்கத்து நறுமணத்தில் வைக்கப்பட்டு, வானங்களின் வழியே கண்ணியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மறுத்தவனுக்கோ நெருப்பாலான ஆடை, விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்க்கும் அளவுக்கு நெருக்கும் மண்ணறை, மலையையே பொடியாக்கும் சுத்தியலின் அடி.
இரண்டு பேரும் ஒரே மண்ணில் தான் வைக்கப்படுகிறார்கள்; ஆனால் இருவரின் நிலை எவ்வளவு வேறு! அந்த வித்தியாசத்தை உருவாக்குவது இங்கே நாம் வாழும் வாழ்க்கை தான். கப்ருடைய வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியதை நாம் அன்றாட துஆவாக ஆக்கிக் கொள்ள வேண்டாமா?
இறந்து மண்ணோடு மண்ணாகப் போனவர்களை எப்படி மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற கேள்வி புதிதல்ல; அதற்கான பதிலை இறைவனே தந்திருக்கிறான்.
“மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். “எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?” என்று கேட்கிறான். “முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!”
ஒரு விந்துத் துளியிலிருந்து முழு மனிதனாக நம்மை உருவாக்கியவனுக்கு, மக்கிய எலும்பிலிருந்து மீண்டும் உருவாக்குவது எப்படி சிரமமாக இருக்கும்? முதல் முறை படைத்தவனே மீண்டும் உயிர்ப்பிப்பான் என்பது தான் பதில்.
இதற்கு ஒரு சான்றை நம் உடலுக்குள்ளேயே அறிவியல் காட்டுகிறது – நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்கள் தினமும் இறந்து கொண்டே இருக்கின்றன; அவற்றின் இடத்தில் புதிய செல்களை இறைவன் உருவாக்கிக் கொண்டே இருக்கிறான். சில ஆண்டுகளுக்கு முந்தைய நம் உடல் அல்ல இன்றைய உடல்; நமக்குத் தெரியாமலேயே நம்மை அவன் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறான். தினமும் நம் கண் முன்னே இதைச் செய்பவன், மறுமையில் ஒரு முறை செய்வான் என்பதில் என்ன ஆச்சரியம்?
மரணத் தறுவாயில் ஒவ்வொருவரும் கேட்கப் போகும் ஒரே கோரிக்கை என்ன என்பதை இறைவன் முன்கூட்டியே நமக்குக் காட்டுகிறான்.
“நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசைதிருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நட்டமடைந்தவர்கள். உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.”
கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கக் கூடாதா, தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே என்று மரணத் தறுவாயில் மனிதன் கேட்பான்; ஆனால் தவணை வந்து விட்டால் ஒரு நொடி கூட நீட்டிக்கப்படாது. அந்த மனிதன் கேட்கப் போகும் அவகாசம் தான் இன்று நம் கையில் இருக்கிறது.
வீட்டைப் புதுப்பிக்க, காரை மாற்ற, வெளிநாடு செல்ல வருடக்கணக்கில் சேமிக்கும் நாம், மண்ணறையில் நமக்கு உதவப் போகும் நன்மைகளுக்காக என்ன சேமித்து வைத்திருக்கிறோம்? இன்றிரவே மரணம் வந்து விட்டால் இறைவனிடம் காட்டுவதற்கு நம் கணக்கில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் இடத்தில் தான் மறுமைக்கான தயாரிப்பு தொடங்குகிறது.
மரணம் நிச்சயம்; அதன் நேரம் மட்டுமே நமக்குத் தெரியாது. அது தெரியாமல் இருப்பதே இறைவனின் கருணை – ஏனெனில் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாக எண்ணி நல்லது செய்ய அது நம்மைத் தூண்டுகிறது. இன்று நாம் ஜனாஸாவைத் தூக்கிச் செல்கிறோம்; நாளை நாம் தூக்கிச் செல்லப்படுவோம். அந்த நாளுக்கான தயாரிப்பை இன்றே தொடங்குவோம்.
மரணத்தை அடிக்கடி நினைத்து, மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடி, மறுமையில் வெற்றி பெறும் நல்லடியார்களாக நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.