இருபது நாட்கள் தங்கிய இளைஞர்கள் — வீட்டு நினைவு வந்ததைப் புரிந்துகொண்ட நபி (ஸல்)
“நான் தொழக் கண்டவாறே தொழுங்கள்; திரும்பிச் சென்று உங்கள் வீட்டாருக்குக் கற்பியுங்கள்”
أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا، – وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»
மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னேவிட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள்.
அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்’ என்றார்கள். மேலும், ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்’ என்றார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள்ளேன். சிலவற்றை நினைவில் வைக்கவில்லை.4
அறிவிப்பவர்: மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல் – (புகாரி: 7246) ➚
அவர்கள் கேட்காமலேயே அவர்களின் ஏக்கத்தை நபி (ஸல்) அவர்கள் புரிந்துகொண்டார்கள். மென்மை என்பது வார்த்தையில் அல்ல, கவனிப்பில் இருக்கிறது.
கற்றது தன்னோடு நிற்கக் கூடாது என்பதே அனுப்பப்பட்ட செய்தி. முதல் மாணவர்கள் நம் வீட்டிலேயே இருக்கிறார்கள்.