யூதரின் முகத்தில் அறைந்த அன்சாரி — நபி (ஸல்) அவரைத் திருத்தியது எப்படி?
“இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள்”
جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَجُلًا مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ فِي وَجْهِي، قَالَ: «ادْعُوهُ» فَدَعَوْهُ، قَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِاليَهُودِ، فَسَمِعْتُهُ يَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، فَقُلْتُ: وَعَلَى مُحَمَّدٍ، وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ، قَالَ: «لَا تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلَا أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ»
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?’ என்று கேட்க அவர், ‘இறைத்தூதர் அவர்களே!
நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், ‘மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மதை விடவுமா?’ என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகிறவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன்.
அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியாசனத்தின் (அர்யுன்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது ‘தூர்சீனா’ மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்ற போது) அடைந்த மூர்ச்சைக்கு பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் – (புகாரி: 4638) ➚
நபியன்பினால் செய்த செயலைக்கூட நபி (ஸல்) அவர்களே ஏற்கவில்லை. அன்பு என்ற பெயரில் அநீதி செய்ய அனுமதி இல்லை.
பாதிக்கப்பட்டவர் யூதராக இருந்தும் அவரது புகார் விசாரிக்கப்பட்டது. நீதி மதத்தைப் பார்த்து நிற்பதில்லை.