“தங்களுக்குப் பின் எவரிடமும் நான் எதையும் கேட்கமாட்டேன்” — ஹகீம் (ரலி)
மேல் கை கீழ்க் கையைவிடச் சிறந்தது — அபூபக்ர், உமர் கொடுத்ததையும் மறுத்தவர்
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ لِي: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ، لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَاليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى»، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ العَطَاءَ، فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ، فَقَالَ: يَا مَعْشَرَ المُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ، الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الفَيْءِ، فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (தருமம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் நபி அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகு என்னிடம், ‘ஹகீமே! இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை தாராள மனத்துடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அருள் வளம் (பரக்கத்) வழங்கப்படுகிறது. இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் பாக்கியம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.
மேல் கை, கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! சத்திய மார்க்கத்துடன் தங்களை அனுப்பியவன் மீது ஆணையாக! தங்களுக்குப் பின் எவரிடமும் எதையும் நான் (இந்த) உலகைவிட்டுப் பிரியும் வரை கேட்க மாட்டேன்’ என்று கூறினேன். அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அவர்களை அபூ பக்ர்(ரலி) அன்பளிப்புத் தருவதற்காக அழைத்தார்கள். அவர்களிடமிருந்து எதையும் ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
பிறகு, உமர்(ரலி) அவருக்கு (அன்பளிப்புகள் சிலவற்றைக்) கொடுப்பதற்காக அழைத்தார்கள். அதையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். எனவே, உமர்(ரலி) (மக்களிடையே), ‘முஸ்லிம்களே! இந்த (ஃபய்உ எனும்) வெற்றிச் செல்வங்களிலிருந்து அல்லாஹ் ஒதுக்கிய அவரின் உரிமையை அவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தேன். ஆனால், அதை எடுத்துக் கொள்ள அவர் மறுத்துவிட்டார்’ என்று அறிவித்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த மனிதரிடமும், ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி), தாம் மரணிக்கும் வரை (எதுவும்) கேட்கவில்லை. அல்லாஹ் அவரின் மீது கருணை புரிவானாக!
அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி)
நூல் – (புகாரி: 2750) ➚
“இது பசுமையானது, இனிமையானது” — செல்வத்தைக் குறை சொல்லவில்லை; அதை எடுக்கும் மனநிலையைத்தான் பிரித்துக் காட்டினார்கள்.
ஒரு முறை சொன்ன சொல்லை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார்கள். ஆட்சித் தலைவர்கள் அழைத்தபோதும் மறுத்தார்கள்.